'செல்பி' சிவன்!
அக்டோபர் 21,2018,08:03  IST

அக்.24 அன்னாபிஷேகம்

'பாட்டும் நானே; பாவமும் நானே' என்று சிவன் பாடலைக் கேட்டிருப்பீர்கள். 'பார்ப்பவனும் நானே; பார்க்கப்படுபவனும் நானே' என்ற கோலத்தில் சிவனை பார்த்திருக்கிறீர்களா...? அவர் தான் 'இம்மையிலும் நன்மை தருவார்' எனப்படும் 'செல்பி சிவன்'!
பாண்டிய மன்னர் மலையத்துவஜனுக்கு குழந்தைப்பேறு இல்லை. புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்த, யாகத்தீயில் இருந்து மூன்று வயது குழந்தையாக பார்வதி அவதரித்தாள். 'தடாதகைப் பிராட்டி' எனப் பெயரிட்டு வளர்த்தார் மன்னர். இளவரசியான அவள் மீன் போல துாங்காமல் நல்லாட்சி புரிந்ததால் 'மீனாட்சி' எனப்பட்டாள். உலகமே அவள் அழகைக் கண்டு சொக்க, அவளோ கயிலைநாதரான சிவனைக் கண்டு சொக்கினாள். அதனால் சிவனுக்கு 'சொக்கநாதர்' எனப் பெயர் ஏற்பட்டது.
மீனாட்சி - சொக்கநாதரின் மணவிழா மதுரையில் விமரிசையாக நடந்தது. அதன் பின் மதுரையின் மன்னராக சொக்கநாதருக்கு பட்டம் கட்ட ஏற்பாடு நடந்தது. அரியணையேறும் மன்னர்கள் முதலில் சிவபூஜை செய்வது வழக்கம். அதன்படி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சொக்கநாதரும், மீனாட்சியும் வழிபட்டனர். இதனடிப்படையில் எழுந்ததே மதுரை 'இம்மையிலும் நன்மை தருவார் கோயில்'. இப்பிறப்பிலேயே நமக்கு நன்மை தருபவர் என்பது பொருள். தன்னைத் தானே படம் பிடிப்பது போல, தனக்குத் தானே பூஜை செய்ததால் இவர் 'செல்பி சிவன்' என செல்லமாக அழைக்கப்படுகிறார். மதுரை ஆவணித்திருவிழாவில் மீனாட்சியம்மனுடன் சொக்கநாதர் இக்கோயிலுக்கு வந்து பூஜை நடத்துவார். கருவறையில் மீனாட்சி, சொக்க நாதர் மேற்கு நோக்கியும், நன்மை தருவார் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.
'மத்தியபுரி நாயகியம்மன் தனி சன்னதியில் தெற்கு நோக்கி இருக்கிறாள். திருமணத்தடை அகலவும், குழந்தைப் பேறு வாய்க்கவும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விளக்கேற்றுகின்றனர். காலபைரவருக்கு காரப்புளியோதரை படைத்தால் எதிரிபயம், மனக்குழப்பம் நீங்கும். எல்லாம் வல்ல சித்தருக்கு பூக்கூடை சாத்தினால் எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்தது நடந்தேற முருகனுக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
இத்தலத்தை தரிசித்து மனதிற்குள் சிவனை 'செல்பி' எடுங்கள். வாழ்வில் ஏற்றம் பெறுங்கள்.

எப்படி செல்வது: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில்
விசேஷ நாட்கள்: மாசியில் பிரம்மோற்ஸவம், சனிபிரதோஷம், மகாசிவராத்திரி
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:30 - 9:30 மணி
தொடர்புக்கு: 94434 55311
அருகிலுள்ள தலம்: 1 கி.மீ.,யில் மீனாட்சியம்மன் கோயில்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X