பச்சைப்புடவைக்காரி (45)
மார்ச் 15,2019,15:04  IST

அழைத்த குரலுக்கு வராத அன்னை

''அம்மா! மீனாட்சி! என அலறியவுடன் கோயிலில் காட்சி தருவது போல அப்படியே வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களே! சக மனிதர்களைப் போல நான் வருவதை ஏன் உணர மறுக்கிறீர்களே! இந்த நிகழ்வைப் பார்” என்றாள் பச்சைப் புடவைக்காரி.
மதுரையைச் சேர்ந்தவள் மாலதி. பொறியியல் படித்து மும்பையில் மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறாள். 29 வயது. அழகாக இருப்பாள். தன்னுடன் பணிபுரியும் வாசுவை காதலித்தாள். வாசு நல்லவன். இருவரும் ஒரே ஜாதி, ஒரே பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு இருக்க வாய்ப்பில்லை. அடுத்த முறை மதுரைக்குச் செல்லும் போது தன் காதலைப் பற்றி வீட்டில் சொல்லலாம் என்று நினைத்தாள் மாலதி. ஆனால் அதற்குள் பல விஷயங்கள் நடந்துவிட்டன.
திருமணம் முடிந்தபின் எந்த இடத்தில் வீடு பார்ப்பது என்று காதலர்களிடையே தொடங்கிய விவாதம் பெரிய சண்டையில் முடிந்தது. மூன்று ஆண்டாக பார்த்துப் பார்த்துக் கட்டிய காதல் கோபுரம் மூன்றே நிமிடத்தில் சரிந்தது.
அவளுடைய அலுவலகத்திலும் பிரச்னைகள். மேலதிகாரி அவளிடம் அத்துமீற முயற்சித்தான். மாலதி அவனைப் பற்றிப் புகார் செய்தாள். விசாரணை நடந்தாலும் கடைசியில் மாலதி சட்டீஸ்கர் மாநிலத்துக்கு மாற்றப்பட்டாள். மூன்று மாத அவகாசம் கேட்டாள். அதற்குள் வேறு வேலை தேட நினைத்தாள். இதற்கிடையில் மாலதியின் தந்தைக்கு மாரடைப்பு. அதில் அவளது சேமிப்பு எல்லாம் கரைந்தது.
மாலதிக்கு வாழ்வே வெறுத்துவிட்டது. மனஅழுத்தத்தில் சிக்கிக் கொண்டாள். மனம் ஒன்றி வேலை செய்ய முடியவில்லை. சிகிச்சைக்காக ராகவன் என்ற பிரபல மனநல மருத்துவரை பார்க்கச் சென்றாள். இரண்டு வாரத்திற்குப் பிறகே அவரைப் பார்க்க நாள் ஒதுக்கப்பட்டது. அன்று மருத்துவமனையில் இரண்டு மணி நேரம் காத்திருந்தாள்.
நேரமானதால் பொறுமை இழந்த மாலதி கோபத்தில் கத்தினாள். ''இங்கே இப்படித்தான். காத்திருந்தால் பார்க்கலாம். இல்லை என்றால் கிளம்பலாம். பணத்தைத் திருப்ப வாங்கிக்கலாம்.' என்று பதில் அளித்தார் மருத்துவரின் செயலர்.
வெறுப்புடன் வந்து சேரில் அமர்ந்தாள். அங்கு சுத்தம் செய்துகொண்டிருந்த வயதான ஊழியர் ஒருவர் அருகில் வந்தார்.
“தமிழா?” என்று மாலதியிடம் கேட்டார். அவளும் தலையாட்டினாள்.
“ஏன் தாத்தா இப்படி படுத்தறாங்க? மணிக்கணக்கா காத்திருக்கேன்.”
ஊழியர் கையிலிருந்த துடைப்பத்தை வைத்து விட்டு மாலதியின் அருகில் அமர்ந்தார்.
“டாக்டரு எப்பவுமே இப்படித்தாம்மா. காலைல ஆறுமணிலருந்து ஒரு நடிகையைப் பாத்துக்கிட்டு இருக்காரு. மெண்டல் கேஸ்ல நேரம் காலம் பார்க்கமுடியாதுன்னு சொல்றாங்கம்மா. நான் ஆத்தைக் கண்டேனா அழகரக் கண்டேனா, சொல்லு.”
“தாத்தா, நீங்க மதுரையா?”
“ஆமாம்மா.”
“நானும் தான். எனக்குப் பச்சைப்புடவைக்காரிதான் எல்லாமே. அவ ஏன் தாத்தா என்னை இப்படி படுத்தறா?”
“எந்த அம்மாவாவது தன் குழந்தையப் படுத்துவாளாம்மா? சரி...உன் பிரச்னைய இந்த கிழவன்கிட்ட சொல்லலாம்னா சொல்லும்மா.”
மனதில் இருந்ததையெல்லாம் கொட்டித் தீர்த்தாள் மாலதி. அவர் விஷயத்தைக் கேட்டவிதமே அவளின் மனதுக்கு இதமாக இருந்தது. சற்று கண்களை மூடி யோசித்த ஊழியர், “நான் ஒண்ணு சொன்னாக் கேப்பியா?” என்றார்.
'நிச்சயமா...''
“ என்னால இனிமே காத்திருக்கமுடியாதுன்னு சொல்லி பணத்தைத் திருப்பி வாங்கிட்டுப் போயிடு”
“என் பிரச்சினை?”
“முதல்ல உன் காதலனைக் கூப்பிட்டுப் பேசு. உன் பக்க நியாயத்தை விட்டுக் கொடுக்காத. ஆனா அவனோட நியாயத்தையும் கேளு. அவன் நல்லவனா இருப்பான்னு தோணுது. இந்தக் காலத்துல நல்லவன் கெடைக்கறது கஷ்டம்மா”
“அது சரி தாத்தா. என்னைப் பழி வாங்கணும்னு சட்டீஸ்கருக்கு மாத்திட்டாங்க தாத்தா.”
“அந்தக் கம்பெனில நீ வேலை செய்ய வேண்டாம்மா. உனக்கு இங்கேயே வேற ஒரு நல்ல கம்பெனில வேலை கிடைக்கும். கொஞ்சம் பொறுமையா இரும்மா. பச்சைப்புடவைக்காரி வழி காட்டுவாம்மா”
மாலதியின் கண்கள் நிறைந்தன.
“செம்பூர்ல எனக்குத் தெரிஞ்ச முதியோர் இல்லம் இருக்கு. அங்க வயசானவங்க நாற்பது பேர் இருக்காங்க. ஒரு நாள் அவங்க சாப்பாட்டுச் செலவ ஏத்துக்க. அவங்களோட உட்கார்ந்து சாப்பிடு. அவங்க உன்னை மனசார வாழ்த்தினா நீ நல்லா இருப்ப, கண்ணு.”
சாதாரண வார்த்தைகள் தான். வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரை தான். என்றாலும் அந்த ஊழியர் சொன்ன விதம், அவர் முகத்தில் இருந்த கனிவு மாலதிக்கு நம்பிக்கை அளித்தது. அவர் பேசப் பேச மாலதியின் மனதிலுள்ள முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்தன.
“தாத்தா ஒரு நிமிடம் காத்திருக்க
முடியுமா?” என்று சொல்லி மருத்துவரின் செயலரை நோக்கி ஓடினாள் மாலதி.
“என்னால் காத்திருக்க முடியாது. நான் கிளம்பறேன். நான் கட்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கறேன்னு சொன்னீங்களே?”
மாலதியிடம் கையெழுத்து வாங்கி விட்டு முன்பணமாகச் செலுத்திய ரூ 2500ஐக் கொடுத்தார் செயலர். அதை அந்த ஊழியரிடம் கொடுத்தாள் மாலதி.
“தாத்தா அப்படியே கிழக்க பார்த்து நில்லுங்க. ஆசீர்வாதம் பண்ணுங்க.”
“படிச்ச பொண்ணு இந்த வேலைக்காரக் கிழவன் கால்ல விழுந்துக்கிட்டு.. “
அதைப் பொருட்படுத்தாமல் விழுந்து வணங்கினாள் மாலதி. அந்த முதியவர் மாலதியை மனதார வாழ்த்தினார்.
மாலதி கிளம்பும் போது மருத்துவரின் செயலரிடம், “உங்க டாக்டர்
என்னைக் காக்க வச்சிக் கழுத்தறுத்தாரு.
ஆனா கூட்டிப் பெருக்குற இவரோ பிரச்னையத் தீர்த்து வைச்சாரு.
இவரு ஒரு கிளினிக் ஆரம்பிச்சா உங்க டாக்டரிடம் யாரும் வரமாட்டாங்க.”
மாலதி போய் இரண்டு நிமிடங்கள் ஆனவுடன் அந்த முதியவர், “இந்தாப்பா
இந்த பணத்தை அந்தப் பொண்ணு பேர்லயே வரவு வச்சிரு.” என்று மருத்துவரின் செயலரிடம் கொடுத்தார்.
“சிஸ்டர் என் கோட்டைக் கொண்டு வாங்க. ரவுண்ட்ஸ் போகணும்.” என்று நர்சிடம் சொன்னார் முதியவர் வேடத்தில் நின்ற மருத்துவர் ராகவன்.
நான் திகைப்பிலிருந்து மீளும் முன் பச்சைப்புடவைக்காரி தொடர்ந்தாள்.
“மாலதி காத்திருந்தபோது தன் அறையிலிருந்தே கேமரா மூலம் கண்காணித்து அவளைப் பற்றிய விவரங்களை சேகரித்து விட்டு,
ஊழியர் போல வேடமிட்டுகொண்டு
வந்து இதமாகப் பேசி அவள் வாழ்வில்
விளக்கேற்றி வைத்தார் அந்த மனநல மருத்துவர்.
அதே போல் நீங்கள் துன்பத்தில்
உழலும் போது நான் உன்னிப்பாகப் பார்க்கிறேன். கர்மக்கணக்கையும் பார்த்துக்கொண்டு கூப்பிட்ட குரலுக்கு ஊழியர் போன்றதொரு வேடத்தில் வருகிறேன். ஆனால் நீங்களோ மருத்துவர் பார்க்கவில்லையே என ஆத்திரப்படுகிறீர்கள். அழைத்த குரலுக்கு வராத நீயெல்லாம் தாயா என்று நீ கூட பழிக்கிறாய்!” என்றாள் பச்சைப்புடவைக்காரி.
“நான் வாழும் நாளெல்லாம் உங்கள் புகழ் பாடும் பெரும் பேற்றை எனக்குத் தந்தருளுங்கள் தாயே!” வழக்கம் போல் என்னை அழவிட்டுச் சிரித்தபடி மறைந்தாள் அந்தச் சிங்காரி.
இன்னும் வருவாள்
தொடர்புக்கு: varalotti@gmail.com

வரலொட்டி ரெங்கசாமி

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X