* உலகில் இன்பம் என நினைத்துக் கொண்டிருப்பவை, நிரந்தரமாக இன்பத்தை தராது. அது நாளுக்குநாள் மாறிக்கொண்டுதான் இருக்கும். இன்பமயமாக கனவு காண்பதால், அந்நேரத்தில் மட்டுமே மகிழ்ச்சி இருப்பதாக தோன்றுமே தவிர, உண்மையில் அது இன்பமாக இருக்காது. பேரின்பம் மட்டுமே என்றும் மாறாததாகும். இந்த இன்பம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கிறது. அதனை உள்மனதிலிருந்து வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
* தங்கத்தால் செய்யப்படும் ஆபரணங்களை காணும்போது மனம் மகிழ்கிறது. வேறு உலோகத்தில் செய்யப்பட்டிருந்தால் அதே மகிழ்ச்சி கிடைப்பதில்லை. உண்மையில் மனமானது, ஆபரணத்திற்கு மூலப்பொருளாகிய தங்கத்தை விரும்புகிறதே தவிர, அதன் வடிவத்தை விரும்பவில்லை. இதைப்போலவே உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இறைவன் என்னும் மூலாதாரத்தை மையப்படுத்தியே இருக்கிறது.
* அமைதியாக இருப்பவர்களே எளிதில் வெற்றி காண்கிறார்கள். சிறு விஷயங்களுக்காக கூட சத்தமிடுவதும், வீண் விவாதம் செய்வதும் கூடாது. இதனால் மன நிம்மதி தான் கெடும்.
* ஸ்படிகத்தாலான பொருளை எந்த நிறமுடைய பொருளுக்கு அருகில் வைக்கிறோமோ அந்த நிறத்தை அப்படியே பிரதிபலிக்கும். நிறம் மாறி தெரிவதால், அது தனக்குள் பல நிறங்களை வைத்திருப்பதாக எண்ணக்கூடாது. இதைப் போல்தான் மனிதர்களது மனமும் உடன் பழகுபவர்களின் குணத்தையே பிரதிபலிக்கிறது. ஆகவே, நல்லவர்களுடன் மட்டும் நட்பு கொள்ள வேண்டும்.