பேசும் தெய்வம்! (32)
செப்டம்பர் 07,2018,15:32  IST

சுருளிமலையின் அடிவாரத்தில் சித்தர் ஒருவரின் தலைமையில் யாகம் நடத்த சீடர்கள் தயாராகி கொண்டிருந்தனர். அப்போது காட்டிற்குள் இருந்து புலி ஒன்று உறுமியபடி அவர்களை நோக்கி வந்தது. அனைவரும் தலைமுடி காற்றில் பறக்க ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் சித்தரோ இடத்தை விட்டு அசையவில்லை. அச்சமின்றி புலியிடம் ''அம்மா! புவனேஸ்வரி! உன் விருப்பம் எதுவோ அதுவே நடக்கட்டும்'' என்று பணியை தொடர்ந்தார். ஓடிய சீடர்கள் எல்லாம் மறுநாள் காலையில் அடிவாரம் வந்தனர். அங்கே புலி வாய் பிளந்து இறந்து கிடந்தது. 'தாய் புவனேஸ்வரியின் செயல் இது' என்பதை உணர்ந்த சீடர்கள் புலியின் தோலை உரித்துப் பக்குவப்படுத்தி, சித்தருக்கு ஆசனமாக கொடுத்தனர். சித்தரோ ஏதும் நடக்காதது போல அங்கிருந்து புறப்பட்டார். யார் அந்த சித்தர் தெரியுமா? மேலும் படியுங்கள்.
துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி என்னும் திருத்தலத்தில் முத்துசாமியாபிள்ளை - சிதம்பர வடிவம்மையார் தம்பதி வாழ்ந்தனர். முத்துசாமியாபிள்ளையின் கனவில் தோன்றிய முருகன் ''உனக்கு விரைவில் ஆண்குழந்தை பிறக்கப் போகிறது. அக்குழந்தை எதிர்காலத்தில் ஞானசித்தராக விளங்குவான்'' என்று சொல்லி மறைந்தார்.
அதன்படியே 1868ம் ஆண்டில் மார்கழி விசாகத்தன்று குழந்தை பிறந்தது. தெய்வக்குழந்தை பிறந்ததை கேள்விப்பட்ட திருநெல்வேலி மகாராஜசாமி என்னும் பெரியவர் ஆழ்வார்திருநகரிக்கு வந்தார்.
''உங்கள் வீட்டில் குழந்தையாக இருப்பவர் சாதாரணமானவர் அல்ல. எதிர்காலத்தில் இவர் சிறந்த சித்தராக விளங்குவார் என என் குருநாதர் சொல்லியிருக்கிறார்'' என்று தெரிவித்து குழந்தையை வணங்கிச் சென்றார்.
ஒருநாள் ஆழ்வார் திருநகரிக்கு வந்த சிவனடியார் ஒருவர் '' தெய்வ அருள் பெற்ற இக்குழந்தை சிறுவனாக வளரும் காலத்தில் திடீரென நோய் உண்டாகும். அதிலிருந்து விடுபட ஊரார் வழிபடும் அரசமரத்தின் அடியில் குழந்தையை சிறிது நேரம் கிடத்தி விட்டு எடுத்து வாருங்கள். அதிலிருந்து பதினொரு வாரம் கழிந்த பின் மீண்டும் அங்கு கிடத்தினால், பாம்பு ஒன்று குழந்தையின் மேனியை தொட்டுச் செல்லும். அதன் பின் நோய் பறந்தோடும்'' என்று சொல்லி புறப்பட்டார்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த சிறுவனின் உடல் திடீரென மெலிய தொடங்கியது. சிவனடியாரின் வழிகாட்டுதல்படியே அரசமரத்தை வழிபட்டு அதனடியில் கிடத்தி விட்டு வந்தனர் பெற்றோர்.
அதிலிருந்து பதினொரு வாரம் முடிந்த பின் மீண்டும் சிறுவனை அங்கு வைத்து விட்டு காத்திருந்தனர். புதரில் இருந்த பாம்பு ஒன்று படமெடுத்தபடி நெருங்கியது. பெற்றோரும், ஊராரும் அச்சத்தில் உறைந்தனர். ஆனால் அந்த பாம்பு சிறுவனை தொட்டுவிட்டு புதருக்குள் மறைந்தது. பெற்றோர் ஓடிச்சென்று சிறுவனைத் துாக்கி மகிழ்ந்தனர்.
திருச்செந்துார் முருகன் அருளால் கல்வி, கலைகளில் சித்தர் சிறந்து விளங்கினார். இளம் வயதிலேயே ஆன்மிக நுால்கள் எழுதத் தொடங்கினார். பக்தி வைராக்கியம், ஞான அனுபவம் இரண்டையும் விளக்கும் 'ஞான பாஸ்கரோதயம் ஆயிரம்' என்னும் இவரது நுாலை ஆன்மிக அன்பர்கள் வியந்து பாராட்டினர்.
பொதிகை மலையில் தவம் செய்த சித்தர் 'அகத்தியர் அகவல்' என்னும் பாடல் பாடி அவரது அருளுக்கு பாத்திரமானார். பச்சைமலைக் குருநாதர் என்னும் யோகி திருவானைக்காவில் சித்தரைக் கண்டு தன்னுடன் அழைத்துச் சென்று, உபதேசம் செய்தார். அதன் பிறகு நடந்தே திருத்தல யாத்திரை மேற்கொண்ட சித்தர் மக்களின் துன்பம், நோய்களை போக்கி வந்தார். சென்ற இடம் எல்லாம் புகழ் மழை பொழிந்தது.
இருந்தாலும் நல்லவருக்கும் பகை உண்டு என்பார்கள். சித்தருக்கோ உயிருக்கே ஆபத்து நேர்ந்தது. சுப்பிரமணியம் என்பவன் சித்தரின் புகழுக்கு காரணம் அவரிடம் உள்ள தெய்வத்தன்மை மிக்க மருந்துகள் இருப்பது தான் என கருதினான். சித்தரைக் கொன்று மருந்தை திருடத் திட்டமிட்டான். இதற்காக சித்தரிடம் நெருங்கிப் பழகி வந்தான். ஒருநாள் குன்றிமணி அளவு வைரத்தைப் பொடி செய்து பாலில் கலந்து கொடுக்க சித்தரும் குடித்தார். விஷயம் சித்தர்களின் பக்தர்களை எட்டுவதற்குள் சுப்பிரமணியம் தலைமறைவாகி விட்டான்.
பக்தர்களின் கவலையை அறிந்த சித்தர் ''தேவர்கள் சிவனுக்கு ஆலகால விஷத்தைக் கொடுத்தது போல சுப்பிரமணியன் எனக்கு வைரப்பொடி கலந்து பால் கொடுத்தான். எனக்கு தீங்கேதும் உண்டாகாது. பயப்படாதீர்கள்'' என ஆறுதல் கூறி சிவனைச் சரணடைந்தார். சிவனருளால் சித்தர் உயிர் பிழைத்தார். அதன் பின் திருத்தல யாத்திரை மேற்கொண்ட சித்தர், திருச்செங்கோட்டில் தங்கியிருந்த போது, சுப்பிரமணியம் மறுபடியும் வந்தான்.
சுப்பிரமணியத்தின் வருகையை சித்தரின் பக்தர்கள் விரும்பவில்லை. ஆனால் சித்தர் அவனிடம் முன்போலவே அன்புடன் பழகினார். சுப்பிரமணியமோ திருந்திய பாடில்லை. சித்தரிடம் இருந்த மருந்தை எல்லாம் திருடத் தொடங்கினான். ஒருநாள் பக்தர்கள் அவனைக் கையும் களவுமாகப் பிடித்து தண்டிக்க முயன்றனர். இந்நிலையிலும் சித்தர் ''தெரியாமல் செய்து விட்டான். மன்னியுங்கள் அவனை'' என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
இந்த சித்தர் சமாதியான இடம் ஆதாரப்பூர்வமாகக் கிடைக்கவில்லை. பிறக்கும் முன்பே செந்துார் முருகனால் 'ஞானசித்தர்' எனப்பட்ட இவரிடம் குறைவற்ற செல்வமான நோயில்லா வாழ்வு கிடைக்க வேண்டுவோம்!
தொடரும்
அலைபேசி: 97109 09069
பி.என்.பரசுராமன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X