எல்லா உயிரும் நம் உயிரே!
அக்டோபர் 29,2010,15:53  IST

தீபாவளியன்று தான்,  மகான் மகாவீரர் மகாநிர்வாணம் (முக்தி) அடைந்தார். இந்த இனியநாளில் அவரது பொன்மொழிகளைக் கேட்போமே!
* எல்லா உயிர்களையும் தன்னுயிராக நேசிக்கப் பழகுங்கள். கொல்லாமை என்னும் நெறி பல வகையான சுகங்களையும் அளிக்க வல்லது. அச்சத்திலிருந்தும் பகையுணர்விலிருந்தும் விடுபட்டவன் எந்த உயிருக்கும் துன்பம் தர விரும்ப மாட்டான்.
* வாய்மை சந்திர மண்டலத்தை விட மிகவும் தூய்மையானது. சூரிய மண்டலத்தைக் காட்டிலும் ஒளி மிக்கதாகும்.
* பிறருக்கு கொடுக்காமல் எந்தப் பொருளையும் உண்ணாதீர்கள். ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரருக்குரி யதை எடுப்பதும் கூடாது.
* எந்தப் பேச்சானது கடினமானதோ, மற்றவருக்கு துன்பம் தருவதோ அப்பேச்சைத் தவிர்ப்பதே நல்லவர்களின் குணமாகும்.
* மனம் விரும்பியதை அடையாவிட்டால் தளர்ந்து போய் விடுதல் கூடாது. வேண்டாத ஆசைகளை மனதில் இருந்து அகற்றிவிடுங்கள்.
* நல்ல விரதம் பூண்ட சாதனையாளர்கள் குறைவாகப் புசிப்பதோடு, அளவாகவே பேசவும் செய்வர்.
* சந்தேக மனப்பான்மை கொண்ட மனிதன் எப்போதும் உயர்வு நிலை பெறுவதில்லை.
* பணத்தை அமிர்தம் என்று நினைத்து தேட முற்படுபவர்கள் பாவச் செயல் மூலம் அதைப் பெறுகிறார்கள். இத்தேடலே அவர்களை மரணவாசலுக்கு அழைத்துச் சென்று விடும்.
* கோபம், பொறாமை, நன்றியின்மை, வீண்பிடிவாதம் ஆகிய குணங்களில் ஒரு குணம் நம்மிடம் இருந்தாலும் நற்குணங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.
* நீங்கள் இல்லறத்தில் இருந்தாலும், துறவறத்தில் இருந்தாலும் ஒழுக்கமில்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை. நற்கதியை அடைய ஒழுக்கமே ஆதாரமாகத் திகழ்கிறது.
* அறவழியில் நடப்பவரைக் கண்டால் அங்கேயே அவரை வணங்குங்கள். நோயாளிக்குச் சேவை செய்வதில் ஆர்வம் கொள்ளுங்கள். பிறரின் நலனுக்காகவும், சுகத்திற்காகவும் பாடுபடுபவன் இறுதியில் தனக்குத் தானே சுகத்தைத் தேடிக் கொண்டவனாவான்.
* ஆறுவகையான பேச்சுக்களைப் பேசக் கூடாது. பொய், கடினத்தன்மை, யோசிக்காத தன்மை, எரிச்சல், திரித்துக்கூறல், சண்டையைத் தூண்டுவது ஆகிய ஆறுவகையான குற்றங்களைக் களைந்து நாம் பேச வேண்டும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X