மரணத்துக்கே மரணம் விளைவித்தவள்!
''அண்ணா! அவர் உங்களை பாக்கணும்னு அழறாரு. கொஞ்சம் வர முடியுமா? எனக்கு ரொம்ப பயமாயிருக்கு''
இன்னும் ஒரு வார்த்தை பேசினால் அழுது விடுவாள் எனத் தோன்றியது.
“இதோ கிளம்பிட்டேம்மா.”
பேசிய பெண் எங்கள் குடும்ப நண்பர் சங்கரின் மனைவி.. சங்கருக்கு 55 வயது. கணையத்தில் புற்று. பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பல லட்சம் செலவழிந்த பின், ''காப்பாற்ற முடியாது. அதிகம் போனால் பத்து நாள்'' என சொல்லி அனுப்பி விட்டனர்.
இன்று மூன்றாவது நாள். நேற்று கூட சங்கரைப் பார்த்துப் பேசினேன். நன்றாக பேசினான். இப்போது ஏன் என்னை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்கிறானோ தெரியவில்லை?
“பயமாயிருக்குடா” - சங்கரின் பேச்சு என்னைக் கலங்கடித்தது.
''மரண பயம் இல்லேன்னு அன்னிக்கு சொன்னது தப்புடா. என் முடிவ நெனச்சா பயமாயிருக்குடா. செத்தப்பறம் எங்கே போவேன்? என்ன நடக்கும்? நிஜமாவே பயமாயிருக்குடா''
சங்கரின் கைகளை பற்றியபடி அவனது முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அறையில் எங்களைத் தவிர வேறு யாருமில்லை. வெளியே நட்பும், உறவுமாக ஒரு கூட்டம் “செய்தி” க்காகக் காத்திருந்தது.
“ஒண்ணும் பயப்படாத. சும்மா எறும்பு கடிச்சா மாதிரி இருக்கும்” என தைரியம் சொல்ல அவன் என்ன ஊசி போடுவதையா நினைத்துப் பயப்படுகிறான்?
''எனக்கு ஒரு நாள் டைம் கொடு..''
''டேய்...என் நிலைமை தெரியாமப் பேசறியே? அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிட்டா...''
''முடியாதுடா. நான் பாத்துக்கறேன்'' - சொல்லிவிட்டு வெளியேறினேன்.
வாசலைக் கடக்கும் போது வெள்ளை கோட் அணிந்த முப்பது வயது பெண் என்னை நோக்கி வந்தாள்.
''நான் டாக்டர் சியாமளா. கார் மக்கர் பண்ணுது. என்னை டவுன்ல இறக்கி விடறீங்களா?''
''தாராளமா.''
காரின் முன் கதவைத் திறந்து என் அருகில் அமர்ந்தாள்.
''நீ கடவுள் ஆகிவிட்டாயோ? நாளை வரை சாகமாட்டாய் என நண்பனுக்கு உத்தரவாதம் கொடுத்தாயே''
பச்சைப்புடவைக்காரியைத் தவிர வேறு யாரால் இப்படி பேசமுடியும்?
''தாயே!''
''அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது... தாயே!''
''இப்போது உன்னைச் சாக வைக்கிறேன். அதன்பின் அவனுக்கு அறிவுரை சொல்லலாம்.''
''என்ன சொல்கிறீர்கள், தாயே?''
''உனக்கே இவ்வளவு பயம் இருக்கும் போது நீ எப்படி அவனுக்கு தைரியம் சொல்வாய்? கவலைப்படாதே மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என ஓரளவு கோடி காட்டுகிறேன்''
அன்னை என் தலையில் கை வைத்தது தான் தெரியும். அதன் பின் நான் எங்கோ கீழே சென்றேன். ஒரே இருட்டு. உயிரினங்கள் அங்கங்கே செல்வது போல் ஒரு பிரமை. அம்மா எனக் கத்தினேனா, பச்சைப்புடவைக்காரி எனக் கதறினேனா தெரியாது. மலை போன்ற ஒரு உருண்டை என்னை நோக்கி வந்தது. சட்டென என் கையை யாரோ பற்றியது தெரிந்தது. பயத்தில் வீறிட்டேன்.
பெண்ணின் சிரிப்புச் சத்தம்.
''நீ என் சொந்தத் தம்பியடா. அக்காவிடம் என்ன பயம்? என்னுடன் வா வெளிச்சத்துக்குப் போகலாம்.''
''நீ. .. நீங்கள்.. . . ஏதோ தவறாக. .. என் பெற்றோருக்கு நான் தான் மூத்த மகன். எனக்கு அக்காவா?''
''இந்தப் பிறவியில் இல்லை. முன்னொரு பிறவியில். என் மீது நீ பாசத்தைப் பொழிந்தாய். அதனால் தான் உன்னைக் காண இறைவி என்னை அனுப்பி வைத்தாள். என்னுடன் வா.''
என் கையைப் பிடித்துத் தரதர என இழுத்துக் கொண்டு போனாள் அவள். துாரத்தில் லேசான வெளிச்சம் தெரிந்தது. அதை நோக்கி நாங்கள் பயணப்பட்டோம். வாசல் போன்ற அமைப்பைத் தாண்டியவுடன் ஒரு மலைவாசஸ்தலம் போன்ற இடத்திற்குள் நுழைந்தோம். ஒரு ரம்மியமான காலைப்பொழுது. பிரம்மாண்டமான புல்வெளி. அதையடுத்து பெரிய ஏரி. அதன் கரையில் கனி தரும் மரங்கள். புல்வெளியில் குழந்தைகள் பட்டம் விட்டு விளையாடினர். மான்கள், வரிக்குதிரைகள், ஆடுகள் எல்லாம் மேய்ந்தன.
ஆண்களும் பெண்களுமாக நிறைய பேர் தென்பட்டனர். இவர்கள் யார்?
“இவர்களும் நம்மைப் போல் ஆன்மாக்கள் தான். நீ மேலுலக வாழ்க்கைக்கு (நியதிகளுக்கு) பழகும் வரை உன் கண்ணுக்கு மனிதர்களாகக் காட்சி தருவர்''
''நீங்கள் இங்கே எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள்?''
''மனிதக் காலக்கணக்குப்படி பார்த்தால் 600, 700 ஆண்டுகள் இருக்கும். இங்குள்ள காலக்கணக்கு வேறு. அது உனக்கு புரியாது.''
''இந்த உலகம் மனித உலகில் இருந்து வேறுபட்டதா?''
“ஒரு வகையில் அங்கே புவியீர்ப்பு விதியைப் போல் இங்கே ஆதாரமான சில விதிகள் இருக்கின்றன.”
''அவை என்ன?''
''இங்கே அன்பு தான் எல்லாம். வெறுப்பு என்பதே கிடையாது. நீ சந்திக்கும் அனைவரும் உன் மீது அன்பைப் பொழிவர். இது முதல் விதி.”
''நான் தப்பு செய்தாலுமா?''
''இங்கே நீ தப்பே செய்ய முடியாது. இது இரண்டாவது விதி. இது மானிட உலகைப் போல் கர்ம பூமியில்லை. யோக பூமி. இந்த உலகம் முழுவதும் அன்பு நிறைந்திருப்பதால் பயம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனித உலகின் பயம் எல்லாம் சில நிமிடங்களில் போய் விடும். இது மூன்றாவது விதி.
''மனதில் ஏதோ ஒரு தவிப்பு.. ஆதங்கம், மெல்லிய சோகம்.. இனம்புரியாத வேதனை...''
''எழுத்தாளன் என்பதற்காக சும்மா அடுக்காதே. இந்த உணர்வுக்குக் காரணம் உன் உறவுகளை விட்டு, இறைவியை விட்டு விலகி வந்து விட்டாய் என நினைப்பது தான்''
''அதற்கு மருந்து...''
''நீ எந்த உலகிற்குச் சென்றாலும், உன் நட்பு, உறவுகளை விட்டு விலகினாலும் இறைவியின் திருவடியை விட்டு அரை அங்குலம் கூட விலகி இருக்க மாட்டாய் என உணர்வது தான்.”
''ஓ..''
''பூவுலகம் என்ற இருட்டான அரங்கில் இதுவரை உன் வாழ்க்கை என்ற திரைப்படத்தைப் பார்த்தாய். காட்சி முடிந்து விட்டது. வெளியே வந்து விட்டாய். படம் முடியும் வரை தான் திரையரங்கில் இருக்க முடியும். மனித வாழ்க்கை முடியும் வரை தான் உலகில் இருக்க முடியும். இதுவரை தாற்காலிகமாக உலகில் முகாமிட்டிருந்தாய். இப்போது உன் வீட்டுக்கே திரும்பி விட்டாய்.”
என்ன எளிமையான விளக்கம்! சகோதரியைக் கனிவுடன் பார்த்தேன்.
''அங்கே பார் ஒரு பெண்மணி நின்றிருப்பது தெரிகிறதா?''
''ஆம்...யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் போல் தெரிகிறதே!”
''உன் நண்பன் சங்கரின் தாய் அவர். அவர் இறந்து இருபது வருடங்களாகி விட்டன. சங்கர் இங்கே வந்தவுடன் பயந்து விடக்கூடாது, அவனை அரவணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்பதற்காக இறைவி அவன் தாயை இங்கே அனுப்பியிருக்கிறாள்.''
சிலீர் என முகத்தில் எதுவோ பட்டது. விழித்துப் பார்த்தேன். உலகை ஆளும் அன்னை வெள்ளைக் கோட் அணிந்த பெண் மருத்துவராக என் அருகில் அமர்ந்திருந்தாள்.
''என்னப்பா மரணம் எப்படி இருந்தது?''
''உங்கள் கருணையை என்னவென்று சொல்வது? சங்கரின் ஆன்மா அந்த உலகத்திற்குச் சென்றவுடன் பயந்து விடக் கூடாது என்பதற்காக அவனது தாயைத் தயாராக இருக்க வைத்திருக்கிறீர்களே! இருந்தாலும் சங்கரின் பயம்…..''
''மரணத்தைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? மரணம் நிரந்தர முடிவு அல்ல. தாற்காலிக இடமாற்றம் மட்டுமே! எந்த இடத்திற்குப் போனாலும் நீ என்னை விட்டு விலக முடியாது என்பதை உணர்ந்தால் எல்லாப் பயமும் போய் விடும். வாழும் போது மனிதர்களிடம் அன்பு காட்டினால் அந்த உலகில் நல்ல துணை கிடைக்கும். சில பிறவிகளுக்கு முன் உன் மூத்த சகோதரியாகப் பிறந்த அந்த ஜீவனிடம் அளப்பரிய அன்பு காட்டினாய். அதனால் உனக்குத் துணையாக அவள் வந்தாள். சங்கர் தன் தாயைத் தெய்வமாக மதித்து அன்பைப் பொழிந்தான். அதனால் அவள் அவனை வரவேற்கக் காத்திருக்கிறாள். மனதில் அன்பு இருந்தால் மரண பயமே இருக்காது. இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால் மரணமே இருக்காது''
''இப்போது புரிகிறது தாயே! லலிதா சகஸ்ரநாமம் உங்களை ஏன் கால ஹந்த்ரீ - மரணத்துக்கே மரணம் விளைவிப்பவள் என்று ஏன் கொண்டாடுகிறதென்று''
அன்னை அழகாக முறுவலித்தாள்.
''சரி, தாயே, இதை அப்படியே நண்பனிடம் சொல்லலாமா?''
''வேண்டாம். அவன் நம்ப மாட்டான். அவனுக்கு இது ஏற்றதல்ல. மரணம் முடிவல்ல என்ற எண்ணம் உன் மனதில் ஆழமாகப் படிந்த பின், உன் நண்பனின் கையைப் பிடித்துக் கொண்டு சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவன் பயத்தைப் போக்கி விடும். அவனுக்கு நிம்மதியான மரணத்தைக் கொடுக்கும். உடனே அவனிடம் போ. அவனுக்கு அதிக நேரம் இல்லை''
அன்னை மறைந்தாள். கண்ணீருடன் வண்டியைத் திருப்பினேன்.
இன்னும் வருவாள்
தொடர்புக்கு: varalotti@gmail.com
வரலொட்டி ரெங்கசாமி