பேசும் தெய்வம்! (30)
ஆகஸ்ட் 26,2018,07:36  IST

வேதங்களில் கரைகண்ட வடநாட்டு யோகி ஒருவர் யாத்திரையாக ராமேஸ்வரம் வந்தார். அவரை வரவேற்ற காரைக்குடி பக்தர்கள் ''சுவாமி... இங்கு சில காலம் தங்கி எங்களுக்கு அருள்புரிய வேண்டும்'' என்றனர். சம்மதித்த அவரும் சிலகாலம் தங்கினார். ஒருநாள் ''இந்த ஊரில் யாராவது ஞான மார்க்கத்தில் ஈடுபாடுள்ள உத்தமர் இருக்கிறாரா?'' எனக் கேட்டார்.
''கல்வி, கேள்வி, ஒழுக்கத்தில் சிறந்த பிள்ளை ஒன்று இருக்கிறது'' என்றனர் பக்தர்கள். முகம் மலர்ந்த யோகி ''அப்படியானால் அந்த உத்தம பிள்ளையை என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்றார்.
பூக்கள், பழங்களுடன் யோகியை காண வந்தார் உத்தமர். உற்றுப் பார்த்த யோகியின் கண்கள் அகல விரிந்தன. கைகளால் அவரை கட்டியணைத்து மகிழ்ந்தார்.
பக்தர்களுக்கு ஏதும் புரியவில்லை. அவர்களிடம் யோகி "அன்பர்களே!. பரம்பொருளான தட்சிணாமூர்த்தியின் அம்சமாக இருந்து வேதம், ஆகமங்களை உலகிற்கு உபதேசிக்கவும், முக்தியில் நாட்டமுள்ளவர்களை கடைத்தேற்றவும் இந்த பிள்ளை உங்களிடம் வந்திருக்கிறது. இந்த உண்மை விரைவில் தெரியவரும்'' என்று சொல்லி ராமேஸ்வரம் புறப்பட்டார் யோகி. அவரது வாக்கின்படியே நாளுக்குநாள் அந்த பிள்ளையிடம் தெய்வீக குணங்கள் வெளிப்பட்டன. அனைவரும் அவரை 'ஆண்டவர்' என்றே அழைத்தனர்.
'சித்தன் போக்கு சிவன் போக்கு' என்னும் நிலையில் ஆண்டவர் வாழ்ந்தார். ஒருநாள் இரவு ஆண்டவர் துாங்கிய போது கனவு கண்டார். சிவகங்கை மாவட்டம் கோவிலுாருக்கு சற்று தொலைவிலுள்ள 'சாளி' என்னும் கிராமத்தில் கோயில் கொண்டிருக்கும் 'அஞ்சாத பெருமாள்' என்னும் அய்யனார் காட்சியளித்தார். சுவாமி தன் முதுகில் கரையான் புற்று வளர்ந்ததைக் காட்டி''இந்நிலையில் நான் இருப்பது தர்மமா? உடனே இதை விசாரித்து என் கோயிலை சீர்படுத்து'' என்று உத்தரவிட்டு மறைந்தார். மறுநாள் பொழுது புலரும் முன் நல்லான்செட்டி என்னும் பக்தரை சந்தித்து "உன் குலதெய்வமாகிய அஞ்சாத பெருமாள் கோயிலுக்கு என்னுடன் வா'' என்று சொல்லி ஆண்டவர் நடந்தார். நல்லானும் மறுப்பு சொல்லாமல் பின் தொடர்ந்தார்.
சூரிய உதிக்கும் நேரத்தில் இருவரும் கோயிலை அடைந்தனர். '' கருவறைக்குள் போய் சுவாமியை பார்'' என்றார் ஆண்டவர். குளிக்காமல் இருந்ததால் நல்லான் கருவறைக்குள் நுழைய அஞ்சினார்.
அதை அறிந்த ஆண்டவர் ''சரி... என்னுடன் வா'' என்று அழைத்துக் கொண்டு கோயிலின் பின்புறம் சென்றார். அங்கு போனதும் காலணி அணிந்த தன் வலதுகாலால் கருவறையின் சுவரை உதைத்தார். சுவர் அப்படியே விழுந்ததும் ''இங்கே பார்! சுவாமியின் முதுகில் கரையான் புற்று கட்டியிருக்கிறது'' என்று கர்ஜித்தார்.
சுவாமி சிலையின் பின்புறம் பெரிய அளவில் கரையான் புற்று படர்ந்திருந்தது. திடுக்கிட்ட நல்லான் ''சுவாமி! கோயில் திருப்பணிக்கு ஒப்பந்தக்காரரிடம் பேசி மொத்தப் பணமும் குடுத்திட்டேன். இருந்தாலும் அவர் அலட்சியமா இருக்காரு..." என சொல்லும் போதே ஆண்டவர் இடைமறித்தார்.
''கூப்பிடு அந்த ஒப்பந்தக்காரனை'' என வேகப்படுத்தினார். உடனே ஆள் அனுப்பப்பட்டு கோயிலுக்கு வரவழைக்கப்பட்டார் ஒப்பந்தக்காரர். அவரிடம் ''நல்லமுறையில் சீக்கிரம் கோயிலைக் கட்டி முடி'' என்றார் ஆண்டவர். ஏதோ ஒப்புக்கு தலையாட்டிய ஒப்பந்தக்காரருக்கு திருப்பணி குறித்த அக்கறை சிறிதுமில்லை. நாட்கள் வேகமாக நகர்ந்தன. நிறைமாதத்தில் இருந்த ஒப்பந்தக்காரரின் மனைவிக்கு திடீரென ஒருநாள், கர்ப்பம் ரத்தமாக ஒழுகத் தொடங்கியது. நடுங்கிப் போனார் ஒப்பந்தக்காரர். ''ஆண்டவரின் கட்டளையை அலட்சியம் செய்ததால் ஏற்பட்ட விளைவு இது'' என உணர்ந்தவர் ஆண்டவரின் திருவடிகளை சரணடைந்தார்.
"சாமி! என்னை மன்னிச்சுருங்க! இனிமேலும் தாமதிக்க மாட்டேன். திருப்பணியை சீக்கிரம் முடிப்பேன். எப்படியாவது என் மனைவியை காப்பாத்துங்க'' என அழுதார்.
இரங்கிய ஆண்டவர் திருநீறு கொடுத்தார். ''இதை உன் மனைவி தலையில் போட்டுடாதே! மீறினால் அவள் வெந்து போவாள். உன் வீட்டுக்கூரை மீது போடு! நல்லவிதமாக குழந்தை பிறக்கும்.
'அஞ்சாத பெருமாள்' என குழந்தைக்கு பெயர் சூட்டு. இனிமேலாவது புத்தியா பிழைச்சுக்கோ'' என்று சொல்லி அனுப்பினார்.
திருநீறுடன் வந்த ஒப்பந்தக்காரர் மனைவியிடம் நடந்ததை விவரித்தார். கூரையின் மீது திருநீறு போட்டதும் தீப்பிடித்தது. அதிர்ந்து போன அவர் வீட்டிற்குள் நுழைய மனைவியோ ''ஏங்க! எனக்கு ரத்தப்போக்கு நின்னு போச்சு'' குரல் கொடுத்தாள். ஏதும் புரியாமல் விழித்த ஒப்பந்தக்காரர், தீயை அணைக்க வீட்டுக்கு வெளியே வந்தார். "நான் வந்த வேலை முடிந்து விட்டது. ஆண்டவர் இட்ட கட்டளைப்படி ஒழுங்காக திருப்பணியை செய்'' என்பது போல கண்ணெதிரில் தீ மெல்ல தணிந்தது.
ஆண்டவரின் அருட்சக்தி கண்டு ஒப்பந்தக்காரர் மனம் நெகிழ்ந்தார். சில நாள் கழிந்ததும் சுகப்பிரசவம் கண்டாள் மனைவி. குழந்தைக்கு 'அஞ்சாத பெருமாள்' என பெயரிட்டார். அந்த வேகத்திலேயே திருப்பணியை தொடங்கி சிறப்பாக முடித்தார்.
என்ன செய்ய? அன்புக்கு அடங்காத உலகம் அதிர்ச்சி வைத்தியத்திற்கு தானாக அடங்குகிறது. இப்படி அற்புதம் நிகழ்த்தியவரே 'கோவிலுார் ஆண்டவர்' என்னும் மகான். சித்தரான இவர் காரைக்குடியை சேர்ந்த மெய்யப்பன் - வள்ளியம்மை தம்பதிக்கு மகனாக அவதரித்தார். கோவிலுார் ஆண்டவர் 1769ல் பங்குனி உத்திர நன்னாளில் இறைவன் திருவடியில் கலந்தார். கொட்டித் தீர்த்த மழையில் ஒரு துளி போல கோவிலுார் ஆண்டவரின் வாழ்வில் நாம் தரிசித்தது சிறு துளியே. வேதாந்த நுால்களை வெளியிட்டு தொண்டாற்றும் ஆண்டவரின் கோவிலுார் ஆதீனம் காரைக்குடியில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது.

தொடரும்
அலைபேசி: 97109 09069
பி.என். பரசுராமன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X