திருடனை திருத்திய குடும்பம்
மே 26,2019,08:41  IST

ரத்னாகரன் என்பவன் காட்டு வழியில் போவோரை எல்லாம் தாக்கி பணம், நகைகளைப் பறித்து வந்தான்..
ஒருநாள் நாரத மகரிஷி வந்த போது, கத்தியைக் காட்டினான் ரத்னாகரன்.
“ஏனப்பா! உனக்கு என்ன கெடுதல் செய்தேன்? எதற்காக கொல்ல வருகிறாய்?” எனக் கேட்டார் நாரதர்.
“நீர் எனக்கு கேடு செய்யவில்லை. எனக்குத் தேவை உம்மிடமுள்ள பொருட்கள். தந்தால் விடுகிறேன்'' என்றான்.
“அது சரி... திருடுவதை கைவிட்டு, இயற்கையாக விளையும் கிழங்கு, பழங்களைச் சாப்பிட்டு வாழக் கூடாதா?”
“நீர் சொல்வது எனக்கு மட்டுமே சரியாக இருக்கும். ஆனால், என் குடும்பத்தினர் வசதியாகவே வாழ விரும்புகின்றனர். அவர்களுக்காகவே திருடுகிறேன்.” என்றான்
“கொலையும், திருட்டும் பாவம் அல்லவா...உன் குடும்பத்தினருக்காக செய்வதாக சொல்கிறாயே! உன் பணத்தில் வாழும் அவர்கள், உன் பாவத்தை பங்கிட்டால் பெறுவார்களா?'' எனக் கேட்டார்.
“தெரியவில்லையே” என விழித்தான் திருடன்.
“காத்திருக்கிறேன். உன் வீட்டாரிடம் கேட்டு வந்து சொல்” என்றார்.
அசட்டுத்தனமாக சிரித்தான் ரத்னாகரன்.
“சரியான ஆளாப்பா நீர். நான் போனதும் தப்பித்து ஓடுவதற்கா?'' என்றான்.
''வேண்டுமானால் இந்த மரத்தில் கட்டி வைத்து விட்டுச் செல்” என்றார். அவனும் அப்படியே செய்தான்.
வீட்டுக்குப் போய் தந்தையிடம், “நான் திருடிய பணத்தில் தானே சாப்பிடுகிறீர்கள். என் பாவத்தில் ஒரு பகுதியை வாங்கிக் கொள்வீர்களா?” எனக் கேட்டான்.
“மகனே! பெற்றோரைக் காப்பது பிள்ளையின் கடமை. நீ எந்தத் தொழில் செய்தால் என்ன? இதற்காக உன் பாவத்தில் பங்கு பெற முடியாது'' என்றார். தாயிடம் கேட்க அவளும் அதே பதில் கிடைத்தது. மனைவியோ, '' உமக்கு என்ன ஆயிற்று? ஏன் பிதற்றுகிறீர். மனைவியைக் காப்பது ஆண்களின் கடமை தானே! அதற்காக உம் பாவத்தை ஏற்க எனக்கென்ன தலைவிதியா?” என்றாள்.
மகனும், “அப்பா! பெரியவனாகி பணம் சம்பாதித்து நான் உங்களுக்கு சோறிடுவேன். ஆனால், அதற்காக பாவத்தை ஏற்க மாட்டேன்'' என்றான்.
'என் பணத்தை பெற விரும்பும் இவர்கள், பாவத்தை ஏற்க மறுக்கிறார்களே! இவர்களுக்காக ஏன் பாடுபட வேண்டும்?' என சிந்தித்தபடியே காட்டிற்கு திரும்பினான். அதன் பின் அவரது அறிவுரையால் ராம நாமத்தை இடைவிடாமல் ஜபித்தான். தவத்தில் ஈடுபட்ட அவனே 'வால்மீகி' என்னும் மகரிஷியாகி ராமாயணத்தை எழுதும் பாக்கியம் பெற்றான்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X