பச்சைப்புடவைக்காரி (48)
ஏப்ரல் 05,2019,14:52  IST

தீயெனச் சுட்ட சொல்

அது சிக்கலான வருமானவரி வழக்கு. உதவி ஆணையரின் அணுகுமுறையும் கடுமையாக இருந்தது.
நீதி கேட்டு வரவில்லை. கருணை வேண்டி வந்திருக்கிறேன் என்று நான் கெஞ்சியும் கூட அவர் மசியவில்லை. வாடிக்கையாளர் செய்த குற்றத்திற்கு ஆடிட்டரான நானும் துணையிருந்ததாக என்னைக் கோபித்தார் உதவி ஆணையர். தீயாக சுட்டது அவர் பேச்சு. என்னால் தாங்க முடியவில்லை.
'எனக்கு உடம்பு சரியில்லை; விசாரணையை இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம்' எனச் சொன்னேன். வேண்டா வெறுப்பாகச் சம்மதித்தார்.
உடனே அலுவலகத்தை விட்டு வெளியேறி காரை நோக்கி நடந்தேன்.
“கூட வரலாமா?” குரல் வந்த திசையில் பச்சைப்புடவைக்காரி நின்றிருந்தாள்.
“நீங்கள் இங்கே...''
“கோயிலுக்கு வராததால் உன்னைப் பார்க்க நானே வந்தேன்”
'செய்யாத தவறுக்காக உதவி ஆணையர் வார்த்தைகளால் பொசுக்கிய போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?' - மனதிற்குள் நான் நினைப்பது அவளுக்கு புரிந்தது.
“தப்பெல்லாம் உன் வாடிக்கையாளர் மீது தான். அவரை வாடிக்கையாளராக வைத்திருப்பதே தவறு”
''என்ன செய்வது? பெரிய மனிதர்களின் சிபாரிசு என்பதால் நான் சூழ்நிலைக்கைதியாகி விட்டேன்''
அவளாக கதவைத் திறந்து காரில் அமர்ந்தாள். கையில் இருந்த கோப்புக்களை பின் இருக்கையில் கடாசிவிட்டு நானும் வண்டியை எடுத்தேன்.
“ஒருவர் உன்னை புண்படுத்தி பேசினால் நீ செய்ய வேண்டிய வேலையை ஞாபகப்படுத்துகிறார் என்பது பொருள். இல்லையெனில் உனக்கு நல்லது நடக்கப்போகிறது. அதற்கு முன் உன்னிடம் இருக்கும் பாவத்தைப் போக்க கடவுள் வழி செய்கிறார் என தெரிந்து கொள்”
சரிதான். யாராவது சுடுசொற்களைக் கேட்டு நற்செயலில் ஈடுபட்டிருக்கிறார்களா?
“ஏன் இல்லை? அங்கு நடக்கும் காட்சியைப் பார்.”
அது ஒரு பெரிய ஆஸ்ரமம். அனைவரும் பெண் துறவிகள். கல்லுாரி, பள்ளி, முதியோர் இல்லங்களில் சேவை செய்பவர்கள். தலைமை பெண் துறவிக்கு வயது அறுபது இருக்கும். அடுத்தவர் துன்பம் போக்குவதே சிறந்த வழிபாடு என்பதை லட்சியமாக கொண்டவர் அவர்.
அது ஒரு தீபாவளி சமயம். தலைமைத் துறவி ஆலோசனையின்படி ஆஸ்ரமத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றியுள்ள கிராமத்து குழந்தைகளுக்குப் புத்தாடை, இனிப்புகள் வழங்கச் சென்றனர். அதற்கு முன்னதாக குழந்தைகளின் தலையில் எண்ணெய் வைத்துக் குளிக்கச் செய்யவும் திட்டமிட்டிருந்தனர்.
அந்த முறை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றனர். பத்து வயதுள்ள சிறுமியின் தலையில் எண்ணெய் வைக்க முயன்றார் தலைமைத்துறவி.
“மாதாஜி.. உச்சந்தலையை மட்டும் தொடாதீங்க. வலி உயிர் போகுது.”
“ஏம்மா கண்ணு?”
“நீங்களே பாருங்க”
அவளின் தலைமுடியை விலக்கிப் பார்த்த துறவி அதிர்ந்தார். உள்ளே ரத்தமும் சீழுமாக இருந்தது. தலையில் காயம் ஏற்பட்டு பல நாளாகி இருக்க வேண்டும். உடனே சிகிச்சை செய்யாததால் புண்ணில் சீழ் பிடித்து விட்டது. சிறுமியின் தாயிடம் பேசினார் தலைமைத்துறவி
“என்னம்மா இது? மருத்துவமனைக்கு கூட்டிக்கிட்டுப் போயிருக்கலாம்ல? இப்போ ஆறியிருக்கும்ல?”
''நீ பெரிய சாமியாரு. கை, காலை பிடிச்சு விட ஆளுங்க நிறைய இருக்காங்க. மூணு வேளையும் வாய்க்கு ருசியா சோறு கெடைக்குது. நெனச்ச இடத்துக்குப் போக கார் இருக்கு. உனக்கு என்ன குடிகாரப் புருஷனா இருக்கான்? இல்லை பிள்ளை குட்டி இருக்கா? இல்ல, நாள் பூராவும் கூலி வேலை செய்யணுமா சொல்லு? குடும்ப வாழ்க்கையில மாட்டிக்கிட்டு முழிச்சாத் தானே எங்க கஷ்டம் தெரியும்.”
அங்கிருந்தவர்கள் வெகுண்டெழுந்தனர். அவர்களை கையமர்த்திவிட்டு, மென்மையாக ஆனால் உறுதியாகப் பேசினார் தலைமைத்துறவி.
“நீங்க இன்னும் குழந்தைக்கு ஏன் வைத்தியம் பார்க்கலைன்னு சொல்லவேயில்லை!”
“காலையில ஆறு மணிக்கு பஸ் ஏறினாப் பக்கத்து டவுனுக்குப் போக 11 மணியாயிரும். அங்க போனாத் தான் ஆஸ்பத்திரி திறந்திருக்குமா, டாக்டர் வருவாரா, மாட்டாரான்னு எல்லாம் புரியும். நானும் ரெண்டு தரம் போனேன். பசியோடக் காத்திருந்து டாக்டர் வராததால திரும்பி வந்திட்டேன். விதி விட்ட வழின்னு சும்மா இருந்திட்டேன்''
அவளது பேச்சு இதயத்தைக் கீறியது.
தலைமைத் துறவியின் கையைப் பற்றிய உதவியாளர். “நன்றி கெட்ட
மனிதர்களுக்கு ஏன் நாம் சேவை செய்ய வேண்டும்? வாங்கம்மா போகலாம். உங்க அருமை இவங்களுக்குத் தெரியாதும்மா”
“நாம போயிட்டா இந்தக் குழந்தை?”
தன்னை ஒருமையில் ஏசிய பெண்ணிடம் அன்பாக கேட்டார் தலைமைத் துறவி.
“சாப்பிட்டியாம்மா?”
“இல்ல.”
தலைமைத் துறவி கண் ஜாடை காட்ட சாப்பாடு உடனே வந்தது. அவர்கள் இருவரும் சாப்பிட்டதும் ஆணைகள் பிறப்பித்தார்.
“நாம வந்த வேனில் இந்தப் பொண்ணையும், குழந்தையையும் கூட்டிக்கிட்டு மருத்துவமனைக்குப்
போங்க. சிகிச்சை முடியற வரைக்கும்
கூடவே இருந்து பத்திரமா கூட்டிக்கிட்டு வாங்க.”
எல்லாம் முடிந்து ஆஸ்ரமத்துக்குத் திரும்ப பகல் மணி மூன்றானது. தன்னுடன் வந்த துறவிகளையும் பணியாளர்களையும் சாப்பிடச் சொல்லி விட்டுத் தன் அறைக்குச் சென்றார் தலைமைத் துறவி. அன்னை சாரதாம்பாவின் படத்தின் முன் மவுனமாக அமர்ந்தார்.
சாப்பிட வரும்படி உதவியாளர் அழைத்தும் செல்லவில்லை. ஆஸ்ரமத்தின் தலைமை அதிகாரியை சந்தித்தார்.
“ நீங்க எனக்கு ஒரு உதவி செய்தாகணும். இன்னும் ஒரு வாரத்துல ஆஸ்ரமத்துக்குள்ள வெளி நோயாளிகள் மருத்துவமனைக்கு ஏற்பாடு செய்யுங்க. முதல்ல கோயில ஒட்டி இருக்கற மண்டபத்துல ஆரம்பிப்போம். அப்புறம் தனியாக் கட்டடம் கட்டிக்கலாம். தினமும் மருத்துவர்கள் இங்கிருந்து இலவசமா மருத்துவ சேவை செய்யணும்”
வளாகத்தில் மருத்துவமனை தயாரானது. தன்னை அவமதித்த பெண்ணை வரவழைத்து மருத்துவமனையை திறந்தார் தலைமைத் துறவி. அவள் மன்னிப்பு வேண்டி அழுதபடி நின்றாள்.
“அன்னைக்கு என் கண்ணைத் தெறந்தம்மா... இன்னிக்கு இந்த இலவச மருத்துவமனைய தெறந்திருக்கம்மா.”
பச்சைப்புடவைக்காரி ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்தாள்.
“திட்டிய அந்தப் பெண் மீது துறவிக்கு கோபம் வரவில்லை. மாறாக அதிலுள்ள நியாயத்தைப் புரிந்து செயல்பட்டார். அந்த பக்குவம் உனக்கும் வர வேண்டும். திட்டி விட்டானே என வருந்திப் பயனில்லை புரிகிறதா?”
பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன். எழுந்த போது அவள் மறைந்தாள்.
அப்போது அலைபேசி ஒலித்தது. அது என்னைத் திட்டிய அதிகாரியின் அழைப்பு.
“ஆடிட்டர் சார், ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன். உங்க அண்ணனா நினைச்சு மன்னிச்சிடுங்க. நாளைக்குக் காலையில வாங்க! அந்த கேசை எப்படி முடிக்கலாம்னு பேசுவோம்”
என் மனம் பஞ்சு போல லேசாகி விட்டிருந்தது.
இன்னும் வருவாள்
தொடர்புக்கு: varalotti@gmail.com

வரலொட்டி ரெங்கசாமி

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X