கிருஷ்ணஜாலம் - 2 (46)
ஆகஸ்ட் 31,2018,15:01  IST

பதினெட்டாம் நாள் யுத்த களத்தில் எதிரில் சல்லியன் தலைமையில் கவுரவப்படை. பாண்டவர் தரப்பிலோ தர்மன் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருந்தான்.
பதினேழு நாள் யுத்தத்தில் அர்ஜுனனும், பீமனுமே பிரதான எதிரிகளை வீழ்த்தியிருந்தனர். தன் பங்கென்று பெரிதாக எதுவுமில்லை என்ற எண்ணம் தர்மனுக்குள் ஏற்பட்டு விட்டிருந்தது. அதன் எதிரொலி சல்லியனையாவது தான் வீழ்த்த வேண்டும் என எண்ணினான்.
அது களத்தில் எதிரொலித்தது. சல்லியன் கை தான் முதலில் ஓங்கியிருந்தது. முன்னதாக கிருஷ்ணன் தர்மனுக்கு ஒரு ஆலோசனை கூறியிருந்தான்.
''தர்மா... சல்லியனை முதலில் போரிட விடு, உன் வசம் நாராயணாஸ்திரம் இல்லை என்று அவன் நினைக்க வேண்டும். அதை நீ முந்தைய நாட்களில் நடந்த போரில் எய்து விட்டதால் தான் இப்போது தடுப்பு முறையை கையாள்கிறாய் என்று அவன் கருதுவான். அதே சமயம் அவன் எய்திடும் எத்தனை மேலான அஸ்திரங்களையும் உன் தேர்க்கொடியில் பறக்கும் அனுமன் பார்த்துக் கொள்வான். அஸ்திரங்கள் உன்னை நோக்கி வரும் சமயம் நீ அனுமனை எண்ணிக் கொள். அனுமனுடைய பிராண சக்தி காற்று வடிவில் அங்கே உனக்கு கை கொடுக்கும். அது அஸ்திரங்களின் தீர்க்கத்தையும் பாதிக்கு பாதி குறைத்து விடும்! அர்ஜுனனுக்கும் அனுமன் இப்படித்தான் உதவினான். சல்லியனும் ஒரு நிமிடம் குழம்பி நிற்பான்.
அப்போது சற்றும் எதிர்பாராத நிலையில் நாராயணாஸ்திரம் சல்லியனை தாக்கி விட்டு, பூமிக்குள் புதைந்து போகும் படி போடு. இல்லாவிட்டால் சல்லியனை ஒத்த சாமான்ய வீரர்கள் சாம்பலாகி விடுவார்கள்'' என்று கூறியிருந்தான். அதன்படி தான் எல்லாமும் நடந்தது. சல்லியன் சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து முடித்த நிலையில், சற்றும் எதிர்பாராதபடி தர்மனின் நாராயணாஸ்திரம் சல்லியன் மீது பாயத்தொடங்கியது. அதைக் கண்ட சல்லியன் கலங்கவில்லை. மாறாக கிருஷ்ணனைத் தான் நினைத்துக் கொண்டான்.
'உன்னை விட உன் படையை பெரிதாக கருதிய துரியோதனனுக்கும், அவனோடு சேர்ந்த எனக்கும் சரியான பரிசு கிடைக்கப் போகிறது. களத்தில் கடைசி வரை கலங்காமல் போராடிய அந்த வீரம் மட்டுமே என் அழகு. கிருஷ்ணா உன்வரையில் ஒவ்வொன்றுமே அழகு!' என்று நினைத்துக் கொண்ட நொடி நாராயணாஸ்திரம் சல்லியன் மார்பைப் பிளந்து பின் மண்ணுக்குள் புகுந்து மறைந்தும் போனது.
சல்லியன் மாளவும் படைவீரர்களிடம் பெரும் தளர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் சகுனியும் அவன் மகன் உலுாகனும் ஒருபுறம் போரிட்டபடி இருந்தனர். இந்த 18 நாட்களில் சகுனி பெரும்பாலும் பின்னே தான் இருந்தான். முன்னின்று யாரையும் தாக்கவில்லை.
இன்று வழியின்றி போர்க்களம் புகுந்திருந்தான். உடன் அவன் மகன். இருவரும் தனித்தனியே தங்கள் ரதங்களில் இருந்தனர். இதில் உலுாகனின் ரதத்தை உடைத்து நொறுக்கினான் பீமன். ரதமின்றி கீழே விழுந்து பின் எழுந்து நின்ற உலுாகனை தன் பாணத்தால் சிரச்சேதம் செய்தான் சகாதேவன். அப்படியே பீமனிடம், ''அப்பன் பிள்ளை என இருவரையும் நான் கொல்ல வேண்டும் என்பதே என் விருப்பம் அண்ணா. நீ துரியோதனனோடு உன் கணக்கை வைத்துக் கொள். நான் சகுனியை பார்த்துக் கொள்கிறேன்'' என்றான்.
மகன் இறந்ததை கண்டதுமே சகுனிக்கு பாதி உயிர் போய் விட்டது. மீதி உயிரைக் குடிக்க சகாதேவனின் பாணம் புறப்பட்டது. அது சகுனியின் வலது கரத்தை முதலில் வாங்கியது. இது தானே சொக்கட்டானை உருட்டி சூதாட்டத்தில் பாண்டவர்களை வீழ்த்தியது?
அடுத்தது இடது கை!
இரு கைகளையும் இழந்து நின்ற சகுனி அடுத்த பாணம் மார்பில் பாய்ந்து உயிர் பிரிய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் சகாதேவனின் பாணம் சகுனியின் துர்புத்தியால் நிரம்பிய மூளையை உடைய சிரத்தை கொய்தது. ஒரு வினோத முண்ட உடம்பாக சகுனி உடல் விழுந்தது. தரையில் விழுந்த சிரத்தை பருந்து துாக்கிச் சென்று கொத்தித் தின்னப் பார்த்தது. பருந்துப் பார்வை பார்த்தும், குறுக்கு வழியை வாழ்வு நடத்தியவனின் உடம்புக்கும் அவன் மனம் போலவே முடிவு அமைந்தது தான் விந்தை!
ஆக மொத்தத்தில் சல்லியன், சகுனி, உலுாகன் என்று பதினெட்டாம் நாள் காலையிலேயே மூவரை துரியோதனன் தரப்பு இழந்து விட்டது. இப்போது எஞ்சியிருப்பவர்கள் துரியோதனன் உட்பட கிருபர், கிருதவர்மா, அசுவத்தாமன் எனும் நான்கு பேர் மட்டுமே!
இங்கே சஞ்சயன் என்ற துாரதிருஷ்டன் பற்றியும் கூற வேண்டும். தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் தான் இருக்கும்
இடத்தில் இருந்து மனக்கண்ணால் கண்டு அப்படியே சொல்லும் சக்தி படைத்தவன் இவன். இதை ஒரு யோகப்பயிற்சி என்றும் கூறலாம். இதற்கு மனதை நினைத்த மாத்திரத்தில் அடக்க தெரிய வேண்டும். அடக்கிய நிலையில் எவர் குறித்து அறிய வேண்டுமோ, அவர் பற்றிய எண்ணங்களை தோன்றச் செய்ய வேண்டும். அடுத்த நொடியே அவரோடு தொடர்பு உருவாகி மானசீகமாய் அவர்கள் எங்கிருந்தாலும் அவரைக் கண்டும் கேட்டும் பேச இயலும்.
இப்படி ஒரு துாரதிருஷ்டன் கவுரவர்களின் புரோகிதனாகவும் திகழ்ந்தான். கண் பார்வையில்லாத திருதிராஷ்டிரனுக்கும், கண்களைக் கட்டியபடி செயற்கை குருடியாக ஆகிவிட்ட காந்தாரிக்கும் இவனே கண்களாக இருந்து செயல்பட்டவன்.
பாரதப்போரின் 18 நாள் நடப்புகளையும் இவனே திருதிராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் சொல்லி வந்தவன். இறுதி நாளான இன்றும் சகுனியும், உலுாகனும், சல்லியனும் இறந்த தேதியைக் கூறவும் திருதிராஷ்டிரன் கண்களிலும் காந்தாரியின் கண்களிலும் கண்ணீர் பெருகி வழிந்தது. திருதிராஷ்டிரன் விம்மலுடன் ''யாம் எவ்வளவு சொல்லியும் துரியோதனன் கேட்கவில்லை. பாண்டு புத்திரர்கள் தங்கள் வீரத்தை மட்டுமல்ல தர்மத்தையும் நிலைநாட்டி விட்டனர்...'' என்று ஒப்புக் கொண்டான். காந்தாரியும் அதை ஆமோதித்தாள். அப்படியே, ''சஞ்சயா... இப்போது மிஞ்சியிருக்கும் நால்வருக்கும் நான் என் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். இவர்கள் திரும்பப் போகின்றனரா... இல்லை இவர்களுக்கும் வீர சொர்க்கமா?'' என்று கேட்டார்.
''அதற்கு முன் வருத்தத்திற்குரிய செய்தி ஒன்றை கூற விரும்புகிறேன்'' என்றான் சஞ்சயன்.
''என்ன சஞ்சயா?''
''தங்கள் குமாரரான துரியோதனர் களம் விட்டு நீங்கி எங்கோ சென்றபடி இருக்கிறார். அவரைக் காணாமல் கிருபரும், கிருதவர்மனும், அசுவத்தாமனும் தேடியபடி உள்ளனர். களத்தில் இப்போது யுத்தம் நிகழவில்லை, தேடல் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது'' என்றான் சஞ்சயன்.
''ஐயோ இது என்ன விந்தை... துரியோதனனா களத்தை விட்டு விலகிச் செல்கிறான்... அவன் ஆங்காரம் கொண்டவன் தான் ஆனாலும் வீரனாயிற்றே? ஒருபோதும் கோழை போல் நடக்க மாட்டானே...?'' என்று காந்தாரி கலங்கினாள்.
''கலங்காதீர்கள்... அவர் ஒரு மடுவிற்குள் இறங்குவது போல் தெரிகிறது. அவர் மேனி எங்கும் வெப்பம் காந்துகிறது. வியர்வை பெருகி ஓடுகிறது. முகத்தில் எப்போதும் இல்லாதது போல் தெளிவு தென்படுகிறது'' என்று சஞ்சயன் தொடர்ந்தான்.
''அனைத்தையும் இழந்தபின் எந்த தெளிவினால் யாருக்கு என்ன பயன்?'' என திருதிராஷ்டிரன் சலித்துக் கொண்டார். இவ்வேளையில் துரியோதனனை தேடி பாண்டவர்கள் ஐவரும் கிருஷ்ணனோடு அந்த மடுக்கரைக்கே வந்தனர்.
- தொடரும்
- இந்திரா சவுந்தர்ராஜன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X