உன்னை அறிந்தால்.... (17)
மார்ச் 15,2019,15:06  IST

நல்ல நிலத்து பயிர்கள்


மனிதர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது... மற்றவரிடத்தில் மரியாதை. மரியாதை என்பது சுயகவுரவத்தைக் குறிக்கும் சொல்.
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்னும் வங்காள அறிஞர் ஒருவர் இருந்தார். எளிமையை விரும்பும் அவர், ஒருமுறை பெரிய வீட்டுத் திருமணம் ஒன்றிற்குச் சென்றார். விருந்துண்ணும் இடம் நோக்கிச் சென்றார் வித்யாசாகர். அங்கிருந்த காவலாளி அவரைத் தடுத்து, ''ஐயா! அந்தஸ்து மிக்கவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் இது. நீங்கள் இங்கு நுழைய அனுமதியில்லை. உங்களைப் போன்றவர்கள் சாப்பிட தனி இடம் அங்கே உள்ளது.'' என்று கை காட்டினான்.
உடனே வீடு திரும்பிய வித்யாசாகர், தனக்கு பரிசாக கிடைத்த ஆடம்பர உடையை அணிந்து மீண்டும் புறப்பட்டார். விருந்துண்ண அமர்ந்த வித்யாசாகர், இலையில் வைத்த பாயாச கிண்ணத்தை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு, ''சட்டையே! பாயாசம் குடி'' என்றார்.
அனைவரும் அதைக் கண்டு சிரித்தனர்.
''ஐயா! அறிஞரான தாங்களா இப்படி செய்வது?'' என திருமண வீட்டார் அவரைக் கேட்டனர்.
''எளிய உடையில் வந்த போது என்னை காவலாளி அனுமதிக்கவில்லை. ஆடம்பர உடையணிந்து வந்ததும் அனுமதித்தான். அவன் மரியாதை கொடுத்தது இந்த ஆடைக்குத் தானே! எனக்கில்லையே! அதனால் தான் உடைக்கு விருந்தளிக்கிறேன்'' என விளக்கினார்.
தவறை உணர்ந்த மணவீட்டார் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டனர்.
'வாழ்வின் பயன்'ஆடம்பரமாக வாழ்வதே என பலர் கருதுகின்றனர். பெற்றோர்களும் ஆடம்பர நாட்டத்துடன் பிள்ளைகளை வளர்ப்பது நல்லதல்ல. இந்த எண்ணம் கொண்டவர்கள் பொறாமையால் வழிதவறிச் செல்வர்.
பள்ளிப்பருவத்தில் திருட்டுப் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இவர்களை எப்படி திருத்துவது? சிறுவன் ரவி வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை கேளுங்கள்.
மோகனும், ரவியும் ஒரே வகுப்பு மாணவர்கள். நல்ல நண்பர்களும் கூட. வசதியான குடும்பத்தில் பிறந்தவன் மோகன். ரவியோ ஏழ்மையில் தவிப்பவன். மோகன் அடிக்கடி திண்பண்டம் கொண்டு வந்து ரவிக்கு கொடுப்பான்.
அத்தை, மாமா தனக்கு அளித்த அன்பளிப்பைக் காட்டி பெருமைப்படுவான். இதனால் மோகன் மீது பொறாமை கொண்டான் ரவி.
ஒருமுறை மாமா கொடுத்த விலை உயர்ந்த பேனாவைக் காட்டினான் மோகன். குறுகுறுவென பார்த்த ரவிக்கு ஆசை உண்டானது. பள்ளி முடியும் நேரத்தில் யாரும் பார்க்காத நேரத்தில் பேனாவை திருடினான். வீட்டுக்குப் போன மோகன் பேனா காணாமல் போனதை அறிந்தான். பெற்றோர் திட்டுவார்களே என்ற பயத்தில் அழுகை வந்தது.
அன்றிரவு ரவி படிக்காமல் அடிக்கடி பையில் எதையோ எடுப்பதும், வைப்பதுமாக இருப்பதைக் கண்டார் அவனது தந்தை. இரவில் அவன் துாங்கியபின் புத்தகப்பையைப் பார்த்த போது, விலை உயர்ந்த பேனா ஒன்று இருப்பது கண்டு திடுக்கிட்டார். மறுநாள் காலையில் ''புதுபேனா எப்படி கிடைச்சது ரவி ?'' எனக் கேட்டார்.
பதில் சொல்லாமல் நின்றான். நடந்ததைப் புரிந்து கொண்ட தந்தை, ''ரவி! பேனாவை இழந்தவனின் மனசு என்ன பாடுபடும்? அநியாயமா கிடைத்த பொருள் நமக்கு வேண்டாம். பேனாவை உரியவரிடம் ஒப்படைத்து மன்னிப்பு கேள். தவறை திருத்திக் கொள்வதற்காக வெட்கப்படத் தேவையில்லை'' என்று புத்திமதி கூறினார். தவறை உணர்ந்து தந்தையை அணைத்தபடி அழுதான்.
ரவியின் தந்தையைப் போல பிள்ளைகளை அன்புவழியில் திருத்த வேண்டும்.
ரவியைப் போலவே அவனது வகுப்பில் படித்த நீலாவின் வாழ்வில் நிகழ்ந்ததைப் பாருங்கள்.
சிறுவயதில் தந்தையை இழந்தவள் நீலா. தையற்கூடம் ஒன்றில் வேலை செய்த அவளது அம்மா, சொற்ப வருமானத்தில் கஷ்டம் தெரியாமல் மகளை வளர்த்தாள். ஒருநாள் தோழி மாலாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற நீலா. பட்டாடையில் ஜொலித்த மாலாவைக் கண்டாள். தன்னிடம் ஒரு பட்டுப்பாவாடை கூட இல்லையே என ஏக்கம் வந்தது.
தனக்கும் பிறந்தநாள் பரிசாக பட்டாடை வாங்க வேண்டும் என அம்மாவிடம் அடம் பிடித்தாள். இருவரும் கடைத்தெருவுக்கு புறப்பட்டனர். அப்போது இரண்டு பெரிய பைகள் நிறைய நீலாவின் பழைய துணிமணிகளை எடுத்துக் கொண்டாள் அம்மா.
''எதுக்குமா இதெல்லாம்'' என்றாள் நீலா.
''கடைக்குப் போறதுக்கு முன்னால சேரிப்பக்கம் இருக்கிற சின்ன குழந்தைகளுக்கு உன் பழைய டிரஸ்ைஸ கொடுத்துட்டுப் போகலாம்'' என்றாள் அம்மா.
இருவரும் சேரியை அடைந்தனர். குழந்தைகள் கிழிந்த ஆடையுடன் அங்குமிங்கும் திரிந்தனர்.
அவர்களை அழைத்து பழைய ஆடைகளைக் கொடுத்தாள் அம்மா. வாங்கிய குழந்தைகள் சந்தோஷத்தில் குதித்தனர். இதைக் கண்ட நீலா சற்று சிந்தித்தாள். வேண்டாம் என்று ஒதுக்கிய ஆடைகளை மகிழ்ச்சியுடன் வாங்கும் சேரி குழந்தைகளை விட, தன் வாழ்வில் படும் கஷ்டம் பெரிதல்ல என்ற உண்மை புரிந்தது. மேலும் இரவெல்லாம் கண் விழித்து அம்மா சேர்த்த பணத்தில் புது டிரஸ் இப்போது வாங்கணுமா?'' என்றும் யோசித்தாள்.
''வீட்டுக்கு கிளம்புவோமா அம்மா'' என்றாள் அம்மாவிடம்.
நீலாவிடம் ''நீயா இப்படி சொல்ற'' என்றாள் அம்மா.
''என்னோட தமிழ் ஐயா சொன்னது ஞாபகத்துக்கு வருதும்மா. காரில் போறவனை பார்க்காதே. கால் இல்லாதவனைப் பார். உன்னை குறையின்றி வாழ வைக்கும் கடவுளுக்கு தினமும் நன்றி சொல். இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்திடு. உழைப்பால் உயர்ந்திடு. இதெல்லாம் எனக்கு தேவையான பாடம் தானே அம்மா'' என்றாள்.
நீலாவை கட்டியணைத்தாள் அம்மா.
நல்ல நிலத்துப் பயிர்களாக குழந்தைகளை ஆளாக்கி பண்புடன் வாழச் செய்வது நம் கடமையல்லவா...
தொடரும்
அலைபேசி: 98408 27051

லட்சுமி ராஜரத்னம்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X