நளனின் முற்பிறவி
ஜூலை 12,2019,11:09  IST

இமயமலைச்சாரலில் ஆகுகன், ஆகுகி என்னும் வேடுவத் தம்பதி வசித்தனர். வேடனாக இருந்தாலும் ஆகுகன் கருணை கொண்டவனாக இருந்தான். சிறு குட்டிகள், முதிய விலங்குகளைக் கொல்ல மாட்டான். மக்களைத் துன்புறுத்தும் கொடிய விலங்குகளே அவனது இலக்கு.
ஒரு நாள் இரவு சிவபக்தரான முனிவர் அவனது குடிலுக்கு பசியுடன் வந்தார். தேனும், தினை மாவும் தந்து உபசரித்தான் ஆகுகன். சாப்பிட்ட முனிவர், இரவு மட்டும் குடிலில் தங்கலாமா எனக் கேட்டார். இருவர் மட்டுமே தங்கும் சிறு குடிசையானாலும், ஆகுகன் மறுக்கவில்லை. தன் மனைவியையும், முனிவரையும் குடிலுக்குள் படுக்க சொல்லி விட்டு, மிருகங்கள் நுழையாதபடி கதவை மூடினான். குடிலுக்கு வெளியே வில்லுடன் காவல் காத்தான்.
வேடனின் செயல்பாடு முனிவர் உள்ளத்தை நெகிழச் செய்தது.
'துறவியாக இருந்தாலும் மனைவியுடன் வேறொருவர் தங்குவதை யார் தான் உலகில் ஏற்பார்கள். இந்த வேடன் தன் மனைவி மீது கொண்டிருக்கும் நம்பிக்கை அசாத்தியமானது' என்று சிந்தித்தபடியே துாங்கி விட்டார் முனிவர். ஆகுகியும் கணவரின் திருவடியை மனதில் நினைத்தபடி கண்ணுறங்கினாள். ஆகுகனுக்கும் வேட்டைக்குச் சென்ற களைப்பு வருத்தியது. அவனையும் அறியாமல் துாங்கி விட்டான். அப்போது அவன் அருகில் வந்த சிங்கம் ஒன்று, அவனைக் கொன்றது.
கண் விழித்த ஆகுகி கணவர் பிணமாகக் கிடப்பதைக் கண்டாள். அவன் மீது விழுந்து தன் உயிரை விட்டாள். இக்கொடுமை தன்னால் தானே நேர்ந்தது என்று முனிவர் வருந்தினார்.
இருவரது உடல்களை எரித்து, தானும் சிதையில் விழுந்து உயிர் விட்டார்.
ஆகுகனும், ஆகுகியும் செய்த சேவைக்காக, மறுபிறவியில் நளன், தமயந்தி என்னும் பெயரில் அரச குடும்பத்தில் பிறந்தனர். மறுபிறவியில் அன்னப் பறவையாக முனிவர் பிறந்து, நளன், தமயந்திக்கு காதல் துாது சென்று சேர்த்து வைத்தார். என்ன தான் நல்லவனாக இருந்தாலும், முற்பிறவியில் வேடனாக இருந்ததால், ஏழரை ஆண்டு காலம் சிரமப்பட்டார். அத்துடன்
நாட்டையும் இழந்தார். மிருகங்களைக் கொன்று தின்ற பாவத்தால் ஆகுகியும் துன்பத்திற்கு ஆளானாள்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X