தெய்வ தரிசனம்-2 (36)
ஜூலை 09,2019,12:02  IST

அவிநாசி அவிநாசியப்பர்

கொங்கு மண்டலத்திலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களில் அவிநாசியும் ஒன்று. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றாலும் சிறப்பு மிக்கது. 'விநாசி' என்றால் 'பேரழிவு' என்பது பொருள். 'அவிநாசி' என்பதற்கு 'பேரழிவை அகற்றிய தலம்' என்பது பொருள்.
ஒருமுறை ஊழிக்காலத்தில் சிவபெருமான் தாண்டவம் ஆடினார். அவரது வேகத்தைக் கண்டு தேவர்களும், முனிவர்களும் அஞ்சி ஒளிந்த தலம் இது. அதாவது தேவர்கள் புகுந்து கொண்ட இடம் என்பதால் இத்தலம் 'புக்கொளியூர்' எனப்பட்டது. . 'திரு' என்னும் அடைமொழியுடன் 'திருப்புக்கொளியூர்' என்றே அழைக்கப்பட்டது.
'திருப்புக்கொளியூர்' என்றே தேவாரம் பாடல்களில் உள்ளது. பிற்காலத்தில் கோயில், ஊரின் பெயர் 'அவிநாசி' என்றானது.
அவிநாசியப்பரை தரிசித்தால் காசி விஸ்வநாதரை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
இங்கு தீர்த்தமாக 'காசிக் கிணறு' உள்ளது. கங்கையே இங்கிருப்பதால் 'தட்சிண காசி', 'தென் வாரணாசி', 'தென் பிரயாகை' என்றும் பெயருண்டு.
சுந்தரர் வாழ்க்கையோடு தொடர்புடைய தலம் அவிநாசி.
முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் 'தெய்வீகப் பதிகம்' பாட உயிருடன் திரும்பிய நிகழ்ச்சி நடந்தது. போனது திரும்பாது என்பதை 'முதலை வாய்க்குள் போனது மாதிரி' என்பார்கள். ஆனால், மேலே சொன்ன சம்பவம் அதிசயம் தானே.
ஒருமுறை சுந்தரர் அவிநாசி கோயிலுக்கு வந்தார். வீதியில் தொண்டர்களுடன் சென்ற போது, ஒரு வீட்டில் ஏழு வயது சிறுவனுக்கு உபநயனம் நடந்தது. வீடே கல்யாணக் களைகட்டி இருந்தது. ஆனால் அதற்கு எதிரிலுள்ள வீடு சோகத்தில் ஆழ்ந்திருந்தது.
சுந்தரர் அந்த வீட்டார் நிலை குறித்து விசாரித்தார். அவர்கள் சொன்ன விஷயம் அதிர்ச்சி அளித்தது.
மூன்று ஆண்டுக்கு முன்பு அருகிலுள்ள நீர்நிலைக்கு சிறுவர்கள் இருவர் நீராடச் சென்றனர். அப்போது உபநயனம் நடக்கும் வீட்டுச் சிறுவன் பாதுகாப்பாக கரையேறி விட்டான். ஆனால் எதிர்வீட்டுச் சிறுவன் முதலையால் விழுங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
சிறுவனை இழந்த பெற்றோர், ''எங்கள் மகன் உயிருடன் இருந்தால் நாங்களும் உபநயனம் நடத்துவோமே...ஆனால் புத்திரசோகத்தால் செய்வதறியாமல் கலங்குகிறோம்'' என சுந்தரரிடம் அழுதனர்.
அவிநாசியப்பரான சிவன் மீது பதிகம் பாடினார். சிறிது நேரத்தில் முதலை கரையேறி வந்து வாய் பிளந்தது. மூன்று ஆண்டுக்கு முன்பு விழுங்கிய சிறுவன் அதிலிருந்து வெளியே வந்தான்.
ஏழு வயதில் சிறுவன் எப்படி இருப்பானோ அது போலவும் இருந்தான். மகனைக் கண்ட பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.
எதிர்வீட்டுச் சிறுவனுக்கு உபநயனம் நடந்த அதே முகூர்த்தத்தில், முதலையிடம் மீண்ட சிறுவனுக்கும் உபநயனம் நடத்தினார் சுந்தரர். 'முதலை வாய்ப் பிள்ளை உத்ஸவம்' என்னும் பெயரில் பங்குனி உத்தரத்தின் போது அவிநாசியப்பர் கோயிலில் விழா நடத்துகின்றனர். இங்குள்ள தீபத்துாணுக்கு அடியில் சுந்தரர், சிறுவன் உயிர் பெற்ற காட்சி சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
கருவறையில் மூலவர் சுயம்பு லிங்கத் திருமேனியாக இருக்கிறார். அவிநாசிஈஸ்வரர், அவிநாசி லிங்கேஸ்வரர், பெருங்கேடிலியப்பர், பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவரை வழிபட்டால் பிறவிப்பிணி தீரும்.
அவிநாசியப்பரின் வலப்புறத்தில் கருணாம்பிகை இருக்கிறாள்.
திருவாரூர் தேருக்கு அடுத்த பெரிய தேர் இது. சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் விமரிசையாக நடக்கும். இங்குள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகன் சன்னதி சிறப்பானது. அருணகிரிநாதர் திருப்புகழில் இவரை பாடியுள்ளார். நடராஜருக்கு மார்கழி மாத திருவாதிரையன்று மகா அபிஷேகம் நடத்துகின்றனர். இங்குள்ள சனிபகவான் தோஷம் போக்குவதோடு நாம் வேண்டும் வரங்களைத் தருபவராக உள்ளார்.
இங்குள்ள காலபைரவர் 'ஆகாச காசிகா புராதன பைரவர்' எனப்படுகிறார். காசிக்கும் பழமையானவர் என்பது இதன் பொருள். இவரை வழிபட்டால் 'காசி காலபைரவரை' வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். தல விருட்சமான பாதிரி மரம் பிரம்மோற்ஸவத்தில் பூக்கும். அவிநாசியப்பரைத் தரிசித்து, நன்மை பெறுவோம்!
தரிசனம் தொடரும்
தொடர்புக்கு: swami1964@gmail.com

பி. சுவாமிநாதன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X