வயல்காட்டில் நெல் அறுக்கிறீர்கள். கட்டு கட்டாய் கட்டி களத்துக்கு வந்தாயிற்று. ராட்சத இயந்திரங்களைக் கொண்டு கதிரடிக்கிறீர்கள். நெல்லைப் பிரித்து மூடைகளாக கட்டியாயிற்று. உழைத்தவன் சம்பளத்துக்காக நிற்கிறான். கொடுத்தாயிற்று. ஆங்காங்கே நெல்மணிகள் சிதறிக் கிடக்கின்றன. அதைக் கூட்டிச் சேர்த்தால் ஐந்து கிலோ வரை சேரும். ஆனால், தயவுசெய்து அந்த நெல்லை மட்டும் அள்ளிச் சென்று விடாதீர்கள். ஏனெனில், அவை அங்கே வரும் பறவைகளுக்குஉணவாக அமையும். நூறு கிலோ சிதறிக் கிடந்தால், அதை விவசாயத் தொழிலாளிகளுக்கு பிரித்துக் கொடுங்கள். உழைப்பவனுக்கு முதலாளியின் கையால் கிடைக்கும் சம்பளத்தை விட, மனம் உவந்து தரும் சன்மானத்தை பெருமையாகக் கருதுவான். அடுத்த பருவத்தில் அந்த சன்மானத்தை மனதில் வைத்து உழைப்பை இரட்டிப்பாக்குவான். நீயும் வளர்வாய், அவனும் வளர்வான். பைபிள் இதை வலியுறுத்திச் சொல்கிறது. சில வசனங்களைக் கேட்போமா!
* திராட்சை தோட்டத்தில் பின்னறுப்பு வேண்டாம். சிந்திக்கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டாம். அவற்றை எளியோருக்கும், அந்நியருக்கும் விட்டுவிடுங்கள்.
* உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்கு கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.
* உமது இரக்கச்செயல்கள் கடவுளின் திருமுன் சென்றடைந்துள்ளன.
* நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகை பலிகளே கடவுளுக்கு உயர்ந்தவை.
* அவர்கள் வாரி வழங்கினர். ஏழைகளுக்கு ஈந்தனர். அவர்களின் நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
* உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப் போனால் அவர்களுக்கு உதவு. அவர்கள் அந்நியர் போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும்.
* ஏழைகளுக்குக் கொடுப்பவருக்கு குறைவு ஏதும் ஏற்படாது.
* ஒருவன் வறியவனாய் இருந்தால், அவன்
மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே. உன்கையை மூடிக்கொள்ளாதே.
* கொடுங்கள், உங்களுக்கும் கொடுக்கப்படும்.