உன்னை அறிந்தால்... (18)
மார்ச் 22,2019,14:28  IST

நம்மை அழிக்கும் குணம்

கைவிட வேண்டிய பழக்கங்கள் எத்தனையோ நம்மிடம் இருக்கின்றன.
மது, மாமிசம், சிகரெட், சூதாட்டம் போன்றவை. இவை மற்றவர் கண்ணுக்குத் தெரியும். ஆனால் மனதிற்குள் புதைபொருளாக தீயகுணங்கள் சில இருக்கின்றன.
அதில் ஒன்று 'நான்' என்னும் கர்வம்.
வேலை தேடும் பருவத்தில் பொழுதுபோக்காக நண்பர்களுடன் சுற்றுவார்கள் இளைஞர்கள். நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தால் போதும்! அப்புறம் ஆட ஆரம்பித்து விடுவர்.
''டேய் வர்றியா? வழக்கமா சந்திக்கிற இடத்தில பேசலாம்'' என நண்பர்கள் விருப்பமுடன் கூப்பிட்டால் கூட அரட்டையும், சாலையோர டீக்கடையும் பிடிக்காமல் போகும்.
''என்னடா.. முன்ன மாதிரி நினைச்சீங்களா...உங்களோட சுத்துறதுக்கு; நான் என்ன வேலையில்லாதவனா?.'' என்பான்.
கடந்த காலத்தில், மற்றவர் காசில் பொழுது போக்கியதை மறந்து விட்டு, தன் சம்பளத்தை மற்றவர் கேட்பார்களோ என்ற எண்ணம் வந்து விடும்.
'நான் சம்பாதிக்கிறேன். என் வழி தனிவழி. மற்றவர்கள் எல்லாம் வெட்டிப் பசங்க' என தற்பெருமை பேசுவர். இந்த கர்வம் நண்பர்களை, உறவுகளை சற்று தள்ளி வைக்க நினைக்கிறது.
பணம் வரும் போது தான் குடும்பத்தை, நண்பர்களை மதிக்க, அரவணைக்க பழக வேண்டும்.
பதவி, பணம் வரும் போதே மனிதனுக்கு பணிவும் வர வேண்டும். கர்வப்பட்டவர்கள் அடைந்த கதியை, புராணங்கள் விளக்குகின்றன.
மகாவிஷ்ணுவின் தலையில் இருந்த கிரீடத்திற்கு 'தான்' என்ற கர்வம் இருந்தது. காரணம் ஓய்வெடுக்கும் நேரத்தில் கூட, கிரீடத்தை உயரமான ஆசனத்தில் வைத்திடுவார் சுவாமி. ஒருநாள் அவர் தன் கிரீடத்தை உயரத்தில் வைத்து விட்டு, அதனருகில் கீழே காலணிகளை விட்டுச் சென்றார்.
பின்னர் மகாலட்சுமியுடன் ஆர்வமாக பேசத் தொடங்கினார்.
காலணியை ஏளனமாக பார்த்த கிரீடம், ''காலில் கிடக்கும் உன்னை யாரும் மதிக்க மாட்டார்கள்'' எனத் துரத்தியது.
''என்னை பரிகாசம் செய்கிறாயே...சுவாமியை எதிர்க்கும் தைரியம் உண்டா உன்னிடம்?'' எனக் கேட்டது காலணி.
''கீழே கிடக்கும் உன்னிடம் எனக்கு என்ன பேச்சு?'' என்றது கிரீடம்.
''சுவாமியின் தலையில் இருப்பதால் தானே கர்வமாகப் பேசுகிறாய். யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வரும். மறக்காதே?''
''எல்லாம் பேசுவதற்கு பொருத்தம் தான்; ஆனால் உண்மையை யாரும் மறைக்க முடியாது'' என்றது கிரீடம்.
அதன் பின் காலணி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டது.
கிரீடத்தின் கர்வத்தைப் போக்க விஷ்ணுவும் முடிவு செய்தார். ராமாவதாரத்தின் போது அவர் 14 ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல நேர்ந்தது. தம்பி பரதனின் சார்பாக தன்னுடைய காலணிக்கு (பாதுகை) பட்டாபிஷேகம் நடத்தி அரியணையில் அமரச் செய்தார். அப்போது காட்டில் ஜடாமுடியுடன் இருந்த ராமர், கிரீடத்தை அணியவில்லை. இதன் பின் அதன் கர்வம் காணாமல் போனது.
வைகுண்டம் போலவே கைலாயத்திலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
ஒருமுறை பரமசிவனின் கழுத்தில் இருந்த பாம்பு, ''கருடா சவுக்கியமா?'' எனக் கேட்டது.
''இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே'' என்றது கருடன்.
இந்த உரையாடலில் ஒரு தத்துவம் ஒளிந்திருக்கிறது.
உயரப் பறக்கும் பறவை கருடன். ஆனால் அதன் கூரிய பார்வை தரையில் செல்லும் ஜந்துக்கள் மீதிருக்கும். பரமசிவன் கழுத்திலுள்ள பாம்பு தரையில் ஊர்ந்தால் ஒரு நிமிடத்தில் கருடனுக்கு இரையாகும். ஆனால் அதுவே சிவன் கழுத்தில் இருந்தால் எதிரியைக் கூட நலம் விசாரிக்கும் துணிச்சல் வந்து விடுகிறது.
கருடனும் 'நான் நலமாக இருக்கிறேன்' என்று சொல்லாமல் 'இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே' என்றது.
கருடனின் சொல்லாடல் அனைவருக்கும் பொருந்தும் அல்லவா?
எதிரியால் நெருங்க முடியாது என்ற நிலையிலும் கர்வப்படக் கூடாது. ஆனால் பாம்பின் கர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒருநாள் சிவபெருமானை தரிசிக்க நவக்கிரக நாயகர்கள், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் கைலாய மலைக்கு வந்தனர்.
அவர்கள் தரையில் விழுந்து வணங்க சிவனும் ஆசியளித்தார். அப்போது சுவாமியின் கழுத்தில் இருந்த பாம்பு அனைவரும் தன்னை வணங்குவதாக எண்ணியது.
அனைத்தையும் அறிந்தவர் அல்லவா சிவன்? பாம்பின் மீது சினம் கொண்டு கீழே வீசினார். அது பூலோகத்தில் விழுந்தது. விஷயம் அறிந்த நாரதர், '' ஏ! நாகப்பாம்பே! பணிவை விடச் சிறந்த பண்பு வேறில்லை. விநாயகருக்குரிய மந்திரத்தை ஜபித்து வா. விரைவில் துன்பம் தீரும்'' என உபதேசித்தார். அதன்படியே விநாயகரின் அருளால் சிவபெருமானின் ஜடாமுடியை அடைந்தது பாம்பு.
கர்வத்தால் பாம்பிற்கு நேர்ந்த கதியை பார்த்தீர்களா! பாம்பிற்கு உதவிட நாரதரே பூமிக்கு வந்தார். ஆனால் நமக்கு? எனவே, பணம், புகழ், சொத்து, அழகு என்று எதற்காகவும் கர்வம் கொள்ளாதீர்கள்.
தொடரும்
அலைபேசி: 98408 27051

லட்சுமி ராஜரத்னம்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X