சவுபாக்கியம் தரும் கனகவல்லி
ஆகஸ்ட் 17,2018,15:07  IST

கடலுார் மாவட்டம் சிங்கிரிகுடி கோயிலில் அருள்பாலிக்கும் கனகவல்லித் தாயாரை வரலட்சுமி பூஜையன்று வழிபட சகல சவுபாக்கியம் உண்டாகும்.
மகாவிஷ்ணுவே பரம்பொருள் என்று பக்த பிரகலாதன் வழிபட்டான். அவனது தந்தையான அசுரன் இரண்யனுக்கு, மகனின் போக்கு பிடிக்கவில்லை. மலையில் இருந்து உருட்டியும், விஷம் கொடுத்தும் மகனை தண்டித்தான். ஆனால் விஷ்ணுவின் அருளால் உயிர் தப்பினான். இறுதியாக துாண் ஒன்றை பிளந்தபடி சிங்க முகத்துடன், மனித உடலுமாக இணைந்து நரசிம்மராக அவதரித்தார் மகாவிஷ்ணு. இரண்யனின் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாக அணிந்தபடி கர்ஜித்தார். அந்த நரசிம்ம பெருமானே இத்தலத்தில் 16 கைகளுடன் மூலவராக அருள்பாலிக்கிறார். மூலவரின் இடது புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். மேலும் வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மரும் கருவறையில் உள்ளனர். இப்படியாக ஒரே இடத்தில் மூன்று நரசிம்மர் இங்கு அருள்பாலிப்பது சிறப்பு. மூலவர் கைகளில் சங்கு, சக்கரம், கத்தி, வில், கதாயுதம், கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவை உள்ளன. மற்ற கைகள் இரணியனை வயிற்றை கிழித்த நிலையில் உள்ளன. உற்ஸவரான பிரகலாதவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இங்கு லட்சுமிதாயார் கனகவல்லித்தாயார் என்ற பெயருடன் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அருள்கிறாள். 'கனகா' என்றால் தங்கம். செல்வத்தையும், சுமங்கலி பாக்கியத்தையும் அருளும் இந்த தாயாருக்கு வெள்ளிக்கிழமையில் நெய் தீபமேற்றி வழிபட்டால் சவுபாக்கியம் உண்டாகும். லட்சுமியின் அம்சமான வில்வமரம் தல விருட்சமாக உள்ளது. திருவிழா காலத்தில் கோயிலின் பின்புறம் உள்ள பத்து துாண் மண்டபத்தில் தாயாருக்கு ஊஞ்சல் உற்ஸவம் நடக்கிறது.
ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் உள்ளது. ராமர், ஆண்டாள், கருடன், விஷ்வக்சேனர், பன்னிரு ஆழ்வார்கள், மணவாள மாமுனி, தும்பிக்கையாழ்வார், விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. அகோபிலம் மடம் 4வது ஜீயரின் பிருந்தாவனம் உள்ளது. ஜமதக்னி, இந்திர, பிருகு, வாமனர், கருடர் என்னும் ஐந்து தீர்த்தங்கள் இங்குள்ளன.
சுமங்கலி பாக்கியம் மட்டுமின்றி கடன் தொல்லை, திருமணத் தடை, குழந்தையின்மை, கிரக தோஷ அகல பக்தர்கள் சுவாதியன்று நரசிம்மர், கனகவல்லித் தாயாருக்கு விளக்கேற்றுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாள், தாயாருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்துகின்றனர். வரலட்சுமி விரதத்தன்று பிரார்த்தனை செய்ய இரட்டிப்பு பலன் உண்டாகும்.

எப்படி செல்வது: கடலுார் - புதுச்சேரி சாலையில் 15 கி.மீ., துாரத்தில் தவளைக்குப்பம். இங்கிருந்து பிரியும் சாலையில் ஒன்றரை கி.மீ., துாரத்தில் கோயில்.
விசேஷ நாட்கள்: நரசிம்ம ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மாசி மகம்
நேரம்: காலை 7:00- மதியம் 12:00 மணி, மாலை 4:30- இரவு 9:00 மணி.
தொடர்புக்கு: 0413- 261 8759, 04142 - 224 328
அருகிலுள்ள தலம்: 21 கி.மீ., துாரத்தில் திருவஹீந்திரபுரம் தேவநாதசுவாமி கோயில்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X