உன்னை அறிந்தால்... (20)
ஏப்ரல் 05,2019,14:48  IST

கடவுள் எங்கே இருக்கிறார்?

உயிர்களுக்கு எல்லாம் படியளக்கப் புறப்பட்டார் சிவன். அவர் பணியைச் சரிவர செய்கிறாரா என சந்தேகித்தாள் பார்வதி. உணவு தேடி அலைந்த எறும்புகளை சிமிழ் ஒன்றில் அடைத்து விட்டு காத்திருந்தாள். சற்று நேரத்தில் சிவன் கைலாயம் வந்தார். சுவாமியைக் கண்டதும் வரவேற்ற பார்வதி பாதபூஜை செய்தாள்.
''சுவாமி! எல்லா உயிர்களுக்கும் படியளந்து விட்டீரா?'' என்றாள்.
''ஆயிற்றே...பார்வதி''
பலமாகச் சிரித்தவள், ''சுவாமி! இன்னும் சில எறும்புகள் உணவு சாப்பிடவில்லையே...''
''இருக்காது. அதனதன் வினைப்படி கிடைப்பது கிடைத்தே தீரும்'' என மறுத்தார்.
''இதோ! பாருங்கள்'' என்று சொல்லியபடி சிமிழைத் திறந்தாள். வாயில் அரிசியை கவ்வியபடி நின்றன எறும்புகள். தங்க மனம் கொண்ட தாயுமானவரைக் கண்டு கண்ணீ்ர் பெருக்கினாள்.
பக்தர் ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தை இனி பார்க்கலாம்.
பரமானந்தம் என்னும் பணக்காரர் ஒருவர் இருந்தார். கடவுளைக் காண வேண்டும் என தினமும் பிரார்த்தனை செய்து வந்தார். கனவில் தோன்றிய கடவுள், குறிப்பிட்ட நாளில் வீட்டிற்கு விருந்துண்ண வருவதாக தெரிவித்தார்.
மகிழ்ச்சியால் உறவினர் அனைவருக்கும் அந்த நாளில் கடவுளைக் காண வீட்டுக்கு வரும்படி அழைத்தார். இதை உண்மை என நம்பியவர்கள் தங்களின் குறையைச் சொல்லி முறையிட எண்ணினர். நம்பாதவர்களோ விருந்துண்ண வாய்ப்பு கிடைத்தாக கருதினர்.
குறிப்பிட்ட நாளில் அதிகாலையில் நீராடி கடவுளைக் காண தயாரானார் பரமானந்தம். உறவினர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.
காலை உணவாக இட்லி, பூரி, பொங்கல், வடை, கேசரி என பலகாரங்கள் தயாராயின. ஆனால் யாருக்கும் உணவளிக்கவில்லை. காரணம் கடவுள் சாப்பிடும் முன், யாரும் சாப்பிட வேண்டாம் என்பதில் பரமானந்தம் கறாராக இருந்தார். நேரம் கடந்ததால் அனைவரும் பசியால் வாடினர்.
தாமதமாகி விட்டதால் மதியம் கடவுள் வருவார் எனக் கருதிய பரமானந்தம், அதற்கு உணவு தயாரிக்க உத்தரவிட்டார். அதன் பின்னர் விருந்தினர்களுக்கு காலை உணவு பரிமாறச் சொன்னார். பணக்காரர் என்பதால் உறவினர்கள் யாரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்போது வாசலில் ''ஐயா... பசி உயிர் போகுதே!'' என்ற அவலக்குரல் கேட்டது. ஒரு பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தாள்.
அவளைக் கண்ட பரமானந்தம் சீறினார்.
''யாருடா அங்கே! இவளை துரத்துங்கடா! கடவுளுக்காக காத்திருக்கும் நேரத்தில் இவள் இங்கிருக்கலாமா?''
வேலைக்காரர்கள் அடிக்காத குறையாக விரட்டினர்.
மதிய உணவு தயாரானது. நேரம் கடந்ததே ஒழிய கடவுள் வந்தபாடில்லை.
உறவினர்களிடம் பரமானந்தர், ''பொறுத்திருங்கள்! கடவுளின் வரவுக்காக காத்திருப்பது புண்ணியமான செயல். அவருடன் சேர்ந்து உண்பது நமக்கெல்லாம் கிடைத்த பாக்கியம்'' எனச் சமாதானம் கூறினார்.
அப்போது முதியவர் ஒருவர் தள்ளாடியபடி வாசலில் நின்றார்.
''ஐயா! பசியால் வாடுகிறேன். கொஞ்சம் உணவிடுங்கள்'' என்றார்.
அவரைக் கண்டதும் பரமானந்தம் கோபத்தின் உச்சிக்கு போய் விட்டார்.
தடியைக் கையில் எடுத்து விரட்டத் துணிந்தார். முதியவரும் பேசாமல் இடத்தை விட்டு நகர்ந்தார். கடவுளுக்காக காத்திருப்பதில் இனி அர்த்தமில்லை என்ற எண்ணம் வரவே, படுக்கை அறைக்குள் சென்று, படுத்த சிறிது நேரத்தில் துாங்கி விட்டார்.
'' என்னை ஏமாற்றி விட்டீரே...
இது தான் உமது லட்சணமா!'' எனக் கடவுளிடம் கேட்டார்.
''பக்தனே..ஏமாற்றுவது எனது தொழில் அல்ல! தாயும், குழந்தையுமாக வடிவெடுத்து காலையில் உன் வாசல் தேடி வந்தேன். சீறிப் பாய்ந்தாய். மதியம் முதியவர் கோலத்தில் வந்த போது தடியால் விரட்டினாய். கருணை இல்லாத பக்தியாலும், ஈகை இல்லாத செல்வத்தாலும் பயனில்லை. எல்லா உயிர்களிலும் உள்ளிருப்பவன் நானே! இந்த உண்மையை அறியாமல் விருந்துக்கு அழைத்த உறவினர்களையும் அலட்சியப்படுத்தி விட்டாயே'' என்றார் கடவுள்.
தவறை உணர்ந்த பரமானந்தம் துாக்கத்தில் மட்டுமின்றி அறியாமையில் இருந்தும் விழித்துக் கொண்டார்.
தொடரும்
அலைபேசி: 98408 27051

லட்சுமி ராஜரத்னம்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X