நாடு போற்றும் நல்லவர்கள் (8)
ஜூலை 12,2019,11:44  IST

தரிகொண்டா வெங்கமாம்பா
ஆந்திராவில் உள்ள ஒரு ஊரின் பெயர் தரிகொண்டா. அதன் பொருள் தயிர்ப்பானை. ஏன் இப்பெயர் வந்தது தெரியுமா?
இந்த ஊரில் வாழ்ந்த பெண்ணான லட்சுமி நரசம்மா என்பவர் நரசிம்மரை வழிபட்டபடி தயிர் கடைந்தாள். திடீரென மத்தில் ஏதோ அகப்படவே 'கடகட' என்று சத்தம் கேட்கவே உதவிக்கு கணவரை அழைத்தாள். அவர் தயிருக்குள் துழாவிய போது சாளக்கிராமக்கல் ஒன்று அகப்பட்டது. அவர்களின் இஷ்ட தெய்வமான 'லட்சுமி நரசிம்மர்' அதில் காட்சியளித்தார்.
'என்னை வழிபடுங்கள். உங்களின் கஷ்டம் எல்லாம் தீரும்' என அசரீரி குரல் கேட்டது.
அன்றிரவு கிராமத்தின் தலைவருக்கும் ஒரு கனவு வந்தது. அதில் தனக்குக் கோயில் கட்டும்படி நரசிம்மர் உத்தரவிட்டார்.
கடைக்கால் தோண்டிய போது பொற்காசு பானை ஒன்று கிடைத்தது. பணத்திற்கு குறைவில்லாததால் கோயில் பணி வேகமாக முடிந்தது. இன்றும் இந்த ஊரான 'தரிகொண்டா'வில் கோயிலும், அபூர்வ சாளக்கிராமமும் உள்ளன. இந்த ஊரில் 1730ம் ஆண்டு பிறந்தவர் வெங்கம்மா. இவரது தாய் மங்கமாம்பா; தந்தை கனல கிருஷ்ணார்யா.
சிறுமியாக இருந்தபோதே வெங்கம்மா திருப்பதி பெருமாளிடம் பக்தி கொண்டார். பாடுவதும், ஆடுவதும், தியானத்தில் ஆழ்வதுமாக இருந்தாள். ஊரார் 'பைத்தியம்' என பட்டம் சூட்டினர்.
குழந்தை திருமணம் நடந்த காலம் அது. பைத்தியம் என்று சொன்னால் யார் கல்யாணம் செய்ய முன் வருவர்? பேசிய வரன்கள் எல்லாம் கைகூடவில்லை. ஒரு வழியாக சித்துாரைச் சேர்ந்த திம்மையராயருடன் திருமணம் நடந்தது. கணவர் திம்மையராயர் சில காலம் கழித்து இறந்த பின் வெங்கம்மா, பிறந்த வீட்டுக்கே திரும்பினார்.
வெங்கம்மாவின் மங்களச் சின்னமான குங்குமத்தை களையும்படி குடும்பத்தினர் கட்டாயப்படுத்தினர். ஆனால், திருப்பதி பெருமாள் தான் என் கணவர் என்று சொல்லி மறுத்தார். ஊரார் அவரது செயலைப் பழித்தனர்.
ஒருநாள் புஷ்பகிரி மடத்தைச் சேர்ந்த துறவியான அபிநவோதானந்த சங்கராச்சாரியார் 'தரிகொண்டா' கிராமத்துக்கு வந்தார். அவரிடம் வெங்கம்மா பற்றி புகார் சென்றது. அவர் வெங்கம்மாவை வரவழைத்தார். வெங்கம்மா வணக்கம் தெரிவிக்காமல் நின்றார். இதைக் கண்ட ஊரார் கோபம் கொண்டனர்.
''நான் வணங்க வேண்டுமானால் ஆச்சாரியார் சிம்மாசனத்திலிருந்து கீழே இறங்க வேண்டும்'' என்றார்.
சங்கராச்சாரியார் ஆசனத்திலிருந்து கீழே இறங்கி வரவே, வெங்கம்மாவும் வணங்கினார். அப்போது பயங்கர சத்தத்துடன் ஆசனம் வெடித்துச் சிதறியது. இதைக் கண்ட சங்கராச்சாரியாரும் வெங்கம்மாவை வணங்கினார். இதன் பிறகும் கூட ஊரார் வெங்கம்மாவை ஏற்க தயாரில்லை. பெற்றோரும் மகளை விரட்டினர். வெங்கம்மா திருப்பதி மலைக்குச் சென்று நந்தவனம் அமைத்துப் பெருமாளுக்கு துளசி, மலர்களை சாற்றி வழிபட்டார்.
அவர் மீது அன்பு கொண்ட சிலர் 'வெங்கமாம்பா' என அழைத்தனர்.
ஆனால் நந்தவனத்திற்கு அருகில் குடியிருந்த, அக்கராமையா என்ற அர்ச்சகர் குடும்பத்தினர் வெங்கம்மாவை வெறுத்தனர்.
ஒருநாள் தியானத்தில் இருந்த வெங்கம்மா மீது குப்பைகளை வீசினர். பொறுமை இழந்த வெங்கம்மா 'உன் குலம் அழியட்டும்' என சபித்தார். அன்றிரவே அக்குடும்பத்தில் வாந்தியும், பேதியால் இருவர் இறந்தனர். மற்றவர்கள் வெங்கம்மாவிடம் மன்னிப்பு கேட்டனர். “எதிர்காலத்தில் ஒரே ஒரு வாரிசு இருக்கும்” என சாபத்தை தளர்த்தினார் வெங்கம்மா. இன்று வரை இந்நிலை அக்குடும்பத்தில் தொடர்கிறது.
ஒரு முறை திருப்பதி கோயில் திருவிழாவில் தேரை நகர்த்த முடியவில்லை.
“வெங்கமாம்பா ஆரத்தி எடுத்தால் தேர் நகரும்” என்று வானில் அசரீரி ஒலித்தது. பக்தர்கள் வெங்கமாம்பாவை அழைத்து
வந்து ஆரத்தி எடுக்க வைத்தனர். தேரும் சட்டென்று நகரத் தொடங்கியது. இன்றும் திருப்பதியில் வெங்கமாம்பா இயற்றிய பாடலுடன் தினமும் ஆரத்தி நடக்கிறது.
திருப்பதி மலைக் கோயிலுக்கு அருகிலுள்ள இடத்தில் எட்டு ஆண்டுகள் வசித்த வெங்கமாம்பா, 1817ல் சமாதி அடைந்தார்.
இவர் இயற்றிய செஞ்சு நாடகம், வெங்கடேஸ்வர கிருஷ்ண மஞ்சரி, விஷ்ணு பாரிஜாதம், முக்திகாந்த விலாசம், கோல்லா கலாபம் போன்ற நுால்கள் புகழ் பெற்றவை.
திருப்பதியில் அன்னதானம் நடக்கும் மூன்று பெரிய அன்னக்கூடத்திற்கு
'மாத்ரு ஸ்ரீதரிகொண்ட வெங்கமாம்பா' என பெயரிடப்பட்டுள்ளது. இங்கு இவரது சிலையும் உள்ளது. மத்திய அரசு தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.
தொடரும்
அலைபேசி: 98841 56456

வேதா கோபாலன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X