கிருஷ்ணஜாலம் - 2 (47)
செப்டம்பர் 07,2018,15:35  IST

மடுவுக்குள் துரியோதனன். மூச்சை கட்டுப்படுத்தியபடி குளிர்ந்த நீருக்குள் தன் உடலின் வெம்மையை தணித்துக் கொண்டிருந்தான். மடுக்கரையில் பாண்டவர்கள்! உடன் கிருஷ்ணனும்...
மடுக்கரை மிக அமைதியாக இருந்தது. குளிர்ந்த தென்றல் வீசிக் கொண்டிருந்தது. இதனுள் மீன்கள் வேண்டுமானால் உயிர் வாழ முடியும்... மனிதர்கள் எப்படி முடியும்? எனவே பாண்டவர்கள் குழப்பத்தோடு மடுவைப் பார்த்தனர். அப்போது ஒரு பெரிய காற்றுக்குமிழி மடுவில் தோன்றி நீர்ப்பரப்பின் மீது வெடித்தது. அதைக் கண்ட கிருஷ்ணன் சிரித்தான். கிருஷ்ணப் புன்னகை என்றாலே பொருள் உண்டே?
அர்ஜுனன் அதை கவனித்து கேட்டான்.
''கிருஷ்ணா... ஏன் சிரித்தாய்?''
''பாவம் துரியோதனன்... நிராயுதபாணியாய் இந்த நீரைத் தஞ்சமடைந்து விட்டான். ஓடி ஒளிய எவ்வளவோ இடங்கள் இருப்பினும் ஒருவன் நீருக்குள் ஒளிவது எனக்கு தெரிந்து இது இரண்டாவது முறை...''
அப்படியானால் இந்த மடுவுக்குள் தான் இருக்கிறானா துரியோதனன்?''
''ஆம்... அன்று கடலுக்கடியில் வேதங்களை எடுத்துச் சென்று ஒளித்து வைத்துக் கொண்டான் அசுரன் ஒருவன். அப்போது அதை மீட்டது என் மூலமே... இப்போது இங்கே ஒளிந்திருக்கும் துரியோதனனை மீட்கப் போவது யார்?''
''இது என்ன பிரமாதம். அவன் ஒருவனே என் பிரதான குறி. நீருக்குள் மூழ்குவதும், பிராண வாயுவை நெஞ்சில் சேமித்து பாதாள லோகம் வரை செல்ல முடிவதும் எனக்கு பழக்கமான ஒன்றே. என் சிறுவயதில் தண்ணீருக்குள்ளேயே என்னை கொல்ல முயன்றவன் தானே இந்த துரியோதனன்?'' என்றபடியே பீமன் அந்த மடுவுக்குள் பாய்ந்தான். நீருக்குள் குதித்த பீமன் மடுவின் நடுவில் உள்ள ஆழமான இடத்தில் பத்மாசனமிட்ட நிலையில் ஒரு நீர்க்கொடியை பற்றிக்கொண்டு அமர்ந்திருந்த துரியோதனனை சுற்றிவரத் தொடங்கினான். ஒரு மீன் போல பீமன் தன்னைச் சுற்றவும் துரியோதனனுக்கு தெரிந்து விட்டது. அடுத்த நொடியே மடுவை விட்டு கரையேறினான்.
ஒருபுறம் பீமன்; மறுபுறம் துரியோதனன்; நடுவில் மடு! கரையில் பாண்டவர்களோடு கிருஷ்ணன். உடம்பெல்லாம் நீர்வழிய காட்சி தந்த துரியோதனனைப் பார்த்து கிருஷ்ணனே முதலில் பேச ஆரம்பித்தான்.
''என்ன மாவீரா... இப்படியா மடுவிற்குள் போய் ஒளிவாய்?''
துரியோதனன் பதில் கூறாமல் வெறித்தான்.
''துரியோதனா உனக்கு வெட்கமாக இல்லையா? உனக்காக போர்க்களத்தில் அவ்வளவு பேரையும் பலி கொடுத்து விட்டு இந்த மடுவுக்குள் ஒளிந்து தப்பிக்கப் பார்க்கிறாயா? ஈனப்பிறவியே...'' என்று வெடித்தான் சகாதேவன்.
''துரியோதனா நீ இத்தனை பெரிய கோழையா? இது தெரியாமல் உன்னையும் ஒரு வீரன் என்றல்லவா நான் எண்ணிக்கொண்டிருந்தேன்...'' என்று கெக்கலித்தான் நகுலன்.
''யுத்தம் வேண்டாம் என்று தலையால் அடித்துக் கொண்டோமே... கேட்டாயா... இப்போது பார் உன் நிலையை...'' என்று அர்ஜுனன் ஆவேசப்பட்டான்.
''இவனோடு என்ன பேச்சு... நம் பேச்சைக் கேட்டு இவன் திருந்தப் போவதில்லை. இவன் திருந்தினால் நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.'' என்றான் நகுலன்.
''தம்பிகளே! இப்படி எல்லாம் பேசாதீர்கள். எப்போது திருந்தினாலும் திருத்தம் திருத்தம் தானே...?'' என்று தருமன் தனக்கே உண்டான தரும குணத்துடன் பேசவும் அதிகம் அதிர்ந்தது கிருஷ்ணனே!
''தர்மா... உன் தயாள குணத்தால் பாவம் துரியோதனன் என்று விட்டு விடப்போகிறாயா? துரியோதனனுக்கு அறவே பிடிக்காத ஒன்று எது தெரியுமா? தன்மீது ஒருவர் பரிதாபம் கொள்வது தான்...!
மடுவுக்குள் ஒன்றும் துரியோதனன் ஒளியவில்லை. நான் வேடிக்கைக்காக அப்படிக் கேட்டேன். துரியோதனன் தன் உடல் வெம்மை தீரவும், புதிய சக்தி பெறவுமே இப்படி நடந்தான். இது ஒருவகை யோகம், இப்போது துரியோதனனும் ஒரு யோகி.
இந்த யோகி எக்காலத்திலும் முன் வைத்த காலை பின்வைக்க மாட்டான். அழிவதாக இருந்தாலும் யுத்தம் புரிந்தே அழிவான்... இல்லையா துரியோதனா?''
கிருஷ்ணனின் தந்திரப் பேச்சு துரியோதனனுக்கும் புரிந்தது. நெடுநேரத்துக்கு பின் துரியோதனன் உதட்டிலும் ஒரு சிறு புன்னகை அரும்பியது. அதில் சொல்ல முடியாது அளவு கிருஷ்ணன் பால் ஏளனம்!
''மாதவா... அடேய் மாயாவி! நீ என்னை புகழ்வது போல் இகழ்வதை நான் அறியாதவனல்ல... எங்கே மனம் மாறி இவர்கள் காலில் விழுந்து நான் தப்பித்துவிடுவேனோ என்று பதைத்துப் போய் நீ இவ்வாறு பேசுகிறாய்.
நான் தனித்து நிற்பதால் இந்த சிறுவர்களும் ஆளுக்கு ஆள் கோஷம் போடுகின்றனர். நீ இருக்கும் தைரியமும் ஒரு காரணம்... சொன்னாலும், சொல்லாவிட்டாலும் நான் இப்போது ஒரு யோகி தான்.
நான் புரிந்ததும் ஜல யோகமே!
நான் யுத்தத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. நானே நாளை களத்திற்கு வருகிறேன். இப்போது புறப்படுங்கள்'' என்ற துரியோதனனைப் பார்த்து சிரித்தான் பீமன். சரியான இடிச்சிரிப்பு.
''ஏ பீமா... ஏன் இந்த சிரிப்பு... நாளை களம் காண்கிறேன் என்று கூறிய பின் சிரிக்க என்ன இருக்கிறது?''
''பைத்தியக்காரனே...! இடைவிடாத போரில் உனக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை தேவைப்படுகிறதா? இப்படி நீ விலக நினைக்கும் போதே எங்களை இப்போது சந்திக்க அஞ்சுவது நன்றாக புரிகிறது.
உன் தோல்வியை ஒப்புக்கொண்டு மண்டியிட்டு உயிர்ப்பிச்சை கேள். அதை கொடுப்பதும் கொடுக்காததும் எங்கள் விருப்பம்.''
''என்ன... உங்களிடம் நான் மண்டியிடுவதா? அதற்காகவா என் 12 அக்ரோணி சேனைகளும் அழிந்தன...?''
''மற்ற நாட்டவர் சேனைகளை ஏன் விட்டுவிட்டாய்? மொத்தமாக 18 அக்ரோணி சேனைகள் அழிந்துள்ளன. நுாறு, ஆயிரம், லட்சம் கடந்து கோடி உயிர்கள் இரு தரப்பிலும் வீர சொர்க்கமடைந்துள்ளனர். எல்லாம் உன் ஒருவனின் மண்ணாசையால்! இந்த உலகின் மிகப்பெரிய கொலைகாரன் நீ மட்டும் தான்... உன் இடத்தை இனிவரும் காலத்திலும் ஒருவராலும் பிடிக்க முடியாது...'' என்ற பீமனை இடையிட்டான் சகாதேவன்.
''அண்ணா இவனோடு என்ன பேச்சு? இப்போதே இங்கேயே களம் கண்டு இவன் கதையை முடி. இன்று யுத்தத்தின் 18ம் நாள்!
எண் விருத்தியில் முதல் விருத்தி 18 தான். கூடினாலும், கழிந்தாலும், வகுபட்டாலும், பெருகினாலும் தன்னிலை மாறாத ஒன்பதும், ஒன்று முதல் உள்ள ஒன்பதை பதின் மடங்காக்க முடிந்த பூஜ்ஜியமும் இந்த 18க்குள்ளேயே அடங்கிக் கிடக்கின்றன. இந்த நாளை விட்டுவிடக்கூடாது.
இந்த நாளே பேராசைக்கு முடிவு கட்டும் நாள்!
இந்த நாளே துரோகத்துக்கு தண்டனை தரும் நாள்!
இந்த நாளே உலகத்துக்கு பாடம் தரப்போகும் நாள்!
மனித வாழ்வின் மகிழ்வும், துக்கமும் இந்த 18 நாளுக்குள் தான் அடங்கியுள்ளது. கிருஷ்ணனை சரண் புகுந்ததால் நாம் உய்வு பெற்றோம். கிருஷ்ண சரணமே ஜெய சரணம்! இவனோ கிருஷ்ணனை இகழ்ந்தவன். இகழ்ந்தவன் முடிவை உலகம் காணட்டும். எடு உன் கதையை! முடி இவன் கதையை...!''
சகாதேவனின் விளக்கமும், தெளிவான கருத்தும் கிருஷ்ணனைக் கைதட்டச் செய்தது.
''சபாஷ் சகாதேவா... சபாஷ்! எண்ணெழுத்தில் எண்ணின் சிறப்பை நீ உணர்ந்து பேசிய பேச்சு. சரியான ஞானப் பேச்சு. அழியாப் பேச்சு... நீ கால ஞானி என்பதையும் கணிதப்புலி என்பதையும் நிரூபித்தாய்... கருவிகளால் யுத்தம் செய்வோருக்கு நடுவில் கருத்தால் நீ செய்த யுத்தம் அசாதாரணம்! வாழ்க சகாதேவா... வாழ்க நீ...!''
கிருஷ்ணன் வாழ்த்திட அதைக் கேட்ட துரியோதனன் ஆவேசமாகி ''அடேய் கணிதப்புலி... உன் 18ம் நாள் கணக்கை நான் பொய்யாக்குகிறேன். நான் ஒருவன் அழிக்கப்பட்ட 18 அக்ரோணி சேனைக்கு சமம் என்பதையும் நிரூபிக்கிறேன். யார் என்னோடு மோதப் போவது? தனித்தனியாகவா... இல்லை ஒட்டுமொத்தமாகவா?''
துரியோதனன் தொடை தட்டினான். பீமன் கதையோடு முன்சென்றான். தொடங்கியது மீண்டும் யுத்தம்!
- தொடரும்
இந்திரா சவுந்திரராஜன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X