பேசும் திறனற்ற பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு ஒரு போதகர் சென்றிருந்தார். அந்த வகுப்பறையிலுள்ள கரும் பலகையில் யாரோ ""என்னைப் பேசவும் கேட்கவும் கூடியவனாகவும், உங்களைப் பேசவும் கேட்கவும் கூடாதவர்களாகவும் கடவுள் ஏன் படைத்தார்?'' என்று எழுதி வைத்திருந்தார்கள். இந்தக் கேள்வி அந்த வகுப்பறைக்குள் நுழைந்த போதகருக்கும், பிள்ளைகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தேவஊழியர் அந்தக் கேள்விக்குரிய பதில் ஏதும் பேசாமல், ஏதோ சில விஷயங்களைப் பற்றிப் பேசினார். அவர் பேசியதில் அவருக்கே திருப்தியில்லை. அக்கேள்வியின் பதிலை தங்களுக்கு சொல்வார் என்று பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு சிறுவன் எழுந்தான். அவனது உதடுகள் ஏதோ பேசத்துடித்தன. கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. துரிதமாக கரும் பலகையின் அருகில் வந்து சாக்பீசை எடுத்து, ""கர்த்தாவே, உம்முடைய பார்வைக்கு யாவும் நலமாயிருக்கிறது,' என்று எழுதினான். என்ன ஆச்சரியமான பதில்! அதாவது, "கடவுளின் பார்வைக்கு எல்லாமே நலமாய் தான் இருக்கிறது. அவர் பேசுபவர்கள், பேசாதவர்கள், பார்வையற்றவர்கள், பார்வையற்றவர்கள் எல்லாரையும் படைத்திருக்கிறார். எல்லாரையுமே ஒன்று போலத்தான் பார்க்கிறார்' என்ற பொருள்பட இந்தப் பதில் அமைந்திருந்தது. ஆண்டவர் மீது எவ்வளவு விசுவாசம் வைத்திருந்தால், தனக்கு தரப்பட்ட, பேசும் திறனற்ற தன்மையையும் கூட ஆண்டவரால் அளிக்கப்பட்ட பரிசாக ஒருவன் கருதமுடியும்! ஆம்...வாழ்க்கையில் எல்லாமே நல்லதாக நடக்க வேண்டுமென நாம் விருப்பப்படுகிறோம். அவ்வாறு நடக்கும் போது ஆண்டவரை வாழ்த்துகிறோம். திடீரென சிறு குறைபாடு ஏற்பட்டு விட்டால் கூட அவரைக் கடிந்து கொள்கிறோம். இந்தப் போக்கைத் தவிர்க்க வேண்டும். நமக்கு தரப்பட்ட குறைகளையும் கூட நிறையாகவே பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.