கேளுங்க சொல்கிறோம்!
மார்ச் 15,2019,14:50  IST

* சுபநிகழ்ச்சிகளை பகலில் நடத்துவது ஏன்?
ம.வேல்முருகன், புதுச்சேரி

நவக்கிரகங்களை வைத்து தான் சுபநிகழ்ச்சிகள் கணக் கிடப்படும். கிரகங்களின் நாயகரான சூரிய பகவானே மற்ற கிரகங்களுக்கு ஒளி ஆற்றலை வழங்குகிறார். எனவே சூரியன் இருக்கும் பகல் நேரம் சுபநிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

* முன்னோர் செய்த பாவம் அகல என்ன பரிகாரம் செய்யலாம்?
மா.மோகன், சென்னை

'பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளின் தலையில்' என்பார்கள். இப்பாவம் தீர உணவு, உடைகளை தானம் செய்யுங்கள். வாரம் ஒருமுறையாவது பசுவுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுங்கள்.

முதல் நாள் வைத்த பூ வாடாத போது அதை வைத்து வழிபடலாமா?
ஜி.நிர்மலா, கோவை

ஒருமுறை பூஜை முடிந்து, மறுமுறை பூஜை செய்ய தொடங்கும் போதே, பழைய பூக்களை நீக்கி விட்டு புதியதை வைத்து வழிபட வேண்டும். முதலில் சாத்திய பூக்களை 'நிர்மால்யம்' என்பர். இதை தலையில் சூடிக் கொள்ளலாம்.

தீட்சை என்றால் என்ன? பெறுவதற்கான தகுதி என்ன?
டி.இந்திராணி, சாத்துார்

'தீ' 'க்ஷா' என்னும் எழுத்துக்கள் அடங்கிய சொல் தீட்சை. 'தீ' என்றால் அறிவைக் கொடுப்பது. 'க்ஷா' என்றால் அறியாமையை அழிப்பது. அதாவது ஞானம் தர வல்லது தீட்சை. இதற்கான தகுதி ஆசைகளைக் குறைத்துக் கொண்டு வாழ்வதே.

விதிவழியே மதி (புத்தி) செல்லும் என்பது எதனால்?
கி.மாரியப்பன், விழுப்புரம்.

ஒருவரின் வாழ்க்கை இப்படித் தான் என்பதை நிர்ணயிப்பது விதி. வலிமையுடைய இதை 'ஊழ்' என்பர். தன் வழியில் செயல்படுத்த புத்தியை, விதி துாண்டும். இதையே 'விதி வழியே மதி செல்லும்' என்கின்றனர். கடவுளை சரணடைந்தால் மட்டுமே வெல்ல முடியும்.

கருக்கலைப்பு குறித்து ஆன்மிகம் என்ன சொல்கிறது?
பொன்.குமரவேல், ராஜபாளையம்

இதுவும் உயிர்க்கொலை தான்! இந்த பாவத்தை 'ப்ரூணஹத்தி' என்று சொல்வர். பிரம்மஹத்தி போல இந்த பாவமும் ஒருவரை பல பிறவிகளில் தொடர்ந்திடும். காசி, ராமேஸ்வரம் போன்ற புனித தீர்த்தங்களில் அடிக்கடி நீராடினால் தோஷம் அகலும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X