தெய்வ தரிசனம் - 2 (24)
ஏப்ரல் 13,2019,10:14  IST

ஸ்ரீராம நவமி

தர்மத்தை நிலைநாட்ட பூமியில் அவ்வப்போது அவதரிக்கிறார் மகாவிஷ்ணு. இலங்கை மன்னரான அரக்கன் ராவணனை அழிக்க ராமராக அவதரித்தார். இது அவரின் ஏழாவது அவதாரம்.
ஸ்ரீராமர் பிறந்த போது வான மண்டலத்தில் ஐந்து கிரகங்கள் உச்சமாக பலம் பெற்றிருந்தன. ராமரின் ஜாதகத்தில் சூரியன் மேஷ ராசியிலும், செவ்வாய் மகரத்திலும், குரு கடகத்திலும், சுக்கிரன் மீனத்திலும், சனி துலாமிலும் உச்சத்தில் இருப்பது சிறப்பு. இவரது ஜாதகத்தை வீட்டில் வைத்து வழிபட்டால், கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். நோயில்லாத வாழ்வு கிடைக்கும். செல்வம் பெருகும். நிம்மதி நிலவும்.

ராமரின் அவதாரம் எப்படி நிகழ்ந்தது?
அயோத்தி மன்னர் தசரதருக்கு குழந்தை இல்லை. குலகுருவான வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டார். 'புத்திர காமேஷ்டி யாகம்' நடத்துமாறு சொன்னார். பிரம்மாண்ட யாகத்திற்கு ஏற்பாடானது. அதில் பிரசாதமாக பாயசம் கிடைத்தது. அதில் கால் பங்கை தசரதரின் முதல் மனைவி கோசலையும், மற்றொரு கால் பங்கை இரண்டாவது மனைவி கைகேயியும், அரை பங்கை மூன்றாவது மனைவி சுமத்ரையும் குடித்தனர்.
ராமனைப் பெற்றெடுத்தாள் கோசலை; பரதனைப் பெற்றெடுத்தாள் கைகேயி.
சுமத்ரைக்கு மட்டும் லட்சுமணர், சத்ருக்கன் பிறந்தனர்.
குழந்தைகளான காண நீண்டதுாரம் நடந்து வந்ததால் பலருக்கு சோர்வும், தாகமும் ஏற்பட்டது. அவர்களை குளிர்விக்க பானகம், நீர்மோர் கொடுத்து உபசரித்தார் மன்னர் தசரதர். இளைப்பாற விசிறியும் கொடுத்தார்.
எனவே ஸ்ரீராமநவமி கொண்டாட்டத்தின் போது பானகம், நீர்மோர் நிவேதனம் செய்து அக்கம்பக்கத்தினருக்கு கொடுத்து மகிழ வேண்டும். விசிறி, காலணி தானம் கொடுப்பது சிறப்பு.
ராமர் குறித்து காஞ்சிப்பெரியவர் சொல்லும் போது, '''ராமன்' என்றாலே 'ஆனந்தமாக இருப்பவன்; மற்றவர்களுக்கு ஆனந்தம் அளிப்பவன்' என்பது பொருள். எத்தகைய துன்பம் வந்தாலும், அதற்காக மனம் சலிக்காமல் மகிழ்ச்சியுடன் தர்மத்தை கடைபிடித்தவர் யார் என்றால் ஸ்ரீராமர் தான். வெளிப்பார்வைக்கு துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தார்.
சுக துக்கங்களில் மனம் ஈடுபடாமல் எப்போதும் தானும் மகிழ்ந்து, மற்றவரையும் மகிழச் செய்வதை 'யோகம்' என்று சொல்வர். அப்படி வாழ்ந்தவர் யோகி ஸ்ரீராமர்.
அவரை விட உயர்ந்தது 'ராம' என்னும் திருநாமம். அருளாளர்கள் சத்குரு தியாகராஜர், போதேந்திராள் போன்றவர்கள் ராம நாம மகிமையை இடைவிடாமல் ஜபித்து உலகிற்கு எடுத்துக் காட்டினர்.
சேது சமுத்திரத்தைக் கடக்க பாலம் தேவைப்பட்டது ராமருக்கு. அவரது துாதரான அனுமனோ ராம நாமத்தை ஜபித்தபடியே கடலைத் தாண்டினார்.
நமது எண்ணம், மனம், செயல் எல்லாம் 'ராம' நாமத்தில் ஒன்றுபட வேண்டும். இது தீய சக்திகளை நெருங்க விடாமல் தடுக்கும். ராம நாமம் ஜபிப்பவருக்கு அமைதி, பொறுமை, பணிவு, உண்மை மனதில் இருக்கும்.
அதிகாலையில் ஜபித்தால் அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.
முன் செய்த கர்மவினையால் துன்பப்படுபவர் கூட இதை ஜபிப்பதால் தப்பி விடலாம்.
காசியில் இறக்கும் உயிர்களின் காதில் ராம நாமம் ஓதி, மோட்சம் அளிக்கிறார் சிவபெருமான்.
காசி விஸ்வநாதர் கோயிலில் தினமும் மாலையில் வித்தியாசமான பூஜை நடக்கிறது. வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யும் போது அதில் 'ராம' என்னும் நாமத்தை சந்தனத்தால் எழுதி அர்ச்சனை செய்வர்.
ஸ்ரீராம நவமியான இன்று கோயில்கள், வீடுகள், பொது இடங்களில் சீதா கல்யாண வைபவத்தை நடத்துவர்.
ராம ஜென்ம பூமியான அயோத்தியில் பக்தர்கள் சரயு நதியில் புனித நீராடி ராமரை தரிசிப்பர். ராமர் கோயில்களில் தேரோட்டம் நடக்கும். பத்ராசலம், ராமேஸ்வரம், திருப்புல்லாணி, கும்பகோணம் ஆகிய கோயில்களில் கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும்.

ஸ்ரீராம நவமி விரதம் எப்படி மேற்கொள்வது?
காலையில் வீட்டு வாசலில், பூஜையறையில் கோலமிட வேண்டும். ராமர் படத்தை சுத்தம் செய்து, அதில் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். துளசி மாலையை அணிவித்து விளக்கேற்ற வேண்டும். அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் (அ) 'ராம ராம ராம' என்று சொல்லி அர்ச்சனை செய்து வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயை வைத்து நைவேத்யம் செய்ய வேண்டும். வாய்ப்பு இருந்தால் சுண்டல், பாயசம், பானகம், வடை, நீர் மோர், பஞ்சாமிர்தத்தை படைக்கலாம். விரதமிருப்போர் ராம நாமம் ஜபிக்கலாம் (அ) ராமாயணம் படிக்கலாம். 1008 முறை 'ஸ்ரீராம ஜெயம்' எழுதலாம். மாலையில் கோயில் வழிபாடு அவசியம்.
முடிந்தளவு பானகம், நீர்மோர், விசிறி தானம் செய்யலாம். ஸ்ரீராமரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

சுப்ரபாதம் பிறந்த கதை
காட்டில் நடத்தவிருந்த யாகத்துக்கு இடையூறு செய்யும் அசுரர்களை அடக்க விரும்பினார் ராஜரிஷி விஸ்வாமித்திரர். அதற்காக தசரதரின் மகன்களான ராமர், லட்சுமணரை தன்னுடன் அழைத்துச் சென்றார். இரவானதும் ஓரிடத்தில் விஸ்வாமித்திரர் துாங்கினார். அவர்களும் முனிவருக்கு அருகில் துாங்கினர். காலையில் கண் விழித்த விஸ்வாமித்திரர். அரண்மனையில் துாங்கும் தசரத குமாரர்கள் வெற்றுத் தரையில் துாங்குவது கண்டு நெகிழ்ந்தார். அவர்கள் கடமையாற்ற அழைக்க விரும்பி, 'கவுசல்யா சுப்ரஜா ராமா...' என அழைத்தார். இந்த நிகழ்வின் மூலம் முதன் முதலில் சுப்ரபாதம் பாடிய பெருமை விஸ்வாமித்திரரைச் சேரும்.

தரிசனம் தொடரும்
தொடர்புக்கு: swami1964@gmail.com

பி. சுவாமிநாதன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X