நாடு போற்றும் நல்லவர்கள் (7)
ஜூலை 09,2019,11:57  IST

ராமசுவாமி தீட்சிதர், சுப்புலட்சுமி அம்மையார் தம்பதிக்கு 1776ம் ஆண்டில் பிறந்தவர் முத்துசுவாமி தீட்சிதர். வைத்தீஸ்வரன் கோவில் முருகனின் அருளால் பிறந்த மகான் இவர். தந்தையாரிடம் தெலுங்கு, சமஸ்கிருதம், வேதம், மந்திரம், இலக்கணம், கர்நாடக சங்கீதம் கற்றார். வீணை இசைப்பதில் வல்லவரான இவர் பாடல் இயற்றுவதோடு, ஹிந்துஸ்தானி இசையிலும் திறமை பெற்றிருந்தார்.
சிதம்பரநாத யோகி என்னும் குருநாதரிடம் தீட்சை பெற்றார். இருவரும் காசியாத்திரை சென்ற போது 'கங்கை உனக்கு ஒரு பரிசளிக்கப் போகிறாள்' என்றார் குருநாதர். ஆற்றுக்குள் இறங்கிய முத்துசுவாமி, கண்களை மூடியபடி கைகளை நீட்டினார். அழகிய வீணை ஒன்று கைகளில் விழுந்தது. அதில் 'ராம்' என்னும் மந்திரம் எழுதப்பட்டிருந்தது.
அதன்பின் குருநாதரின் கட்டளையை ஏற்று திருத்தணி முருகனை தரிசிக்க புறப்பட்டார். மலைப்பாதையில் ஏறிய போது முதியவர் ஒருவர், 'முத்துசுவாமி வாயைத் திற' என்று சொல்லி கற்கண்டு அளித்து விட்டு மறைந்தார். அதன்பின் இவர் மடை திறந்த வெள்ளமாக பாடல்கள் பாடினார்.
'ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி' என்பதே இவரது முதல் பாடல்.
ஒருமுறை தீட்சிதர் திருவாரூருக்கு அருகிலுள்ள கீழ்வேளூர் சிவன் கோயிலுக்குச் சென்றார். நேரம் கடந்ததால் கோயிலில் நடை சாத்தி விட்டனர். அர்ச்சகர் கதவைத் திறக்க மறுத்தார். ஆனால் தீட்சிதர் வாசலில் அமர்ந்து பாடவே, ஊர் மக்கள் கூடினர். பாடி முடிக்கும் போது கருவறைக் கதவு தானாக திறந்தது. திருவாரூர் கோயிலின் ஊழியரான தம்பியப்பன் என்பவரின் வயிற்றுவலி போக்க நவக்கிரகங்களின் மீதும் பாடல்கள் இயற்றினார் தீட்சிதர். இதில் குருபகவானுக்குரிய பாடல் பாடும் போது வலி மறைந்தது.
தீட்சிதரின் தம்பி பாலுசாமி எட்டயபுரம் சமஸ்தானத்தில் பணிபுரிந்தார். அவரது திருமணத்தில் பங்கேற்க எட்டயபுரம் சென்றார் தீட்சிதர்.
வறட்சியால் அப்பகுதி நீர்நிலைகள் காய்வதைக் கண்டு வருந்திய தீட்சிதர், 'ஆனந்த மருதார்கர்ஷிணி! அம்ருதவர்ஷிணி' என மனம் உருகிப் பாடினார். மழை பொழிந்து ஊர் செழித்தது. இதன்பின் எட்டயபுரம் மன்னரின் வேண்டுகோளை ஏற்று தீட்சிதர் இங்கேயே தங்கினார்.
184 ஆண்டுக்கு முன் ஒரு தீபாவளி நன்னாளில், பட்டத்து யானை காங்கேயனுக்கு 'கஜபூஜை' செய்யத் தயாரானார் மன்னர். முன்னதாக யானையை நீராட்ட, படித்துறைக்கு அழைத்துச் செல்ல அது நீரில் இறங்க மறுத்தது. 'நீரில் இறங்கு' என கட்டளையிட்டான் பாகன். பிளிறியபடி ஓடிய யானை, சுடுகாட்டில் போய் படுத்தது.
யானையின் செயல் தீமையின் அறிகுறி என்று பதறினார் மன்னர் எட்டப்பபூபதி ''பதறாதீர்கள் மன்னா! குருநாதரான முத்துசுவாமி தீட்சிதரிடம் கேளுங்கள்?'' என்றார் மகாராணி.
தீட்சிதர் வீட்டிற்கு விரைந்தார் மன்னர். தீபாவளி சீடர்கள் பாடிக் கொண்டிருக்க, தியானத்தில் இருந்தார் தீட்சிதர்.
''குருநாதா! சமஸ்தானத்திற்கு தீங்கு நேருமோ என பயமாக இருக்கிறது'' எனக் கதறினார் மன்னர். தியானம் கலைந்த தீட்சிதர், ''கவலை வேண்டாம் யானை திரும்பி வரும்' என்றார். மன்னரும் அரண்மனை திரும்ப, “பட்டத்து யானை வந்து விட்டது'' என்ற செய்தி மன்னருக்கு கிடைத்தது.
இந்நிலையில் தீட்சிதரின் வீட்டில் சீடர்கள் 'மீனாஷி மேமுதம் தேஹி' என்ற பாடலைப் பாடினார். அதைக் கேட்டுக் கொண்டே தீட்சிதரின் உயிர் பிரிந்தது. எட்டயபுரம் 'அட்டக்குளம்' கரையில் அடக்கம் செய்யப்பட்டு, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தனர். இங்கு வழிபடுவோருக்கு கல்வி, செல்வம், புகழ் சேரும்.
தொடரும்
அலைபேசி: 98841 56456

வேதா கோபாலன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X