தெய்வ தரிசனம் - 2 (28)
மே 19,2019,08:08  IST

நரசிம்ம ஜெயந்தி

அசுரர்களை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவ்வப்போது மண்ணில் அவதரிக்கிறார் மகாவிஷ்ணு. அவர் நிகழ்த்திய பத்து அவதாரங்களில் நான்காவது நரசிம்ம அவதாரம்.
'நரன்' என்றால் மனிதன். 'சிம்மம்' என்றால் சிங்கம். 'நரசிம்மம்' என்றால் மனிதனும், சிங்கமும் கலந்த உருவம். இதனை நரசிம்மம் (அ) நரசிங்கம் என்று சொல்வர்.
சிங்க முகத்துடன் அவதரித்த மகாவிஷ்ணு, அசுரனான இரண்யனைக் கொன்று தர்மத்தின் வடிவாக இருந்த பிரகலாதனைக் காத்தார். பாகவதம், அக்னி புராணம், கூர்ம புராணம், சிவ புராணம், கந்த புராணம் உள்ளிட்ட நுால்கள் நரசிம்மர் பற்றி விளக்குகின்றன.
யார் இந்த இரண்யன்? அவனை மகாவிஷ்ணு ஏன் அழித்தார்?
இரண்யாட்சன், இரண்யன் என இரு அசுரர்கள் சகோதரர்களாக பிறந்தனர். இருவரும் அதர்மத்தின் வடிவமாக விளங்கினர்.
தேவர்களின் வேண்டுகோளை ஏற்று இரண்யாட்சனை முதலில் அழித்தார் மகாவிஷ்ணு. இதைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் மகிழ்ந்தனர்.
தனது சகோதரனைக் கொன்றதால் இரண்யனின் கோபம் அதிகரித்தது. பழிக்குப் பழி வாங்க நினைத்தான். தன்னை மேலும் வலிமைப்படுத்த பிரம்மாவை நோக்கி தவமிருந்தான்.
பிரம்மா காட்சியளித்து, 'என்ன வரம் வேண்டும்?'' எனக் கேட்டார்.
''மனிதர், மிருகம், பறவைகளால் அழிவு நேரக் கூடாது. பகலிலோ, இரவிலோ, வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ சாகக் கூடாது. எந்த ஆயுதத்தாலும் இறக்க கூடாது. பூமியிலோ அந்தரத்திலோ என் முடிவு நிகழக் கூடாது'' என வரம் கேட்டான்.
புன்னகைத்த பிரம்மாவும் சம்மதித்தார். புத்திசாலித்தனமாக வரம் பெற்றதாக புறப்பட்டான் இரண்யன். இதன் பின், '' எல்லா உலகங்களுக்கும் நானே கடவுள்! எல்லா உயிர்களுக்கும் நானே தலைவன்! யாரும் தனக்கு நிகரில்லை'' என பிரகடனபடுத்தினான். மகாவிஷ்ணுவை யாரும் வணங்கக் கூடாது; தன்னையே வணங்க வேண்டும் என்றான். 'ஓம் இரண்யாய நம:' என்னும் மந்திரத்தை அனைவரும் உச்சரிக்க வேண்டும் என உத்தரவிட்டான்.
எல்லா உயிர்களையும் துன்புறுத்தினான். எவராலும் அவனை அடக்க முடியவில்லை.
இந்நிலையில் இரண்யனை அடக்குவதற்காக ஒரு மகன் வந்தான். இரண்யன்- கயாது தம்பதிக்குப் பிறந்த அசுரகுல வாரிசு தான் பிரகலாதன். உலகமெல்லாம் இரண்யனை வணங்க...பிரகலாதன் மட்டும் 'ஓம் நமோ நாராயணாய நம:' என்று முழங்கினான்.
இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
பிரகலாதன் தனது தாயின் வயிற்றில் இருந்த காலத்தில் நாரதர் ஒரு நாள் இரண்யனின் அரண்மனைக்கு வந்தார். அப்போது கயாதுவின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு ' ஈரேழு உலகத்துக்கும் தலைவன் மகாவிஷ்ணுவே. அவருக்குரிய மந்திரம் இதுவே' என்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார்.
அதன் படியே பின்னாளில் மந்திரத்தை உச்சரித்தான் பிரகலாதன். அசுரகுருவான சுக்ராச்சாரியார் பிரகலாதனுக்குப் பாடம் எடுத்தார். ஒவ்வொரு முறையும் அவர் 'ஓம் இரண்யாய நம:' என்று சொல்லும் போதெல்லாம் 'ஓம் நமோ நாராயணாய நம:' என்றே சொன்னான். இந்த விஷயம் தந்தையான இரண்யனை எட்டியது.
'என்னடா இது... தன் மகனே எதிரியின் பெயரை (மகாவிஷ்ணு) துதிக்கின்றானே' என ஆச்சரியப்பட்டான். தொடக்கத்தில் மென்மையாக கண்டித்தான் இரண்யன். பிரகலாதன் கேட்பதாக தெரியவில்லை. அதன் பின் சிறுவன் என்றும் பார்க்காமல் கொல்வதற்கு பலமுறை முயற்சித்தான். பிரகலாதனின் பக்தியுணர்வு ஒவ்வொரு முறையும் காப்பாற்றியது.
'' உயிர் தப்புகிறாயே எப்படி?'' எனக் கேட்டான் இரண்யன்.
'' மகாவிஷ்ணுவே என்னைக் காக்கிறார். அனைவரும் அவரையே வணங்க வேண்டும்'' என்றான் பிரகலாதன்.
கோபம் கொப்பளிக்க ''எங்கே அந்த விஷ்ணுவை காட்டு'' என்றான் இரண்யன்.
''அவன் எங்கும் நிறைந்திருக்கிறான்''
'' எங்கே... எங்கே அவனைக் காட்டு பார்க்கலாம்''
''அவர் துாணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்.''
''இதோ, இந்த துாணில் நீ வணங்கும் மகாவிஷ்ணு இருக்கிறானா?'' என ஒரு துாணைக் காட்டிக் கேட்டான் இரண்யன்.
கைகூப்பியபடி பிரகலாதன் ''இருக்கிறார்'' என்றான்.
அவ்வளவு தான். தனது கதாயுதத்தால் அந்த துாணைப் பிளக்க முயற்சித்தான் இரண்யன்.
அது பிரதோஷ நேரம். அதாவது, பகலும், இரவும் அல்லாத நேரம். பகலிலோ (அ) இரவிலோ கொல்லக் கூடாது என்ற வரம் மீறப்படவில்லை.
கதாயுதத்தால் துாணைப் பிளந்தான் இரண்யன். அது இரண்டாகப் பிளந்தது. நரசிம்மம் வெளியே வந்தது. அக்னி ஜுவாலை போன்ற கண்கள். அகன்ற வாய். கூரிய பற்கள். சிம்மத்தின் கர்ஜனை காண்போரை மிரட்டியது.
இங்கேயும் இரண்யன் பெற்ற வரம் மீறப்படவில்லை. அதாவது மனிதனாலோ, மிருகத்தாலோ, பறவையாலோ இறப்பு நிகழக் கூடாது. மனிதனும் மிருகமும் இணைந்தது தானே நரசிம்மம்.
கர்ஜனையுடன் வந்த நரசிம்மத்துடன் போர் புரிய முயன்றான் இரண்யன்.
அப்படியே அவனை கைகளால் துாக்கி, உள்ளும் இல்லாமல், வெளியும் இல்லாமல் நிலைப்படியில் அமர்ந்தது நரசிம்மம். பூமியிலோ, அந்தரத்திலோ என் இறப்பு கூடாது எனக் கேட்டிருந்தான் அல்லவா? நரசிம்மம் இரண்யனை வாரிச் சுருட்டித் தன் மடியில் வைத்துக் கொண்டது.
அசுரனான இரண்யன் ஆடிப் போனான். கூரிய நகங்களால் இரண்யன் மார்பை கிழித்து அவனது குடலை மாலையாக கழுத்தில் சுற்றிக் கொண்டு கர்ஜித்தது நரசிம்மம். ஆயுதங்களால் இறக்கக் கூடாது என்ற வரமும் மீறப்படவில்லை.
பக்தனான பிரகலாதனுக்காக உடனடியாக துாணில் இருந்து கிளம்பியதால் 'நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை' என்பார்கள்.
இரண்யனைக் கொன்ற பிறகும், நரசிம்மத்தின் சீற்றம் தணியவில்லை. சிவன், மகாலட்சுமி, தேவர்களாலும் அமைதிப்படுத்த முடியவில்லை. பிரகலாதனை அழைத்து வந்து நரசிம்மத்தின் முன் நிறுத்தினார்கள் தேவர்கள். பிரகலாதனின் ஆழ்ந்த பக்திக்குக் கட்டுப்பட்டு உக்கிரத்தைக் குறைத்தார் நரசிம்மர்.
அவரே உக்கிர நரசிம்மர், வீர நரசிம்மர், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என பல வடிவங்களில் கோயில்களில் காட்சியளிக்கிறார்.
ஆந்திராவிலுள்ள அகோபிலம் நவநரசிம்மர், மங்களகிரி பானக நரசிம்மர், மட்டபல்லி நரசிம்மர் கோயில்கள் சிறப்பானவை.
தமிழகத்தில் நாமக்கல், தாம்பரம் அருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோவில், சோளிங்கர், பரிக்கல், பூவரசன்குப்பம், கீழப்பாவூர், மதுரை யானைமலை, ஸ்ரீரங்கம் காட்டழகிய நரசிம்மர் மற்றும் மேட்டழகிய நரசிம்மர் போன்றவையும் விசேஷமானவை.
வைகாசி மாதம் வளர்பிறை 14ம் நாளான சதுர்த்தசியில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது. இந்நாளை ' நரசிம்ம ஜெயந்தி' யாக கொண்டாடுகிறோம்.
இந்நாளில் விரதமிருந்து நரசிம்மரை தரிசித்தால் விருப்பம் நிறைவேறும்.
செவ்வரளி மாலை, பெருமாளுக்கு உகந்த துளசிமாலைகளை அவருக்கு அணிவிக்கலாம். பானகம், சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம். மனதிலுள்ள அசுரகுணங்களை அகற்றினால், நரசிம்மரின் அருள் கிடைக்கும். ஜெய் நரசிம்மா!
தரிசனம் தொடரும்
தொடர்புக்கு: swami1964@gmail.com

பி. சுவாமிநாதன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X