உலகளந்த உத்தமர்
ஆகஸ்ட் 26,2018,07:27  IST

ஓணம் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாளைத் தரிசிப்போமா. 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி' என்று ஆண்டாள் திருப்பாவையில் இவரை போற்றியுள்ளார்.
மகாபலி மன்னனை ஆட்கொள்ள, வாமனராக வந்த மகாவிஷ்ணு விஸ்வரூபம் எடுத்தார்.
இக்காட்சியை காண மிருகண்டு என்னும் முனிவர் விரும்பினார். பிரம்மாவின் வழிகாட்டுதலுடன், பூலோகத்தில் தென்பெண்ணை ஆற்றங் கரையில் உள்ள திருக்கோவிலுார் பகுதியில் தவம் புரிந்தார். முனிவரின் மனைவி மித்ராவதியும் உடனிருந்து அன்னதானம் செய்து வந்தார். முனிவரைச் சோதிக்க விரும்பிய மகாவிஷ்ணு வயோதிக அந்தணராக தோன்றி யாசகம் கேட்டார். மிருகண்டு முனிவர் மனைவியிடம் அந்தணருக்கு உணவிட வேண்டினார். ஒரு நெல்மணி கூட இல்லாத நிலையில், கற்பில் சிறந்த மித்ராவதி ஒரு காலி பாத்திரத்தை ஏந்தியபடி மகாவிஷ்ணுவை தியானித்தாள். “நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால் பாத்திரம் நிரம்பட்டும்” என்றாள். இறையருளால் அன்னம் நிரம்பியது. உடனே அந்தணர் வடிவில் வந்த மகாவிஷ்ணு சுயரூபம் காட்டி தரிசனம் அளித்தார். அவரே உலகளந்த பெருமாளாக இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.
மகாவிஷ்ணு வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் ஏந்தியிருப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் முனிவரின் உபசரிப்பால் தன்னை மறந்ததால் வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்தியபடி மாறுபட்ட கோலத்தில் இருக்கிறார். இத்தல பெருமாளுக்கு உலகளந்த பெருமாள், ஆயனார், இடைக்கழி ஆயன் என்றும் பெயருண்டு. மரத்தால் செய்யப்பட்ட இவரது திருமேனி 108 திவ்யதேசங்களில் மிக உயரமானது. கருவறையில் மூலவர் வலது காலால் ஆகாயத்தை அளந்தபடியும், இடது காலை பூமியில் ஊன்றியும் நிற்கிறார். துாக்கிய வலது திருவடிக்கு பிரம்மா தீர்த்த அபிஷேகம் செய்கிறார். கீழே ஊன்றிய இடது திருவடியின் கீழ் மகாபலியின் மகன் நமச்சு மகாராஜா இருக்கிறார். பெருமாளுக்கு அருகில் மகாபலியின் தாத்தா பிரகலாதன், மகாலட்சுமி, மகாபலி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், மிருகண்டு முனிவர், மித்ராவதி, பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், கருடாழ்வார் ஆகியோர் கருவறையில் உள்ளனர். 5 ஏக்கர் பரப்பு கொண்ட கோயிலின் ராஜகோபுரம் 192 அடி. 11 நிலைகள் கொண்ட இக்கோபுரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம். (முதலாவது ஸ்ரீரங்கம், இரண்டாவது ஸ்ரீவில்லிபுத்துார்) பெருமாள் சன்னதிக்கு எதிரில் 40 அடி உயர ஒரே கல்லால் ஆன கருடத்துாண் உள்ளது. மூலவரின் பின்புறம் உள்ள வாமனரை திருவோணத்தன்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். நுழைவு வாயிலின் வலப்புறம் சாளக்கிராம கிருஷ்ணர் இருக்கிறார். இவரை தரிசித்த பின்னரே மூலவரை தரிசிக்க வேண்டும்.

எப்படி செல்வது: விழுப்புரம்- மாம்பழப்பட்டு சாலையில் 40 கி.மீ., துாரத்தில் திருக்கோவிலுார்
விசேஷ நாட்கள்: மாசிமகம், பங்குனியில் பிரம்மோற்ஸவம், வைகுண்ட ஏகாதசி, ஆவணி திருவோணம்
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:00 - 08:30 மணி
தொடர்புக்கு: 98407 46422
அருகிலுள்ள தலம்: 16 கி.மீ., துாரத்தில் ஆதிதிருவரங்கம் ரங்கநாதப்பெருமாள் கோயில்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X