கேளுங்க சொல்கிறோம்!
ஆகஸ்ட் 26,2018,07:20  IST

* மனைவியின் ஆயுள் அதிகரிக்க கணவர் என்ன வழிபாடு செய்யலாம்?
ஆர்.ரமேஷ், சென்னை

இப்படி கேட்பதே மகிழ்ச்சியான விஷயம். விரதமிருப்பது பெண்களுக்கு உரியது என ஆண்கள் கருதுகின்றனர். திருமணத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் ''நீ நீண்ட ஆயுளுடன் வாழ பொரியினால் ஹோமம் செய்கிறேன்'' என மந்திரம் சொல்லி ஹோமம் செய்ததை அனைவரும் உணர வேண்டும். மனைவிக்காக கணவர் திங்களன்றும், கணவனுக்காக மனைவி வெள்ளியன்றும் இஷ்ட தெய்வத்திற்கு விரதமிருக்க அன்பும், ஆயுளும் அதிகரிக்கும்.

* செடி, கொடி, மரம் என தாவரங்கள் ஆன்மிக வாழ்வுக்கு அவசியமானதா?
எஸ்.அமிர்தலிங்கம், கடலுார்

தாவரங்கள் செழித்து உலகம் வளம் பெற வேண்டும் என வேதம் கடவுளை வேண்டுகிறது. கும்பாபிஷேகம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் முளைப்பாரி வைப்பதன் நோக்கம் இதுவே. தாவரம் உணவாக பயன்படுவதோடு நோய் தீர்க்கும் மூலிகையாகவும், யாகத்தில் இடும் திரவியமாகவும் உள்ளன. வில்வம், துளசி, வேம்பு, அருகம்புல், தாமரை என மரம், செடி, கொடி அனைத்தும் ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையே.

தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுவதன் சிறப்பு என்ன?
ப.சாவித்ரி, குறிஞ்சிப்பாடி, கடலுார்

ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேஷ திதி, கிழமை, நட்சத்திரங்கள் உள்ளன. நந்தி வழிபாட்டிற்கு சனி பிரதோஷம் போல பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பானது. பைரவரை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். கிரக தோஷம், சத்ருபயம், மனக்குழப்பம் நீங்கி நிம்மதி நிலைக்கும்.

'சர்வசாதகம்' என சிலரை குறிப்பிடுவதன் பொருள் என்ன?
டி.வி.வாசுதேவன், ராமநாதபுரம்

கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை அமைத்தல், யாகம் நடத்துதல், சுவாமி சிலைகளுக்கு மருந்து சாத்துதல், கோபுர, விமான கலசங்களை சரிபார்த்து வைத்தல், அபிஷேகம், ஆராதனை என எல்லா நிகழ்ச்சிகளும் முறையாக நடத்தப்பட வேண்டும். கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் யாகத்தில் அமர்ந்திருக்க வேண்டியது அவசியம் என்பதால், மேற்படி விஷயங்களை அவர்களின் பிரதிநிதியாக அனுபவமிக்க சிவாச்சாரியார் அல்லது பட்டாசாரியார் ஏற்று நடத்துவர். இவர்களை 'சர்வசாதகம்' என்பர். 'எல்லாவிதத்திலும் உதவுதல்' என்பது இதன் பொருள்.

திருவண்ணாமலை போல மற்ற மலைகளை சுற்றினால் பலனுண்டா?
மணிமாறன், மதுரை

மலை, ஆறுகளை தெய்வங்களாக வழிபடுவது நம் மரபு. பாரத தேசம் முழுவதும் உள்ள மலைகள், ஆறுகளின் புனித தன்மையை புராணம், இதிகாசங்கள் விரிவாக கூறுகின்றன. திருவண்ணாமலை போல எல்லா மலைகளையும் சுற்றி வந்து வழிபட்டால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும். மலை மட்டுமில்லாமல் ஆறு, குளம் போன்ற நீர் ஆதாரங்களை மாசுபடாமல் காப்பதும் புண்ணியம் தான்.

அரசமரம், நாகர் சிலைகளை இரவில் சுற்றக் கூடாதாமே...
வி.ஆர்.நடராஜன், திருமுல்லைவாயில்

பகலில் அரசமரம், தலவிருட்சத்தை சுற்றுதல், புனித தீர்த்தத்தில் நீராடுதல் போன்றவை தெய்வ சக்திகளை மகிழ்ச்சிப்படுத்தும். மாறாக இரவில் செய்ய அசுரசக்திகளை திருப்திபடுத்தும் என்கிறது சாஸ்திரம். மரங்கள் பகலில் பிராண வாயுவையும், இரவில் கரியமில வாயுவையும் வெளியிடுகிறது.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X