உனதருளால் வாழ்வேன்
ஜூலை 12,2019,11:33  IST

மகாகவி பாரதியார் தன்னை “சக்திதாசன்” என்றே அழைத்துக் கொள்வார். அவரைப் போல நாமும் அம்பிகையை வழிபட்டு பலன் பெறுவோம்.
பராசக்தியின் கருணையால் தான் உலகம் இயங்குகிறது. ஆனால் உலகை நடத்துவது நாம் தான் என்ற எண்ணம், நம்மிடம் இருக்கிறது. நான் இல்லாவிட்டால் இயக்கம் நடக்குமா? வீடு முன்னேறுமா? அலுவலகம் இயங்குமா? என்ற எண்ணத்தை, சொல்லை கோபத்தின் உச்சத்தில் எல்லோரிடத்திலும் எல்லா இடங்களிலும் கேட்கிறோம்.
ஆனால்... யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உலகம் இயங்கும். நாம் இருக்கும் இடத்தை நம்மை விடப் பல மடங்கு கெட்டிக்காரன் ஒருவன் நிரப்புவான். காரணம்? இந்த பிரபஞ்சத்தை இயக்குபவள் பராசக்தி தானே! நாம் ஒரு கருவி மட்டுமே! இதை உணர்ந்து நாளும் விடியற்காலையிலேயே பராசக்தியிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். 'தன்னால் எதுவும் இயலாது' என உணர கஜேந்திரன் என்னும் யானைக்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டது.
என்னை, நானே காப்பாற்றிக் கொள்வேன் என்னும் ஆணவம் உடைந்து போகும் சூழல் வந்த பிறகே, திரவுபதிக்குத் கடவுளின் சிந்தனை வந்தது. இவர்கள் இருவரையும் தினமும் நினைக்க வேண்டும். காரணம் இவர்களைப் போல, தாமதமாக கடவுளை நினைக்காமல், 'என்னிடம் ஒன்றும் இல்லை; எல்லாம் உனது செயல்' என்னும் அறிவுடன் பராசக்தியைச் சரணடைய வேண்டும்.
மகாகவி பாரதியார், 'தேடி உன்னைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரியம்மா' என்கிறார். தேடி என்பது வெளியுலகில் அல்ல, மனதிற்கு உள்ளே. ஆடி மாதத்தில் கிராமத்தினர் வழிபடும் அன்னை முத்துமாரியை நாட்டிற்கு உரிமையாக்கியவர் மகாகவி. தேச முத்துமாரி என்றே அவளை அழைக்கின்றார். அவளை தேடிச் சரணடைந்து, மெய்யுருகப் பாடி சரணடைவோம்.
எப்போதும் ஏதாவது ஒன்றை எண்ணி நாம் கவலைப்படுகிறோம். பஸ் வராவிட்டால் கவலை. அடுத்து, கூட்டத்தில் முண்டியடித்து ஏற வேண்டுமே என்ற கவலை. ஏறினால் இடிபடாமல் நிற்க வேண்டுமே என்ற கவலை. பின்னர்
உட்கார இடம் வேண்டுமே என்ற கவலை. உட்கார்ந்தவுடன் இடிபடாமல் இருக்கத்
தகுந்த ஆள் வர வேண்டுமே என்ற கவலை. குறித்த நிறுத்தத்திலே இறங்க வேண்டுமே என்ற கவலை... இப்படி அடுக்கலாம்.
காரணமின்றி கவலை கொள்வதில் நாம் கெட்டிக்காரர்கள் அல்லவா? அது தீர என்ன செய்ய வேண்டும். மனதார உனக்கு சேவை செய்ய வேண்டும். உனது வடிவாக இருக்கும் உயிர்களுக்கு சேவை செய்ய வேண்டும். உன் திருநாமத்தைச் சக்தி, சக்தி என்று சொல்லிப் பாடியுருகி பக்தி செய்தால் பயம் போகும். கவலைகளுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் பயம் தான். உன்னைச் சரணடைந்து பாடினால் கேடுகள் நீங்கும். குறைகள் தீரும். பக்தி பெருகும். கோடி நலம் பெருகும். எப்போதும் சந்தோஷமாக வாழலாம். இதற்கு செய்ய வேண்டிய ஒரே செயல் பராசக்தியை சரணடைதல் தான்.

தேடியுனை சரணடைந்தேன் தேசமுத்து மாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம்; தருவாய்
பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்
கோடிநலஞ் செய்திடுவாய் குறைகளெல்லாம் தீர்ப்பாய்
எப்பொழுதுங் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி
ஓப்பி யுனதேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்
சக்தியென்று நேரமெல்லாங் தமிழ்க்கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்.
தொடரும்

இலக்கிய மேகம்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X