புதிய பார்வையில் ராமாயணம் (4)
ஆகஸ்ட் 30,2019,14:46  IST

யார் அது சீதன வெள்ளாட்டி?
ராமன்- சீதை, லட்சுமணன்- - ஊர்மிளை, பரதன்- - மாண்டவி, சத்ருக்னன்- - ஸ்ருகீர்த்தி திருமணம் மிதிலையில் கோலாகலமாக நடந்தது. வைபவத்தை கண்டு களித்த தசரதர் பரிவாரங்களுடன் அயோத்தி திரும்பினார்.
தன் பிள்ளைகளின் இல்வாழ்வு கண்டு பெருமிதம் கொண்டான் தசரதன். ஆனாலும் அவர்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமைகள் வரிசையாக நிற்பதையும் உணர்ந்தான்.
அவற்றில் முதலில் நிற்பது ராம பட்டாபிஷேகம். குடும்பத்தின் மூத்த பிள்ளை, தனக்குப் பிறகு அரியாசனம் அமரப் போவதை எண்ணி சந்தோஷப்பட்டான் தசரதன். ராமனுக்கு தம்பியர் மூவர் துணையாக இருந்து நல்லாட்சி நடத்தப்போவதை எண்ணி மகிழ்ந்தான். ராம பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தான். குலகுரு வசிஷ்டர், மற்ற ரிஷிகள், ராஜ பிரதிநிதிகள், அரசவைக் கவிஞர்கள், நாட்டு மக்கள் என அனைவரிடமும் தகவலை தெரிவித்தான். சக்கரவர்த்தியான தனது உத்தரவை யாரும் மறுக்கப் போவதில்லை என்றாலும், ஒவ்வொருவரிடமும் சொல்லி மகிழ விரும்பினான்.
எல்லோருக்கும் இனியவனான ராமன் கிரீடம் சூடுவதில் யாருக்கு தான் ஆட்சேபணை இருக்கும்? அதையும் கடந்து அரச குடும்பத்தின் மூத்தவன் என்ற தகுதியும் இருக்கிறதே!
''என் பிள்ளை ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய இருக்கிறேன்'' என ஒவ்வொருவரிடமும் வாய் வலிக்காமல் சொல்லி வந்தான். அனைவரும் உற்சாகமுடன் தமக்குரிய பொறுப்பை செய்ய ஆரம்பித்தனர். மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்திரை மூவரும் தாமாகவே முன் வந்து, 'ராமனுக்கு முடி சூட்டப் போகிறீர்களாமே...சந்தோஷம்' என தம் பாராட்டு, மகிழ்ச்சியை தசரதனிடம் தெரிவித்தனர்.
அயோத்தி நகரமே கோலாகலத்தில் மூழ்கியிருந்த போது கைகேயியின் சேடிப்பெண் கூனி மட்டும் முகம் சுளித்தாள். அவள் தன் எஜமானி கைகேயியின் மகன் பரதன் முடிசூட வேண்டுமென விசுவாச மூர்க்கம் கொண்டாள். இந்த கூனி, அயோத்திக்கு சீதன வெள்ளாட்டியாக வந்தவள்.
சீதன வெள்ளாட்டி என்றால் என்ன?
அந்த காலத்தில் பெண் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீடு போகிறாள் என்றால், சீதனப் பொருட்கள் எல்லாம் அவளுடன் போகும். அவை மட்டுமல்ல, ஒரு பணிப்பெண்ணும் உடன் வருவாள். இவள் தான் சீதன வெள்ளாட்டி. இவள் மணப்பெண்ணுக்கு துணையாக இருப்பாள். ஒரு பெண் புகுந்த வீட்டிற்குச் செல்கிறாள் என்றால், அதற்கு
முன் தான் அனுபவித்த பிறந்த வீட்டுப் பாசம், பரிவு, அனுசரணையை தியாகம் செய்து தானே போகிறாள். அவளுக்கு எல்லாமே அங்கு புதிதாக இருக்கும். பழகும் மனிதர்கள் புதியவர்கள். அவர்களின் விருப்பு, வெறுப்பு எல்லாம் வித்தியாசமாக இருக்கும். இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கி வைக்க, பிறந்த வீட்டிலிருந்து பரிச்சயமான சீதன வெள்ளாட்டி உடன் வருகிறாள்!
கூனியைப் பொறுத்தவரை அவளுடைய எஜமானி, கைகேயி தான். என்ன தான் தசரத சக்கரவர்த்தியின் பத்தினி என்றாலும், இவள் கைகேயியிடம் தான் விசுவாசமாக இருந்தாள். தன் எஜமானிக்குத் தேவையானதை தேவையான நேரத்தில் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்தாள். பிறந்த வீட்டு நினைவு நீங்காமலும், அதேசமயம் அவள் ஏங்காத படியும் கவனித்தாள்.
அதனால் தான் ராம பட்டாபிஷேகம் என்றதும் அவளுக்குக் கோபம் தலைக்கேறியது. எஜமானியின் மகன் அரியாசனத்தில் அமர்வதை விட, தசரதனின் இன்னொரு மனைவியின் மகன் அந்தச் சிறப்பு பெறுவதை இவளால் பொறுக்க முடியவில்லை. சம்பிரதாயப்படி பார்த்தால் மூத்த மகன் தானே அரியணை அலங்கரிக்க வேண்டும்? ஆனால் கூனி அதை ஏற்கத் தயாராக இல்லை. அவளை பொறுத்தவரை ராமனை விட பரதன் ராஜ பாரம்பரியம் உள்ளவன். கோசலையைவிட கைகேயி அந்தஸ்தில் உயர்ந்தவள் என்பது இவளது எண்ணம். கோசலை மூத்தவளாக இருந்தாலும், தசரதனின் தனி அன்புக்குரியவள் கைகேயி என்பதை கூனி பல தருணத்தில் உணர்ந்திருக்கிறாள். இதற்கெல்லாம் மேலாக, போரில் உதவிய சந்தர்ப்பத்தில் கைகேயி இரு வரங்களை தசரதனிடம் இருந்து பெற்றிருக்கிறாள்.
இப்படி பார்த்தால், கைகேயி தான் தசரதனுக்கு நெருக்கமானவள். ஆகவே ராமனை விட பரதனுக்கு தான் முன்னுரிமை அதிகம் இருக்கிறது. சம்பிரதாயத்தை மீறவும் சக்கரவர்த்திக்கு உரிமை உண்டு. அந்த வகையில் ராமனைப் புறக்கணித்து விட்டு பரதனுக்கே பட்டாபிஷேகம் செய்யலாமே. இவ்வாறெல்லாம் சிந்தித்தபடி கைகேயியை சந்தித்தாள் கூனி.
அப்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள் கைகேயி. பட்டாபிஷேகம் என்ற செய்தி தான் எத்தனை ஆனந்தம் தருகிறது! கோசலையின் மகனாக இருந்தாலும், ராமனைத் தன் மகனாக கருதி இதயம் குளிர்ந்தாள்.
ஆனால் கூனி, மெல்ல அவள் மனதை மாற்றினாள். குழந்தை பருவத்தில் இருந்து சீராட்டி, பாராட்டி வளர்த்த கூனி தன் மீது அக்கறை இல்லாமலா இப்படிச் சொல்வாள் என யோசித்தாள். ராமன் மீது தசரதனுக்கு இருந்த பாசத்தையும் அவள் அறிவாள். அது மட்டுமல்லாமல் மூத்தவன் என்பதால் தந்தைக்கு பின் அரசாள வேண்டியவன் ராமனே என்பதை உணர்ந்திருந்தாள்.
தன் மகன் பரதன் சிம்மாசனத்தை கைப்பற்ற வழியில்லை என்றாலும் தசரதனிடம் பெற்ற வரங்களைப் பயன்படுத்துவது என தீர்மானித்தாள்.
இந்நிலையில் உற்சாகத்துடன் அந்தப்புரம் வந்தான் தசரதன். அங்கே கைகேயி தலைவிரிகோலமாக இருப்பது கண்டு பதறினான். இரண்டு வரங்களை இப்போதே நிறைவேற்றித் தருமாறும், அந்த வரங்கள் என்ன என்பதையும் அவள் விவரித்தாள். அப்படியே தன்னை வெட்டி இரு துண்டாக்கியது போல தசரதன் உணர்ந்தான்.
கைகேயி கேட்ட வரங்களை நிறைவேற்றுவதா அல்லது நாளை ராமனுக்குப் பட்டாபிஷேகம் என ஊருக்குள் சொல்லிய வாக்கை நிறைவேற்றுவதா? என தவித்தான்.
இறுதியில் கைகேயியின் எண்ணமே வெற்றி பெற்றது.
ஒருசமயம் தோழிகளிடம் கைகேயி, 'அதோ போகிறாரே, அவர் தான் துர்வாசர்' என்று ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டினாள். அலட்சியமாக அடையாளம் காட்டிய அவள் மீது கோபம் கொண்ட துர்வாசர், அவளது விரல் இரும்பாகப் போகட்டும் என்று சபித்தார். ஆனால் அதுவும் நன்மையாக முடிந்தது.
ஒருமுறை தசரதனுடன் தேரில் சென்று கொண்டிருந்த போது அதன் கடையாணி கழன்று விழ, தேர் நிலை தடுமாறாமல் இருக்க, கைகேயி தன் இரும்பு விரலை கடையாணியாக மாற்றி, சக்கரத்தில் நுழைத்து தசரதனைக் காப்பாற்றினாள். அப்போது அளித்தது தான் இரு வரங்கள். அதை வேறு எதற்காகவாவது பயன்படுத்த கூடாதா என மன்றாடிக் கேட்டும் கைகேயி ஏற்கவில்லை.
சரி, ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல்லிவிட்டு வந்தானே தசரதன், இப்போது அவர்கள் அனைவரிடத்திலும் போய் பரதனுக்கு தான் என்று சொல்ல வேண்டுமா இல்லையா? அவன் சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை.
ஏனென்றால் நற்செயல் என்றால் அனைவரிடமும் அறிவித்து மகிழ்ச்சியைப் பங்கு போட்டுக் கொள்ளலாம்; ஆனால் துயரச் செய்தி என்றால், அவரவராகவே தெரிந்துகொண்டு வந்து துக்கம் விசாரிப்பது தானே முறை!
அப்படித் தான் ஆயிற்று. ராமன் வனம் போக வேண்டும் என்றும், பரதனுக்கு முடி சூட வேண்டும் என்றும் கைகேயி கேட்ட வரத்தால் முடிவானது. அரசனாக இருந்தாலும், அரசுப்பணிகளில் குடும்பத்தின் தலையீடு இருந்தால் கேடு உண்டாகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

தொடரும்
அலைபேசி: 72999 68695
பிரபு சங்கர்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X