அற்புதம் நிகழ்த்திய ஆறுமுகன்
நவம்பர் 08,2019,09:17  IST

வாரியாருக்கு அப்போது வயது 22. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தங்கியிருந்தார். அவரது தந்தை மல்லையதாசர், தென்மடம் வரதாச்சாரியார் என்பவரிடம் வீணை கற்க ஏற்பாடு செய்தார். மூன்று ஆண்டுக்குப் பின், மல்லையதாசர் மகனிடம், ''வீணை கற்றுக் கொண்டது போதுமப்பா! உடனே ஊருக்கு வந்து விடு'' என கடிதம் எழுதினார். குருகாணிக்கையாக ஏதாவது தான் கொடுக்க விரும்புவதாக தந்தைக்கு கடிதம் எழுதினார். அவர் தன்னிடம் இருந்த இரண்டு வேட்டிகளை மகனுக்கு அனுப்பி வைத்தார். இதைப்போய் குருநாதருக்கு எப்படி கொடுப்பது என்ற யோசனையில் மூழ்கினார்.
தனது வீட்டின் முன் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று ''முருகா! குருநாதருக்கு என்னால் காணிக்கை கொடுக்க முடியவில்லையே'' என கண்ணீர் விட்டார்.அற்புதம் நிகழ்த்தினான் ஆறுமுகப்பெருமான். சென்னை புரசைவாக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் திடீரென சொற்பொழிவாற்ற அழைப்பு வந்தது. சன்மானமாக நாற்பது ரூபாய் கொடுத்தனர். பஜாருக்கு ஓடினார் வாரியார். அப்போது பவுன் விலை பதின்மூன்று ரூபாய். இரண்டரை பவுனில் தங்கச் சங்கிலியும், அரைப்பவுன் பட்டாபிஷேக ராமர் டாலரும் வாங்கினார். இத்துடன் பாதாம்பருப்பு, முந்திரி, திராட்சை, வாழைப்பழம், வெற்றிலைபாக்கு வாங்கினார். குருநாதரின் வீட்டுக்குச் சென்று தட்டில் பழவகைகள், இரண்டு வேட்டிகள், தங்கநகைகளை வைத்து கொடுத்தார்.
''குருநாதா! ஏழை என்பதால் அதிகம் என்னால் கொடுக்க முடியவில்லை. அடியேன் அளிக்கும் சிறு காணிக்கையை ஏற்று ஆசி அளியுங்கள்'' என்று சொல்லி குருவின் காலில் விழுந்தார்.
கண்ணீர் சிந்திய குருநாதர், ''நீ உத்தமமான பிள்ளை. உனக்கு தெய்வம் நிச்சயம் துணைபுரியும்' என்று ஆசியளித்தார்.
வாரியாரும் குருதட்சிணை வழங்கியதை எண்ணி மகிழ்ந்தார்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X