* "நாளென் செய்யும் கோளென் செய்யும்?' என்பார்கள். தன்னுடைய சக்தியிலும் முயற்சிக்கான திறமையிலும் நம்பிக்கை உள்ளவர்கள் நாள்பார்க்க வேண்டிய அவசியமில்லை. குருக்ஷத்திரப் போரைத் தொடங்கிய கவுரவர்கள் நாள் பார்த்துக் குறித்தார்கள். கிருஷ்ண பகவான் பாண்டவர்களை நாடி நல்லநேரம் வரும்படி செய்து விட்டார்.
* மனிதன் பிறப்பது, உயிர் காக்கும் அவசர வைத்தியம், முக்கியமான அவசரப் பொறுப்புகளை ஏற்பது போன்றவை நாளுக்காகவும், நேரத்துக்காகவும் காத்திருப்பதில்லை. தன்னுடைய திறமையையும், அதற்குத் துணை நிற்க இறைவனின் அருளையும் தேடிக் கொண்டால் போதும். அதனால் ஓரளவு தயங்குபவர்கள், அந்த தடுமாற்றத்தைச் சமாளிக்க, நாளையும் நேரத்தையும் துணையாகக் கொள்கிறார்கள்.
* வேலைக்காகப் போட்டித் தேர்வு எழுதச் செல்பவர்கள் நல்ல படிப்பு இருந்தாலும், மிடுக்காகத் தோன்ற நல்ல உடையைத் தேடிப் போட்டுக் கொள்வதைப் போலத் தான் இது. தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் துணை இருந்தால் தைரியமாக எந்தப் பொறுப்பையும் எப்போதும் மேற்கொள்ளலாம்.