லட்சிய பயணம் தொடரட்டும்
அக்டோபர் 11,2019,10:17  IST

காஞ்சி மடத்திற்கு வந்த பக்தர் ஒருவருக்கு மனதில் சந்தேகம். லட்சிய வாழ்க்கை வாழ வேண்டும் என பெரியவர்கள் அறிவுரை சொல்கிறார்களே... ''ஹரிச்சந்திர மகாராஜா பொய் பேசாமல் வாழ்ந்தார் என கதை சொல்கிறோம். ஆனால் பொய் பேசாமல் மனிதன் வாழ முடியுமா? அப்படியிருக்க லட்சிய வாழ்க்கை பற்றிச் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது'' என்பதே அவரது சந்தேகம். சாத்தியமில்லாத ஒன்றை பற்றி ஏன் சொல்ல வேண்டும் என்ற சந்தேகத்தை மகாசுவாமிகளிடம் கேட்டார். சிரித்தபடி சுவாமிகளும் விளக்கம் அளித்தார்.
''உன் கேள்வி சரி தான். பொய் பேசக் கூடாது எனச் சொல்வது நடைமுறைக்கு உதவாத பேச்சு என நினைக்கிறாய். அதற்காக உத்தமமான யோசனைகளை எடுத்துச் சொல்லி சீடர்களுக்கு நினைவுபடுத்த குரு ஸ்தானத்தில் இருப்பவர் (குருநாதர்) தவறக் கூடாது இல்லையா? அதனால் தான் உயர்ந்த லட்சியங்களை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. சமுதாயத்திற்கும் இதனால் நன்மை ஏற்படும். 'ஆதர்ச நிலை' என்பதே தெரியாமல் போய் விடக் கூடாது அல்லவா?
கையில் சொடக்கு போட்டால் நினைத்தது நடக்க வேண்டும் என்ற மனநிலை இப்போது வந்து விட்டது. தினம் ஒரு ஜவுளி மில் முளைக்கிறது. நாசூக்கான, நாகரிகமான ஆடைகளுக்கு அனைவரும் மாறிக் கொண்டுள்ளனர். ஆனால் காந்திஜி என்ன செய்தார்? அவரவரே ராட்டையில் நுால் நுாற்று ஆடை உடுத்த வேண்டும் என உபதேசம் செய்யவில்லையா?
நடைமுறை சாத்தியம் இல்லை என கைவிட்டால், பின்னர் அதைப் பற்றிய பேச்சு இல்லாமல் போகும். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையோடு, காலம் காலமாக எத்தனையோ பேர் பயணம் மேற்கொண்டு, தோற்றுத் திரும்பினர். ஆனாலும் சாத்தியமில்லை என தொடர்ந்து முயற்சிக்க, கடைசியில் ஒருவர் சாதித்து விட்டார் அல்லவா?
எனவே வருங்கால சந்ததிக்கு லட்சிய வாழ்வை நினைவுபடுத்துவதில் தவறக் கூடாது. லட்சியத்தை சிலர் அடையலாம் அல்லது அடைய நீண்டகாலம் பிடிக்கலாம். ஆனால் லட்சியத்தை நோக்கிய பயணம் தொடர வேண்டும். லட்சியம் இன்னதென்று தெரிந்து அதை நோக்கி நடந்தாலே நன்மை தான்'' என்றார்.
மனத்தெளிவு பெற்ற அவர் சுவாமிகளை வணங்கி விடைபெற்றார்.

காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்
* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.
* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

திருப்பூர் கிருஷ்ணன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X