புதிய பார்வையில் ராமாயணம் (2)
ஆகஸ்ட் 14,2019,09:25  IST

நோக்கியதன் நோக்கமென்ன?

அரக்கியான தாடகை கொல்லப்பட்டதால், விஸ்வாமித்திர முனிவர் நிம்மதியாக யாகத்தை நிறைவேற்றினார். ராம, லட்சுமணரின் சேவையை நினைத்து மகிழ்ந்தார்.
பேராற்றல் மிக்க முனிவருக்கு தான் நடத்தும் யாகம் தடைபடாதபடி காக்க முடியாதா? இவர் நினைத்தால் பாணங்களால் கூரை அமைத்து அதில் தன் சக்தியைப் பிரயோகித்து அரக்கர்களை விரட்ட முடியாதா? எதற்காக எங்களை அழைத்து வந்தார்? என லட்சுமணன் மனதில் சந்தேகம் எழுந்தது. ஆனால் இப்படி அரக்கருடன் போரிடும் பயிற்சி பெறும் ராமனே, வருங்காலத்தில் பத்துத் தலை ராவணனை அழிக்க வேண்டியிருக்கும் என்பதை அந்த நேரத்தில் லட்சுமணனுக்கு புரியும் என எண்ணிக் கொண்டார் முனிவர்.
பெண் என்று சொல்லி தாடகையுடன் போரிட ராமன் தயங்கிய போது, 'அரக்கத்தனத்துக்கு ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. வதம் செய்வது பெண்ணை அல்ல, அவளுடைய மூர்க்க குணத்தை தான்' என உபதேசித்தார் விஸ்வாமித்திரர்.
தாடகையை அழித்து யாகம் மட்டுமல்லாமல், அங்கு வாழ்ந்த ரிஷிகள், மக்கள், பசுக்கள் என அனைவருக்கும் நிம்மதி வழங்கிய ராமனுக்கு பரிசளிக்க விரும்பினார் விஸ்வாமித்திரர்.
ராம, லட்சுமணரை காட்டில் இருந்து மிதிலைக்கு அழைத்துச் சென்றார் விஸ்வாமித்திரர். 'எங்கே, ஏன், எதற்கு, எப்படி….' என்று கேள்வி கேட்காமல் மவுனமாக தொடர்ந்தனர் சகோதரர்கள்.
வழியில் ஆங்காங்கு இருந்த குடில்களில் தங்கி, எளிய உணவுகளை சாப்பிட்டனர். முதலில் முனிவர் செல்ல, அவருக்குப் பின் ராமர், லட்சுமணர் என நடைப்பயணம் அமைந்தது. களைப்பு தெரியாமல் இருக்க ஸ்லோகங்கள், நீதிக்கதைகள், வேதங்களை சொல்லி வந்தார்.
ஒருநாள் காலையில் பயணம் தொடங்கியது. சிறிது துாரத்தில் நறுமணம் கமழ, ஏதோ ஊரை நெருங்குகிறோம் என புரிந்தது. வீடுகளில் காலை வழிபாடு நடந்தது. அத்துடன் வீடுகளில் சமையலின் மணமும் தெரிந்தது.
''மிதிலாபுரியை நெருங்குகிறோம்,'' என்றார் விஸ்வாமித்திரர். ராமன் புன்முறுவல் பூத்தான். அவன் சந்தோஷப்படும் நிகழ்வு அங்கு நிகழப் போகிறது!
ஊர் எல்லையில் மக்கள் இவர்களைப் பார்த்தனர். அவர்களின் கண்களில் வியப்பு மேலோங்கியது. சந்நியாசியின் பின்னால் வரும் இந்த இளைஞர்கள் யார்? ரத்த சம்பந்தம் இருப்பதாகவும் தெரியவில்லையே! கரிய மேகத்துக்குப் பின்னால் சூரியனும், சந்திரனும் போல பிரகாசிக்கும் இவர்கள் யார்?
விஸ்வாமித்திரர் மக்களை ஆசிர்வதித்தபடி முன்னே சென்றார். மலர்ந்த முகத்துடன் பின்னால் வந்த இளைஞர்களையும் வணங்க விரும்பினர் மக்கள்.
நடை நிமிர்ந்தும் நேர்கொண்ட பார்வையும் இருந்தனவே தவிர, யாரையும் மாற்று உணர்வுடன் ராம, லட்சுமணர் பார்க்கவில்லை. பெண்கள் நீராடி, மலர் சூடி, மின்னும் ஆடை, ஆபரணம் அணிந்து. ஒருமுறை பார்ப்பவரை மீண்டும் பார்க்கத் துாண்டும் விதத்தில் அழகாக காட்சியளித்தனர். ராம, லட்சுமணனோ அவர்களை பார்த்தாலும், தங்களின்
பார்வைக்கு முன் தற்காப்புத் திரையையும் போட்டிருந்தனர்.
சூரிய பிரகாசத்துடன் நடந்து சென்ற ராமன், பெண்களின் பார்வைக்குள் ஊடுருவி அவர்களின் மனதிற்குள் சென்று கலங்கடித்தான்.
கன்னிப் பெண்கள் பலர் பெருமூச்சு விட்டனர். 'என் மகளுக்கு இவன் மாப்பிள்ளையாக வர மாட்டானா!' என பல தாய்மார்கள் ஏங்கினர்.
சுற்றி நடக்கும் மவுனப் போராட்டத்தை கவனித்தபடியும், பெண்களின் பார்வைகளை நாசூக்காக ராமன் தவிர்ப்பதையும் கவனித்தார் விஸ்வாமித்திரர்.
பரந்த மார்பு, உறுதியான தோள்கள், வலிமையான கால்கள், முன்னும் பின்னும் வீசி வரும் வேகம் மிகுந்த கைகளுமாக, ராமனிடம் தான் என்ன கம்பீரம்! ஆனால் அதே நேரம் கண்ணியமான பெண்மையின் நளினமும் இருக்கிறதே எப்படி! என வியந்தனர் பெண்கள்.
ஆண்களும் பிரமிப்புடன், இந்த இளைஞனின் அழகில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட நம்மிடம் இல்லையே என தவித்தனர்.
அதோ... ஜனகரின் அரண்மனை தெரிந்தது. விஸ்வாமித்திரர் நடையில் வேகம் கூடியது. ராம, லட்சுமணர் அதே இடைவெளியில் பின்தொடர்ந்தனர்.
பகல் நேரத்திலும் பளிச்சென ஒரு மின்னல், அரண்மனை மாடத்தில் தெரிந்தது. தவிர்க்க முடியாத ஈர்ப்பில் ராமன் சற்றே கண்களை உயர்த்த, அங்கிருந்த காந்தத்தால் ஈர்க்கப்பட்டான். மின்னல்கொடியான சீதையும் அதே ஈர்ப்பை உணர்ந்தாள்.
ராமனின் விழிகள் நிலைக்குத்தின. கால்கள் நடக்க மறுத்தன. ஒரு கணம் தான். சுதாரித்தபடி அவன், நடையை பழைய வேகத்துக்குக் கொண்டு வந்தான்.
விஸ்வாமித்திரர் இதை கவனிக்கத் தவறவில்லை. ராமன் தன்னருகே வரும் அளவுக்கு வேகம் குறைத்தார். ''என்ன ராமா, என்ன தடுமாற்றம்?'' என மெல்லக் கேட்டார்.
தயங்கியபடி ராமன், ''ஐயனே, மன்னியுங்கள். அந்தப் பெண் யார் என தெரியவில்லை. இவளைப் பார்த்த உடன் என்னை இழந்தேன். ஆனால் அவள் மணமானவளாக இருந்தால் அது பாவம் அல்லவா? நான் தவறிழைத்தேன். வாருங்கள், திரும்பிப் போகலாம். இனி செல்ல என் மனதில் தெம்பு இல்லை…''
''கவலைப்படாதே ராமா, அந்தப் பெண்ணுக்கு மணமாகவில்லை. ஏனெனில் உன் பார்வை பரிசுத்தமானது. அது தவறிழைக்காது. உன் பார்வை எப்போதும் நேர்மையானது. அது கபடம் அறியாதது. அவள் தான் சீதை. ஜனக மகாராஜாவின் மகள். அவளுக்கு உன்னை மணம் முடிக்கத்தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன்….'' என்றார். ராமனின் மனதிற்குள் தென்றலடித்தது.
வெட்கத்தால் பூரித்த அவன், அவளைக் கரம் பிடிக்கும் முன் சோதனை ஒன்றுக்கு தான் ஆளாக வேண்டும் என்ற நிபந்தனையை அறியவில்லை.
தொடரும்
அலைபேசி: 72999 68695
பிரபு சங்கர்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X