ஜைனம் எனப்படும் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர். இவர் ஐப்பசி மாத அமாவாசையன்று மோட்சம் பெற்றார். இந்த நினைவுநாளை ஜைனர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். இந்த நாளை 'பரிநிர்வாண மோட்ச தினம்' என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். மகாவீரர் கி.மு. 599ல் பிறந்தவர், வைஷாலி நாட்டு மன்னராக இருந்து துறவியானார். பவபுரி என்ற இடத்தில் கி.மு. 527, அக். 15ல் (ஐப்பசி அமாவாசை திதி) மோட்சம் அடைந்தார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்ய பத்ரபாகு என்பவர் எழுதிய 'கல்பசூத்ரா' என்ற நூலில் இந்தத் தகவல் உள்ளது. சமண இலக்கியமான ஹரிவம்ச புராணத்தை ஜீனசேனர் என்பவர் எழுதினார். இந்நூலில் இந்த திருநாளை 'தீபாலி கயா' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு, 'உடலிலிருந்து ஒளி விடைபெறுவது' என்பதாகும். இதுவே 'தீபாலிகா' என்று மருவியது. 'தீபாலிகா' என்றால் 'தீபம் ஏற்றுதல்' எனப்பொருள்.