எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
ஆகஸ்ட் 14,2019,09:21  IST

ஒருமுறை காஞ்சி மகாசுவாமிகள், '' கபடம், திருட்டு போன்ற குணம் கொண்டவராக கிருஷ்ணர் இருப்பது ஏன்?'' என்பதை விளக்கினார்.
''ஆவணி தேய்பிறை அஷ்டமி நள்ளிரவில் கிருஷ்ணர் பிறந்தார். அப்போது தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் அனைவருக்கும் இரவு நேரம். அவர் பிறந்த இடமும் இருள் நிறைந்த சிறைச்சாலை. பெயரும் கிருஷ்ணன் அதாவது 'கரியவன்' என்பது பொருள். இருட்டில் அவதரித்தாலும் நம்மைக் காப்பாற்ற வந்த ஞானஒளியாக இருந்தார். அகக்கண்ணையும், புறக்கண்ணையும் அமிர்தத்தில் மூழ்கடிக்கும் பேரழகு அவருடையது.
கிருஷ்ணன் அவதார காலத்தில் அநேக லீலைகள் செய்தார். எல்லாம் மாயாஜால நாடகம். குறும்பு செய்யும் குழந்தை, மாடு மேய்க்கும் சிறுவன், குழலுாதும் இசைக்கலைஞன், மல்யுத்தத்தில் கைதேர்ந்தவன், துாது செல்பவன், தேரோட்டி, திரவுபதியின் மானம் காத்த பக்தவத்சலன், பீஷ்மருக்கு முக்தி அளித்தவன், கொல்ல வந்த ஜரன் என்னும் வேடனுக்கும் அருள்புரிந்தவன் என அவர் நிகழ்த்திய லீலைகளுக்கு எல்லையில்லை.
முரண்பட்ட குணமுடையவர்கள் உலகில் வாழ்கிறார்கள். திருடன், நேர்மையானவன், பெண்பித்தன், யோகி, கிழவன், குழந்தை, கல்நெஞ்சன், இரக்கம் மிக்கவன், கஞ்சன், ஊதாரி, முட்டாள், அறிஞன் என நல்லதும், பொல்லாததுமான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களில் தீயகுணம் உடையவர்களை முற்றிலும் நல்ல அம்சம் கொண்ட அவதாரத்தால் கவர முடியாமல் போகலாம். ஒரு திருடனுக்கு இன்னொரு திருடனைப் பற்றிய கதை தான் சுவாரஸ்யமாக இருக்கும். உல்லாசமாக வாழ விரும்புபவனுக்கு இன்னொரு உல்லாச புருஷனின் கேளிக்கை வாழ்வில் விருப்பம் உண்டாகும்.
நல்லவர்களை மட்டுமின்றி மற்றவரையும் கவர வேண்டும் என்றே கபடதாரி, தந்திரசாலி என பல வேஷங்களில் கிருஷ்ணர் வாழ்ந்தார். விதவிதமான லீலையால் தனித்தனியே அவரவரை கவர்ந்து கருணை, ஞானத்தை அளித்தார். அதனால் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்றும், அனைவரும் கடைத்தேற வேண்டும் என்றும் தோன்றிய கிருஷ்ண அவதாரம் பரிபூரணமானது. அதாவது முழுமையானது.
மகாசிவராத்திரிக்கும், கிருஷ்ண ஜெயந்திக்கும் இடையே 180 நாள் இடைவெளி இருக்கும். ஒன்றில் ஞான ஜோதியான சிவலிங்கம் உதித்தது. அதுவே இன்னொன்றில், பார்க்க கருமையாக இருந்தாலும் உள்ளே ஞானம், கருணையால் ஜோதியான கிருஷ்ணராக அவதரித்தது. இரண்டும் ஒரே பரம்பொருளே'' என்றார்.

காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்
* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.
* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.com
திருப்பூர் கிருஷ்ணன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X