கிருஷ்ணஜாலம் - 2 (45)
ஆகஸ்ட் 26,2018,07:40  IST

சல்லியனின் திடமான முடிவைத் தொடர்ந்து மறுநாளைய யுத்தம் அதாவது பதினெட்டாம் நாள் யுத்தத்திற்கு சல்லியனே தலைமை என முடிவானது!
மறுபுறம் கர்ணனின் பூத உடலுக்கு மரியாதையும் ஈமக்கிரியையும் தொடங்கியது. போர்க்களத்து மரணங்களுக்கு சகஜ மரணங்களை போல கிரியைகள் இல்லை. அக்னி தகனமும், அஸ்திக்கரைப்பும் மட்டுமே!
அஸ்தியை ஆற்றில் கரைக்கவும் அந்த தண்ணீர் வெகு தொலைவில் ஆற்றோரமாய் முழங்காலளவு நீரில் நின்றபடி இருந்த கிருஷ்ணனை கடக்க முற்பட்டது. அதில் ஒரு வாயை எடுத்து கிருஷ்ணன் குடித்து விட்டு திரும்பினான். எதிரில் அர்ஜுனன் நின்றபடி இருந்தான். அவன் முகத்தில் கர்ணனை வென்ற இன்பம் கொன்ற சோகமாக மாறியிருந்தது.
''என்ன அர்ஜுனா... பாசக் கலக்கமா?''
''எப்படி கிருஷ்ணா அது இல்லாது போகும்''
''யோகியாகும் போது இல்லாது போகும் அர்ஜுனா!''
''நான் யோகி இல்லை கிருஷ்ணா... பாபி''
''சந்ததமாக பேசுவதெல்லாம் உண்மையாகி விடாது. நான் உபதேசித்த எதையும் நீ சரியாக கிரகிக்கவில்லை.''
''யுத்த களத்தில் நான் எதிரியை நினைப்பேனா, இல்லை உன் உபதேசங்களை நினைப்பேனா?''
''எல்லாம் மாயையின் விளையாட்டு என்று உணர்ந்து விட்டால் எதிரி என நினைக்க மாட்டாய், நண்பன் என்றும் நினைக்க மாட்டாய். கடமையை மட்டும் செய்வாய்...''
''நீ சொல்வது போல் நடப்பது சாத்தியமா கிருஷ்ணா?''
''இப்படி நீ கேட்பதே கூட மாயையால் தான்...''
''மாயை... மாயை... மாயை...! நீ கூடவா மாயைக்கு அஞ்சுகிறாய்... உன்னால் கூடவா அதை ஏதும் செய்யமுடியவில்லை?''
''அது தன் கடமையை சரியாகச் செய்கிறது. நாம் நம் கடமையை சரியாகச் செய்வோம். வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை...''
''அதை சமரசம் செய்து கொள்ளச் சொல்கிறாயா? அதை அடக்கி ஒடுக்க முடியாதா?''
''இரண்டாக உள்ள எல்லாம் ஒன்றாகிவிடும் பரவாயில்லையா?''
''நீ என்ன சொல்கிறாய்... புரியவில்லை''
''பார்த்திபா... இந்த உலகம் ஒன்று தான். ஆனால் அது இரவு பகல் என்று இரு கூறாக செயல்படுகிறது. சுவை ஒன்று தான். அது இரு கூறாக மட்டுமல்ல அறுசுவை என்று ஆறு கூறாக செயல்படுகிறது. மனித இனம் ஒன்று தான். ஆனால் ஆண் பெண் என்று அதிலும் இரு பிரிவு. உணர்வும் இன்பம் துன்பமாக உள்ளது. எல்லாமே ஒன்றாக இருந்து பலவாகப் பிரிந்து செயலாற்றுகின்றன. மாயை விலகினால் எதிலும் இரு தன்மை தேவையில்லை. நம் வாழ்விலும் வெற்றி தோல்விகளுக்கு இடமிருக்காது. கிட்டதட்ட அசைவற்று தவம் புரியும் ஒரு தவசியின் வாழ்வு போல் எல்லோரது வாழ்வும் ஆகிவிடும் பரவாயில்லையா?''
''என்றால் மாயை தான் பல்வேறு ருசிகள், வண்ணங்கள் என்று அனைத்துக்கும் காரணமா?''
''ஆம்... மாயையே வினைபுரிய வைக்கிறது. மாயையே பற்று பாசத்தை வளர்க்கிறது. மாயையே அறிவை ஆட்டுவிக்கிறது. இதை பக்தியால் மட்டுமே உணர்ந்து தெளிய இயலும். பாலினுள் வெண்ணெய் போல் நம்முள் ஆத்மா உள்ளது. பாலின் பாடுகளால் வெண்ணெய் பிரிகிறது. பிரிந்தாலும் திரும்ப அது பாலுடனோ, மோருடனோ சேருவதில்லை. தான் தோன்றிய மோரிலேயே மீண்டும் கரைந்து விடாமல் மிதக்கிறது. பின் அதுவே உருக்கப்பட்டு நெய்யாகி யக்ஞத்தில் நெருப்பாகி தேவர்களை சென்று சேர்கிறது.
வெண்ணெய்க்கு ருசியே இல்லை. வெண்ணெய் போல் பாடுகளால் பக்குவப்பட்டவனும் எல்லா ருசிகளையும் விட்டு பற்று நீங்குகிறான். தான் வாழும் வாழ்வில் மோரில் கரையாத வெண்ணெய் போல, வாழ்வில் பற்றின்றி நெய்யாகி ஒளியாக தயாராகிறான். அப்படிப்பட்டவர்கள் என்னைத் தேடக்கூட தேவையில்லை. அவர்களை நானே தேடிச்சென்று ஆட்கொள்வேன். இதை உணர்த்துவதே கோகுலத்தில் நான் வெண்ணெய்த் திருடியாக திகழ்ந்த காலங்கள்...''
கிருஷ்ணன் மாயா விளக்கம் தந்த சாக்கில் வெண்ணெய் திருடியாக திகழ்ந்ததன் பொருட்டு கூறிய காரணம் அர்ஜுனனை திகைக்க மட்டுமல்ல, நெஞ்சை நெகிழ்த்தவும் செய்தது.
''கிருஷ்ணா... ஆட்கொள்வதற்காக தன்னை ஒரு திருடன் என்று பிறர் சொல்வதை கூட நீ பொருட்படுத்தவில்லையே... எத்தனை கருணை உனக்கு...'' என்றான்.
''திரும்பவும் மாயை உன்னை இப்படி எண்ணச் செய்கிறது. திருடு எனும் அந்த வினையை நீ யோகியாக இருக்கும் பட்சத்தில் திருடாகவே கருத மாட்டாய். திருட்டு என்று கருதினாலே மாயா வந்து விடும்.
இது போன்றதே என் ராசக்கிரீடையும்... கோபியர்கள் அவ்வளவு பேருமே எனை அடையத்துடித்த ஜீவாத்மாக்கள். அவர்கள் என்னோடு கலப்பதையே ராசக்கிரீடை உணர்த்துகிறது. அது ஒரு காமாந்தகம் என்று மாயை எண்ண வைக்கும். யோகமும் பக்தியுமே அது ஒரு காமதகனம் என்பதை கண்டு கொள்ளும்.
காமாந்தகத்தில் குருட்டுத்தன்மை உள்ளது. காம தகனத்தில் காமத்தை சுட்ட சாம்பலாக்கி விட்ட தன்மை உள்ளது. இதை தெளிந்து புரிய ஞானம் வேண்டும். ஞானத்தை அடைய பக்குவம் வேண்டும். பக்குவப்பட சிக்கல்கள் வேண்டும். சிக்கல்கள் வேண்டுமென்றால் உன்னைப்போல் தாய், தந்தை, அண்ணன், தம்பி என்று குடும்பமும் உற்றார், உறவினர்களும் வேண்டும். ஒன்று பலவாக பிரிந்து எத்தனை போக்குகள் என்று பார்த்தாயா? இதெல்லாமே மாய வினைகள் தான். மாயையை கண்டு அச்சப்பட்டால் வெறுக்கத் தோன்றும். அதோடு விளையாட முற்பட்டால் ஞானம் தோன்றும்.''
''கிருஷ்ணா உன் உபதேசங்கள் எனக்கு பெரும் தெளிவைத் தருகின்றன. நான் உனக்கு நன்றி கூறுகிறேன். என்னை பேச வைப்பவனும் நீ. அதற்காக பேசி என்னை தெளிய வைப்பவனும் நீ... நீ இருக்க எனக்கு கவலையில்லை.''
''இறுதியாக சொன்னதை உறுதியாக பற்றிக்கொள். எதைச் செய்தாலும் எனக்கு அர்ப்பணித்துவிடு. அது பாவமோ, புண்ணியமோ என்னையே சேரட்டும். எனக்கு அர்ப்பணமாவது என்னைச் சேர்ந்து விடும். சர்வம் கிருஷ்ணார்ப்பணம். கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்... இப்போது தான் கர்ணன் சேர்ந்தான்... நீயும் உன் செயல்களால் என்னைச் சேர்வாயாக...''
''கர்ணன் உன்னைச் சேர்ந்தானா... கிருஷ்ணா என்ன சொல்கிறாய் நீ?''
''ஆம்... தன் தர்மபயன் அவ்வளவையும் தன் குருதியை வார்த்து அவன் எனக்கு தத்தம் செய்தபோதே அவன் என்னை சேர்ந்து விட்டான். பஞ்ச பூதங்களில் நீரே பிரதான பூதம். மற்ற நான்கு சம்பந்தங்களும் நீருக்குண்டு. நிலம் அதை தாங்கும்; வான் அதை வாங்கும்; கதிர் அதை உருக்கும்; காற்று அதை பெருக்கும். அதனாலேயே நீராடல் எனும் நெறி உயர்நெறியானது. கருவில் நீருக்குள் தானே பிண்டம் வளர்கிறது.
நீரில் வளர்ந்த பிண்டம் நீரோடு முடியவே அஸ்தியும் நீரில் கரைக்கப்படுகிறது. அந்த நீரெனும் கடலில் நாரணனாய் கிடப்பவன் தானே நானும்? எனவே நீரோடு சேர்பவை என்னோடு சேர்பவையே... கர்ணனின் அஸ்தியும் அவ்வண்ணமே என்னைச் சேர்ந்தது.'' என்ற கிருஷ்ணனை நெருங்கி கரத்தினைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டான் அர்ஜுனன். அப்படியே ஆரத்தழுவி உணர்ச்சிப் பெருக்காகி 'நான் பாக்யன்... நான் பாக்யன்' என்றான்.
''பாக்யனா... என்றால் ஒரு கர்மயோகி போல் திடமாய் இரு. கண்ணீர் விடாதே. போர்க்களத்தில் உனக்கான கடமைகள் பாக்கி உள்ளன.''
''அறிவேன் கிருஷ்ணா... மாமா சல்லியர் தான் இன்று போருக்கு தலைமை... இப்போதும் துரியோதனனுக்கு தன்னை முன்னிறுத்திக்கொள்ள துணிவில்லை. தன்னை பின்னிறுத்தி அவனோடு இருப்பவர்களையெல்லாம் பலியாக்குகிறான்.''
''துரியோதனன் மாயையின் அரக்கப்பிடியில் இருப்பவன். அப்படித்தான் செயல்படுவான்... சல்லியனை இன்று எதிர்ப்போம். தாய்மாமனாக இருந்தும் துரியோதனன் பக்கம் நின்ற பாவத்திற்கு இன்று ஒரு தக்க பாடத்தை புகட்டுவோம்.'' என்றான் கிருஷ்ணன்.
அதன்பின் களம் காணப் புறப்பட்டனர்!
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X