நல்லதை உடனே செய்யுங்கள்
ஜூன் 14,2019,14:33  IST

கைலாசம் என்றொரு சிவபக்தர் இருந்தார். தினமும் கோயிலுக்கு செல்வார். அங்கு கிடைக்கும் பிரசாதத்தை சாப்பிடுவார். ஆனால் சுவாமிக்கு ஒரு கற்பூரம் கூட ஏற்ற மாட்டார். ஒருநாள் திடீரென அவர் மனதில் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவரது வீட்டில் தங்கத்துகள்கள் நிறைய இருந்தது. அதில் சிறிதளவு ஏழைகளுக்கு தானம் செய்யலாம் என விரும்பினார். தன் மனைவி தையல்நாயகியிடம் விஷயத்தை தெரிவித்தார்.
“சிறிதளவு தங்கம் கொடுத்தால் யாருக்கும் பயன்படாது. எப்போதெல்லாம் தானம் செய்ய தோன்றுகிறதோ, அப்போது சிறிதளவு தங்கத்துகளை ஒரு பையில் சேருங்கள். குறிப்பிட்ட அளவு சேர்ந்ததும் பந்து போல உருட்டி, ஒரு ஏழைப்பெண்ணுக்கு கொடுங்கள். திருமணத்திற்கு உதவியாக இருக்கும்'' என்றாள். கைலாசமும் சம்மதித்தார். ஓராண்டு கழிந்தது. தங்கத்துகளை உருண்டையாக பிடித்து தன் தலையணையின் கீழே வைத்திருந்தார்.
ஆனால் விதி யாரை விட்டது? திடீரென ஒருநாள் இரவு பக்கவாதம் ஏற்படவே, பேசவோ, கை, கால்களை அசைக்கவோ கைலாசத்தால் முடியவில்லை. பரிசோதித்த மருத்துவர், அவர் விரைவில் இறந்து விடுவார் என தெரிவித்தார். தன் இறுதிக்காலம் நெருங்கியதை அறிந்த கைலாசம், சைகையின் மூலம் தங்கத்துகள் உருண்டை தலையணையின் கீழ் இருப்பதையும், அதை விரைவில் தானம் செய்யவும் தெரிவித்தார்.
ஆனால் தையல்நாயகி, தானே வைத்துக் கொள்ள திட்டமிட்டாள். ஏனென்றால், கணவரின் காலத்துக்குப் பிறகு தன்னை மகன் கவனிக்க மாட்டான் எனக் கருதினாள். கைலாசத்தை பார்த்த மகன், ''அம்மா! உன்னிடம் அப்பா ஏதோ சைகை காட்டினாரே என்னம்மா?'' எனக் கேட்டான்.
''கொய்யாப்பழம் என்றால் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். அது சாப்பிட வேண்டுமென ஆசைப்படுகிறார்'' என்று மழுப்பினாள். உண்மை என்று நம்பிய மகனும், கொய்யாப்பழம் வாங்கி வந்தான். கைலாசத்திற்கு சாப்பிடக் கொடுத்தாள் தையல்நாயகி.
பழத்துண்டு ஒன்று கைலாசத்தின் தொண்டையில் சிக்கியதால், விக்கிக் கொண்டு இறந்தார். அதன் பின்னர் மகனுக்கு தெரியாமல் தங்க உருண்டையை தனதாக்கிக் கொண்டாள் தையல்நாயகி.
நல்லதை எப்போதும் உடனடியாக செயல்படுத்துங்கள். பிறகு பார்க்கலாம் என நினைத்தால் இதுதான் கதி.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X