வரதா.. வரம்தா... (11)
அக்டோபர் 18,2019,14:42  IST

அத்திகிரி வரதன் சன்னதியில் எவ்வளவோ அற்புதங்கள். அதில் ஒன்று பன்னிருஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு நிகழ்ந்தது! ஒன்பதாம் நுாற்றாண்டுக்காலம்...
பன்னிருவரில் இவர் விசித்ரமானவர். கள்ளர் குலத்தில் பிறந்து திருவாலி என்னும் சோழ நாட்டின் சிற்றரசனாக இருந்தவன் நீலன்.
இவனுக்கு வீரகேசரி, பரகாலன் என பெயர்கள் உண்டு. சிற்றரசனாக இருந்த போதிலும் இவனது வீரத்திற்காக சோழ அரசன் இவனை பெரிதும் மதித்தான். சோழப் பேரரசே மதிக்கும் போது மற்றவர்கள் மதிக்காமல் இருப்பார்களா?
மொத்தத்தில் நீலன் என்றால் சோழ மண்டலமே நடுங்கியது. இவன் வசம் 'ஆடல்மா' என்ற தேர்ந்த ஜாதிக்குதிரை இருந்தது. இதன் மீது இவனைத் தவிர வேறு யாரும் ஏற முடியாது. இதன் மீது ஏறி வீதியில் வந்தால் எட்டுத் திக்கும் விட்டுத் தெறிக்கும். ஒருநாள் வீதியுலா வந்தான். அதிலும் வெள்ளக்குளம் என்னும் வயல் சூழ்ந்த ஊரின் பக்கம். அந்த ஊர்க்குளத்தில் குமுதவல்லி என்றொருத்தி தோழிகளோடு நீராடிக் கொண்டிருந்தாள். அவள் குளம் ஒன்றில் தாமரைகளின் நடுவே வைத்தியர் ஒருவரால் கண்டு எடுக்கப்பட்டு வளர்க்கப்படுபவள். மிக தெய்வீகமானவள்.
பேரழகி. திருமால் பக்தை! திருமாலை அன்றி எவரையும் சிந்திக்காதவள். அவளை பார்த்தவுடன் தீராக்காதல் கொண்டான் நீலன்.
ஆனால் குமுதவல்லியோ காதலை ஏற்க மறுத்தாள். நீலன் 'தனக்கு என்ன குறை.. ஏன் என்னை மறுக்கிறாய்?' எனக் கேட்டான். குமுதவல்லியும் அதற்கான காரணத்தை கூறத் தொடங்கினாள்.
''மன்னவனே! நீ மாவீரன்... மட்டுமா? பேரழகனும் கூட... இந்த நாட்டுக்கே அரசன். ஆனாலும் நிலையானது எது நிலையற்றது எது என்பதை நீ அறிந்திருக்கவில்லை.
உன் இளமையும், வீரமும் குறிப்பிட்ட காலம் வரையில் தான். இந்த நாட்டு அரசனாகவும் எப்போதும் இருக்க முடியாது. உன்னை விட வலிமையான ஒருவன் இந்த நாட்டை கைப்பற்றினால் நீ பணிந்தாக வேண்டும்.
இப்படி நிலையில்லாத ஒரு வாழ்க்கை வாழும் எவரையும் என் மனம் விரும்பாது'' என்றாள். ''அப்படியானால் நிலையான வாழ்வு எது எனக் கேட்டான் நீலன்.
''இந்த உலகில் நிலையானவன் திருமால். அவன் மீது பக்தி கொண்டு துாய வைணவனாக வாழ்பவர்களே நித்யமானவர்கள். அவர்களே இந்த பிறவி மட்டுமின்றி மறுமையிலும் அவனை அடைந்து அழியாத இன்பத்தை அனுபவிப்பவர்கள். ஆகவே வைணவமும் அதை தன் வழியாக கொண்ட வைணவனுமே நித்யமானவன். அப்படி ஒருவனையே என்னால் ஏற்க முடியும்'' என்றாள் குமுதவல்லி.
நீலன் முதன்முதலாக வைணவம் பற்றி அறிந்தான். அவள் மீதுள்ள மோகத்தில்,''சரி! உன் விருப்பப்படி நான் வைணவ வழி நடக்கிறேன். அப்போது என்னை ஏற்பாயா?'' என்றும் கேட்டான்.
குமுதவல்லி அதைக் கேட்டு சிரித்தாள்.
'''மன்னவனே! வைணவனாவது வேடமிடுவது போன்றதல்ல. வேதம் புகுவது போன்றது. நீயோ வேதம் என்றால் என்னவென்றே அறியாதவன். மழைக்கு கூட கோயில் பக்கம் ஒதுங்கியிராதவன். உன்னால் வாள் கொண்டு சண்டையிட முடியும். நுால் கொண்டு பக்தி புரிவது இயலாது. எனவே விட்டு விடு'' என்றாள்.
உண்மையான வீரனிடம், 'உன்னால் முடியாது' என்று சொல்லும் போது தான் வீரம் பொங்கி எழும். 'முடித்துக் காட்டி விட்டு மறுவேலை பார்க்கிறேன்' என்பான். இந்த நீலனும் அதையே செய்தான்.
''நீ விரும்புகின்ற வைணவனாய், பெருமாளின் கழலடி போற்றும் பக்தனாய் மாறிக் காட்டுகிறேன்'' என்றான்.
''வீம்புக்கு மாறினால் போதாது. தினமும் வைணவ அடியார்களுக்கும், பசித்தவர்களுக்கும் உணவிட வேண்டும். உம்மால் முடியுமா'' என்றும் கேட்டாள்.
''சோழ வளநாடு சோறுடைய நாடு. இந்த நாட்டு அரசனைப் பார்த்தா இப்படி கேட்கிறாய்? உன் விருப்பப்படியே தினமும் சோறிடுவேன்'' என்றான். அதற்கேற்ப நம்பி என்ற வைணவ ஆச்சாரியரிடம் சென்று தீட்சையும், பஞ்ச சம்ஸ்காரமும் பெற்றான். அவனுடைய இந்த மாற்றத்தைக் கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். எல்லாம் சில காலம் தான். குமுதவல்லியை மணந்து அவன் மீதுள்ள மோகம் நீங்கவும் மாறி விடுவான் என்றனர். ஆனால் நீலன் எம்பெருமான் மீது குமுதவல்லி காரணமாக பக்தி கொண்டாலும் அது அவனை தலைகீழாக மாற்றியது.
தேன் குடிக்க வந்தவன் தேன் குடத்திலேயே விழுந்து விட்டவன் போல் ஆனான். ஒரு ஆச்சரியம் போல் குமுதவல்லியைக் கூட நீலன் பெரிதாக கருதவில்லை. அவளைத் தன் குருவாக கருதத் தொடங்கி விட்டான்.
நிகர்த்த மீசை, பரந்த மார்பு, இடையில் வாள் என குதிரை மீது ராஜ கம்பீரமாக வந்தவன் அப்படியே மாறி பன்னிரு திருமண் காப்பு, பஞ்ச கச்சம் என மாறிப் போனான். இந்த வேளையில் நாட்டில் மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது.
அப்போதும் அடியவருக்கு உணவளிப்பதை நிறுத்தவில்லை. இதனால் அவனது கஜானா காலியாகி கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது.
அதோடு சோழப் பேரரசனுக்கு வரிகட்டுவதும் நின்று போனது. பத்தாயிரம் பொன்னும், ஆயிரம் கலம் நெல்லும் சோழனுக்கு கட்ட வேண்டும். ஆனால் முடியவில்லை. இதனால் சோழன் தன் அமைச்சரை அனுப்பி வைத்தான். அமைச்சரோ நீலனின் மாறுபட்ட கோலத்தைப் பார்த்து அதிர்ந்தார்.
''நீலா என்ன இது கோலம்?''
''கோலம் அல்ல அமைச்சரே.. இது தான் என்றும் நித்யம்''
''நீயா இப்படி பேசுகிறாய்?''
''எம்பெருமான் கருணை உம்மை ஆட்கொண்டால் நீரும் இப்படி பேசுவீர்''
''போகட்டும், ஏன் வரி கட்டவில்லை?''
''வசூலிக்கப்படும் வரி அன்னம் அளிக்கவும், ஆலய சேவைக்குமே சரியாக இருக்கும் போது எப்படி வரி கட்ட முடியும்?''
''இது முட்டாள் தனம். இதனால் நீ நீக்கப்பட்டு வேறு ஒருவர் அரசனாக ஆக்கப்படுவார்''
''அது நான் இருக்கும் வரை நடக்காது''
''என்ன மிரட்டுகிறாயா?''
''அன்பாகத் தானே சொன்னேன்''
''நீ மாறி விட்டாய்''
''ஆம். அர்த்தமுள்ள வாழ்வு வாழத் தெரிந்த வைணவனாக மாறி விட்டேன்''
''இனி உன்னிடம் பேசிப் பயனில்லை'' என்ற அமைச்சர் திரும்பிச் சென்று சோழனிடம், ''நீலன் இப்போது அரசன் இல்லை. ஆண்டி போல இருக்கிறான். ஆனால் வீரப் பேச்சுக்கு மட்டும் குறைவில்லை'' என்றான்.
அதன் பின் பேரரசனின் கட்டளைப்படி நீலனை அமைச்சர் தந்திரமாக ஒரு கோயிலுக்கு வரவழைத்து கைது செய்தான்.
நீலன் பதறிப் போனான். ''வேண்டாம். என்னை விட்டு விடுங்கள். இது துரோகம்'' எனக் கதறினான்.
''பைத்தியக்காரா... நீ பேரரசருக்கு செய்தது துரோகமா இல்லை நான் தந்திரமாக கைது செய்தது துரோகமா?'' என வெடித்தான் அமைச்சன்.
''நான் எனக்காக ஒரு பொன் கூட செலவு செய்யவில்லை. எல்லாம் எம்பெருமான் அடியார்களுக்கு செய்த செலவே...''
''இப்போது அந்த எம்பெருமானா வந்து உனக்கு படியளப்பான்... பைத்தியக்காரனே'' ஏளனமாய் பேசிய அமைச்சன் சிரித்தான். நீலன் மனமோ துடித்தது.
''எம்பெருமானே... இது என்ன சோதனை? உன்னை ஒருவன் ஏளனமாகப் பேசுகிறான். என்னைப் பேசினால் கூட பொறுப்பேன். உன்னைப் பேசுகிறானே?'' கண்ணீர் சிந்தினான் நீலன்.
கைகள் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தன. அப்போது அந்தக் கோயிலில் நீலன் காதுகளுக்கு கேட்கும்படியாக அசரீரிக்குரல் ஒலித்தது!
''நீலா... கலங்காதே! இந்த யுகத்தில் அடியார் படும் துன்பங்களைத் தீர்க்கவே நான் வரதராஜனாக காஞ்சியில் கோயில் கொண்டிருக்கிறேன். அங்கே என் சன்னதிக்கு இந்த அமைச்சனோடு வா. மற்றவை எல்லாம் தானாக நடக்கும்!'' என்றது குரல்!

தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X