உன்னை அறிந்தால்... (25)
மே 19,2019,08:11  IST

சொன்ன சொல்லை காப்பாற்று

உண்மை, அன்பு, நன்றி, கொடுத்த வாக்கை காப்பாற்றுதல் போன்ற நல்ல பண்புகளை மாணவப்பருவத்தில் பள்ளிகளில் கேட்டதோடு மறந்து விட்டோம். நல்லதை மனதில் பதிக்கிறோமோ, வாழ்வில் பின்பற்றுகிறோமா என்பது தானே முக்கியம்.
தேர்வில் மதிப்பெண் பெறுவது மட்டும் முக்கியமில்லை. நம் வாழ்வும் மதிப்பு மிக்கதாக இருப்பது முக்கியம். அதற்கு நல்ல பண்புகளை பின்பற்றும் மனம் வேண்டும். 'நல்ல மனம் வேண்டும்! நாடு போற்ற வாழ!' என்ற பாடல்வரி திரைப்படம் பார்க்கும் வரையில் தான் நினைவில் நிற்கிறது. அதன்பின் காற்றோடு போய் விடுகிறது.
கொடுத்த வாக்கை காப்பாற்றுவதை 'நாணயம்' என்பார்கள். உள்ளத்தில் உண்மை இருந்தால் மட்டுமே வாக்கை காப்பாற்றும் எண்ணம் வரும். ஆனால் சிலர் பேச்சுக்கு 'காட் பிராமிஸ்' என்று கடவுள் மீது சத்தியம் செய்வார்கள். ஆனால் யாராவது கேட்டால் 'ஒரு பேச்சுக்கு சொன்னா... அதைப் போய் பெரிசா கேட்க வந்துட்டியே!'' என்பார்கள்.
ஆனால், ராமாயண காவியத்தில் தன் மனைவிக்கு கொடுத்த வாக்குக்காக உயிரை கொடுத்தார் தசரத சக்கரவர்த்தி.
எதற்காக கொடுத்தார்? எப்போது கொடுத்தார்? கதைக்குள் நுழைவோம் வாருங்கள்!
ஒருமுறை தேவருக்கும், அசுரருக்கும் போர் மூண்டது. அதில் தேவர்களின் சார்பாக பங்கேற்றார் தசரதர். அவரது மனைவியான கைகேயி தேரோட்டுவதில் கெட்டிக்காரி. கணவருடன் தேர் மீதேறிப் புறப்பட்டாள். போர் மும்முரமாக நடந்த போது, அச்சாணி கழன்றது. தேர் கவிழும் நிலையில், தனது கட்டை விரலை அச்சாணியாக செலுத்தி நிலைமையை சமாளித்தாள் கைகேயி. முடிவில் தேவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அதற்கு காரணமான இருந்த தசரதரை அவர்கள் பாராட்டினர். தனக்கு துணைநின்ற கைகேயியிக்கு நன்றி தெரிவித்தார் தசரதர். உதவியவருக்கு பரிசளித்து நன்றி பாராட்டுவது முறையல்லவா!
மனைவிக்கு ஒன்றுக்கு இரண்டாக வரங்களை அளித்தார் தசரதர். அதை உடனே ஏற்காத கைகேயி, தேவைப்படும் நேரத்தில் கேட்பதாக தெரிவித்தாள். இப்போது உங்களின் மனதில் சந்தேகம் எழலாம். பெண்களின் கைகளை மலர் போன்றது என்பார்களே. கைகேயியின் கைகள் மட்டும் எப்படி இரும்பாக மாறியது என்ற கேள்வி எழும்.
கைகேயி சிறுமியாக இருந்த போது நடந்த சம்பவத்தை படித்தால் விடை கிடைக்கும்.
ஒரு சமயம் துர்வாசரைப் போன்ற மகரிஷி ஒருவர், கேகய நாட்டின் அரண்மனைக்கு வந்தார். அப்போது கைகேயி சிறுமியாக இருந்தாள். ஒருநாள் மகரிஷி உறங்கிய போது, குறும்புத்தனமாக அவரது முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளிகளை குத்தி விட்டாள் கைகேயி. துாங்கி எழுந்த மகரிஷியைக் கண்டதும் பணியாளர்களால், சிரிப்பை அடக்க முடியவில்லை. விஷயம் அறிந்ததும் மகரிஷியின் கண்கள் சிவந்தன. பயந்து போன கைகேயி, ''தவசீலரே! விளையாட்டுத்தனமாக செய்த என்னை மன்னியுங்கள்'' எனக் கதறினாள்.
அப்போது கைகேயியின் தந்தையும் மன்னிப்பு கேட்டதோடு, கைகேயி தங்களுக்கு பணிவிடை செய்து பரிகாரம் தேடுவாள் என்றும் தெரிவித்தார். இதைக் கேட்ட மகரிஷி அமைதியானார். அதன்பின் கைகேயி, பணிப்பெண்ணாக அவருக்கு சேவை செய்தாள். சில நாட்களுக்கு பின் அரண்மனையை விட்டு கிளம்பிய மகரிஷி'' எனக்கு பணிவிடை செய்த கைகேயியிக்கு வரம் அளிக்க விரும்புகிறேன். தேவையான சந்தர்ப்பத்தில் உனது கைகள் இரும்பின் வலிமை பெறும்'' என்றார். அதன்படியே கைகேயி விரல் தசரதரின் தேருக்கு அச்சாணியாக மாறி உதவியது.
அதற்கு நன்றியாக தசரதர் கொடுத்த வரத்தை கேட்க துணிந்தாள் கைகேயி. எப்போது தெரியுமா?
ராமருக்கு பட்டாபிேஷகம் நடத்த ஏற்பாடு செய்தார் தசரதர். அந்நிலையில் கைகேயி வரத்தை கொடுக்கும்படி கணவரிடம் கேட்டாள். 'ஒரு வரத்தால் என் மகன் பரதன் நாட்டை ஆள வேண்டும்' என்றும், 'இன்னொரு வரத்தால் ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டும்' என்றும் கேட்டாள். அதன்படியே ராமரைப் பிரிய மனமில்லாத தசரதரின் உயிர் பிரிந்தது. ஆனால், கொடுத்த வாக்கை தசரதர் நிறைவேற்ற தவறவில்லை.
தந்தையைப் போலவே மகனும் சொன்ன சொல் தவறாதவராகவே இருந்தார். 'ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்' என்று ராமபிரானைக் குறிப்பிடுவார்கள். மனைவி சீதைக்கு அவர் கொடுத்த உறுதிமொழி என்ன தெரியுமா? ''இந்த பிறவியில் இரு மாதரை என் சிந்தையாலும் தொடேன்'' என்பது. அதாவது சீதையைத் தவிர வேறு எந்த பெண்ணையும் மனதாலும் நினைக்க மாட்டேன். இந்த உறுதிமொழியை ஒவ்வொரு ஆணும் பின்பற்றினால் 'பாலியல் கொடுமை' என்ற சொல்லுக்கு அகராதியில் இடம் இருக்காது.
உயிரே போனாலும் கொடுத்த வாக்கை காக்க வேண்டும் என்கிறது ராமாயணம். வேதவாக்காக நாமும் அதை பின்பற்றுவோமா!
தொடரும்
அலைபேசி: 98408 27051

லட்சுமி ராஜரத்னம்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X