புத்திசாலி மாப்பிள்ளை
அக்டோபர் 11,2019,10:19  IST

மகரிஷி தேவலரின் ஒரே மகள் சுவர்சலா. அழகில் பூலோக ரம்பையான அவளுக்கு திருமண நடத்த விரும்பினார்.
''சுவர்சலா...உன் திருமணத்தை சுயம்வரமாக நடத்தப் போகிறேன். யாரைப் பிடிக்கிறதோ அவருக்கு நீயே மாலையிடு'' என்றார் மகரிஷி.
''அப்பா! ஒரு நிபந்தனை. பார்வையற்றவரும், முழுமையாகப் பார்வை உள்ளவருமான ஆண்மகனே எனக்கு மாப்பிள்ளையாக வர வேண்டும்'' என்றாள்.
வேதம் கற்ற மகரிஷிக்கு அவள் பேச்சு புதிராக இருந்தது.
''பார்வை உள்ளவன் கிடைப்பான் அல்லது பார்வை இல்லாதவன் கிடைப்பான். இரண்டும் கெட்டான் எப்படி கிடைப்பான்? உனக்கு என்ன பைத்தியமா? நல்ல மாப்பிள்ளையை நான் தேர்வு செய்கிறேன்'' என்றார்.
சுவர்சலா பதில் சொல்லவில்லை.
அரைமனதுடன் சுயம்வர ஏற்பாடுகளைச் செய்ய தொடங்கினார் தேவலர்.
அழகியை திருமணம் செய்ய யாருக்கு தான் ஆசை இருக்காது! வேதம் கற்ற பிரம்மச்சாரிகள் குவிந்தனர். அவர்களிடம் நிபந்தனையை தெரிவித்தாள் சுவர்சலா.
கூட்டம் கலைய ஆரம்பித்தது. ''அழகாய் இருந்தால் போதுமா! பைத்தியத்தை அல்லவா தேவலர் இவ்வளவு காலமும் வளர்த்திருக்கிறார்! இவளுக்கு கல்யாணம் ஒரு கேடா?'' என திட்டியபடி சென்றனர்.
'விதி வழியே மதி செல்லும்' என்பதை உணர்ந்து தன்னை தேற்றிக் கொண்டார் மகரிஷி.
மறுநாள் சுவேத கேது என்ற இளைஞன் வந்தான்.
''மகரிஷியே! நேற்று தங்களின் மகளுக்கு சுயம்வரம் நடந்ததையும், அதில் அவள் விதித்த நிபந்தனையையும் அறிந்தேன். அவளை மணம்புரிய நானே பொருத்தமானவன். எனக்கு பார்வை இருக்கிறது; இல்லாமலும் இருக்கிறது'' என்றான்.
''பொய் சொல்கிறீரா? உமக்கு தான் வண்டு போல் கண்கள் இருக்கிறதே'' என்றாள் வேகமாக.
''நீ சொல்வது சரி தான். உன்னையும், இந்த உலகையும் பார்ப்பதால் நான் கண்ணுள்ளவன் ஆகிறேன். ஆனால் 'நான்' என்ற ஆணவத்தால் தவறு எனத் தெரிந்தே சில செயலைச் செய்கிறேன். அப்போது பார்வை இருந்தும் இல்லாதவனாகிறேன். பிறருக்கு இடைஞ்சல் வரும் என அறிந்தே சிலவற்றைச் செய்கிறேன். பார்க்கக் கூடாததை பார்க்கிறேன். அப்போது என் கண்கள் ஊமை விழிகள் ஆகி விடுகிறதே'' என்றான்.
எதிர்பார்த்தபடி புத்திசாலி மாப்பிள்ளை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தாள் சுவர்சலா. அழகும், அறிவும் கொண்டவனை மகள் தேடியிருப்பதை அறிந்த மகரிஷி மகிழ்ந்தார்.
இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. அறிவுக்கண் கொண்ட அவர்கள் 'நான்' என்னும் ஆணவத்தை கைவிட்டு ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X