கேளுங்க சொல்கிறோம்!
நவம்பர் 14,2019,10:07  IST

* பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றினால் கிரக தோஷம் தீருமா......
வி.அர்ச்சனா, பெங்களூரு

கிரக தோஷம் நீங்க பைரவருக்கு மிளகு, தேங்காய் மூடி, பூசணிக்காய் தீபமேற்ற நன்மை கிடைக்கும்.

குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்?
பி.சரண்யா, மதுரை

தாராளமாக சுப நிகழ்ச்சிகளை நடத்தலாம். அந்த நேரத்தில் செய்யும் செயல்கள் பன்மடங்காக பலன் தரும். எனவே குளிகையில் அசுப நிகழ்ச்சியை நடத்தக்கூடாது.

* கோயிலை சுத்தப்படுத்தி, பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சினால் நிம்மதி கிடைக்குமா?
ஆர்.பவானி, பிள்ளையார்பட்டி

இதை விட சிறந்த தொண்டு வேறில்லை. ''நிலை பெறுமாறு எண்ணுதியேல் மனமே! நீ வா! நித்தம் எம்பிரான் கோயில் புக்கு புலர்வதன் முன் அலகிட்டு (பெருக்கி துாய்மை செய்தல்) மெழுகிட்டு பூமாலை புனைந்தேத்தி (நந்தவனம் பராமரித்து பூமாலை அளித்தல்)'' என தேவார பாடலில் உள்ளது.

* கருட புராணத்தை வீட்டில் எப்போதும் படிக்கலாமா?
எம்.லக் ஷிதா, திருப்பூர்

கூடாது. மரணம் நிகழ்ந்தால் மட்டுமே படிக்க வேண்டும். ஏனெனில் இறந்த பிறகு உயிரின் பயணம் குறித்து விவரிக்கும் நுால் கருட புராணம். செய்த பாவங்களுக்கான தண்டனை குறித்த செய்திகளே இதில் அதிகம். இதைப் படித்தால் பாவம் செய்ய மனம் துணியாது.

விரதமிருந்து உப்பில்லாத உணவு சாப்பிட்டால் பலன் அதிகமாமே?
ஜெ.அஸ்வினி, காஞ்சிபுரம்

உண்மை தான். கைமேல் பலன் அளிக்கும் விரதமிது. கந்த சஷ்டி ஆறுநாள், நவராத்திரி ஒன்பது நாளில் உப்பில்லாமல் உண்பதாக விரதமிருந்தால் எதையும் சாதிக்க முடியும்.

* தட்சிணாமூர்த்தி காட்டும் சின்முத்திரையின் பொருள் என்ன?
எல்.விக்னேஷ், கடலுார்

சின் - அறிவு; முத்திரை - அடையாளம். அறிவின் அடையாளம் இது. மனிதனாக மண்ணில் பிறந்ததன் நோக்கமே மோட்சம் அடைவது தான். ஆனால் சுகபோகங்களில் இருந்து விலகி, நல்வழிப்படுத்தவே சின்முத்திரையுடன் அருள்கிறார் சிவன். இந்த முத்திரையில் ஒவ்வொரு விரலுக்கும் தனித்தனி பொருள் உண்டு.
* கட்டை விரல் - சிவன்
* ஆள்காட்டி விரல் - மனிதன்
* நடு விரல் - ஆணவம்
* மோதிர விரல் - கர்மா (வினை)
* சுண்டு விரல் - மாயை
ஆள்காட்டி விரலாகிய மனிதன் ஆணவத்துடன் செயல்பட்டு (கர்மா) உலக மாயையில் சிக்குகிறான். இதிலிருந்து விலகி கட்டைவிரலான சிவனைச் சரணடைந்தால் மோட்சம் கிடைக்கும். இதை உணர்த்தவே தட்சிணாமூர்த்தி ஆள்காட்டி விரலை மடக்கி, மற்ற விரல்களை நீட்டியபடி இருக்கிறார்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X