மீண்டும் பச்சைப்புடவைக்காரி (7)
நவம்பர் 14,2019,10:11  IST

அவள் வருவாளா? வரம் தருவாளா?

''உங்க பச்சைப்புடவைக்காரிய நீங்க தான் மெச்சிக்கணும்''
நண்பரின் வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தது.
''பின்ன என்ன சார்? மூணு வருஷமா வர வேண்டிய பிரமோஷன் தள்ளிப் போயிருச்சு. விரதம் இருந்தாச்சு. அவ கோவிலுக்கு நடையா நடந்துட்டேன். கால்வலி தான் மிச்சம். எல்லாமே வெறுத்துப் போச்சு சார்.''
பச்சைப்புடவைக்காரி நாம் கேட்டதைக் கொடுக்கும் போது அருள்பாலிக்கிறாள்; மறுக்கும் போது இன்னும் அதிகமாக அருள் பாலிக்கிறாள் என நம்புபவன் நான்.
என்றாலும் பாவம் இவர் இப்படி வருந்துகிறாரே அவருக்காக ஒருமுறை கோவிலுக்குப் போனால் என்னவென நினைத்துக் கிளம்பினேன். கால் வலித்தது. சென்ற வாரம் நடந்த விபத்தின் விளைவு இந்த வலி.
என்னை இடிப்பது போல் ஷேர் ஆட்டோ ஒன்று வந்தது.
“மீனாட்சி கோயிலுக்கு வரீங்களா?”
“இல்லப்பா. நடந்து போறதா வேண்டுதல்.”
“ஏறுய்யா வண்டியில. கால் வலியோட நடக்கிற ஆளைப் பாரு!”
பின் சீட்டில் இருந்த பெண்ணின் தொனியும் தோரணையும் அவளை யார் எனக் காட்டியது. ஆட்டோவில் ஏறி அவள் பாதங்களைத் தொட்டு வணங்கி அமர்ந்தேன்.
“அவனுடைய பதவி உயர்வுக்காக நீ ஏன் மெனக்கெடுகிறாய்?”
“பாவம்! புலம்புகிறானே அவன்...
“அவனுக்கு தலைக்கனம் அதிகம். பதவி உயர்வும் கிடைத்தால் உடன் இருப்பவர்களை ஒரு வழி பண்ணிடுவான்.”
“அவன் கிடக்கட்டும் தாயே! சிலருக்குக் கேட்டது கிடைக்கிறது. சிலருக்குக் கேட்காமலேயே நினைத்தது நடக்கிறது. சிலர் உங்கள் காலைப் பிடித்துக் கெஞ்சினாலும் தர மறுக்கிறீர்களே! ஏன் பாரபட்சம்?”
“ பாரபட்சம் இல்லை அப்பா! அவரவர் மனதில் உள்ள அன்பின் வெளிப்பாடு.”
“புரியவில்லையே!”
“அங்கே நடப்பதைப் பார்.”
அந்த நகரில் இருந்த கார்ப்பரேட் மருத்துவமனை காலை 8 மணிக்கே பரபரப்பாக இயங்கியது. நீரிழிவு நோய் மருத்துவர் நாதன் கண்களில் நீர்மல்க மீனாட்சியம்மனின் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
முந்திய நாள் இரவு நாதனின் ஒரே மகள் பத்து வயது சஞ்சனா துாங்கவில்லை. தலைவலியால் இரவு முழுவதும் துடித்தாள். இவ்வளவு அதிகமாக வலியிருந்தால் மூளையில் ஏதாவது ட்யூமர் இருக்கலாம் என நாதனின் நண்பரான நரம்பியல் மருத்துவர் பயமுறுத்தி இருந்தார்.
நாதனுடைய மனைவி எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க மகளுடன் அதிகாலையிலேயே போய் விட்டாள். முடிவுகள் வர எப்படியும் மதியம் ஆகிவிடும். நாதன் தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என மீனாட்சியிடம் கேட்டதில்லை. இந்த இக்கட்டிலும் கேட்கத் தோன்றவில்லை. அவளுக்குத் தெரியாதா என்ன?
“பேஷண்ட்ட அனுப்பலாமா டாக்டர்?”
நர்சின் குரல் கேட்டு நிகழ்காலத்துக்கு வந்தார் நாதன்.
தாயும் மகளுமாக இருவர் நுழைந்தனர். அவர்களின் உடையில் கிழிசல், மூளியாக இருந்த அவர்களின் கழுத்து, மகள் அணிந்த பிளாஸ்டிக் வளையல்கள் ஏழ்மையை உணர்த்தியது.
“தாயே! இவர்கள் துன்பத்தை என்னால் முடிந்தளவு போக்க வேண்டும்.” என பிரார்த்தித்து விட்டு அவர்கள் சொல்வதைக் கேட்கத் தயாரானார் நாதன்.
வழக்கமான விஷயம் தான். சிறுமிக்கு முதலாம் வகை சர்க்கரை நோய். தினமும் இன்சுலின் இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து. அவர்கள் இருந்ததோ பல மைல்கள் தள்ளியிருந்த குக்கிராமத்தில்.
நாதனும் அவரது நண்பர்களும் சேர்ந்து அறக்கட்டளை ஒன்றை நடத்தினர். அவர்கள் திரட்டிய நிதியெல்லாம் செலவாகி விட்டது. . இனி நன்கொடை திரட்டினால் தான் மேலும் உதவ முடியும் என்ற நிலை.
அந்தத் தாய் அழுதாள். அவளது கணவன் தையல்காரன். அவன் தொழிலில் வரும் வருமானத்தைக் கொண்டு இரண்டு வேளை சாப்பிடுவதே பெரிய விஷயம். இதில் இன்சுலினுக்காக மாதம் நான்காயிரம் ரூபாய் செலவழிக்க முடியுமா?
நர்சை அழைத்தார் நாதன்.
“சிஸ்டர் இவங்களுக்குப் பத்து நாளைக்கான இன்சுலினை வாங்கிக் கொடுத்துருவோம். அதுக்கப்பறம் என்ன செய்யறதுன்னு யோசிப்போம்.”
“இன்சுலின பிரிட்ஜ்ல வைக்கலேன்னா வெறும் பச்சைத்தண்ணி தான்னு சொன்னீங்க, டாக்டர்? இவங்ககிட்ட பிரிட்ஜ் கெடையாதே.”
அதைக் கேட்டு அந்தப் பெண்ணின் தாய் அழ ஆரம்பித்தாள்.
நாதன் மீனாட்சி படத்தையே உற்றுப் பார்த்தார். பின் மனஉறுதியுடன் பேசினார். “இப்போ ஊசி போடறேன். ஒரு மணி நேரம் வெளிய காத்திருங்க. உங்களுக்கு எப்படியாவது பிரிட்ஜ் ஏற்பாடு பண்றேன். உங்க பொண்ணோட சிகிச்சைக்கும் ஏற்பாடு பண்றேன். எங்காத்தாகிட்டக் கேட்டுட்டேன். அவ என்னிக்கும் கைவிட்டதில்ல. நம்பிக்கையோட வெளியே காத்திருங்க.. ”
அந்தப் பெண் அழுதபடி போனாள்.
“நெக்ஸ்ட்” என நாதன் கத்திய போது குரல் கரகரப்பாக இருந்தது.
அடுத்து வந்த பெண்ணுக்கு நாற்பது வயது. பசையுள்ள இடம் என்பதும் தெரிந்தது. கையில், கழுத்தில், காதில் என நகைகள் மின்னின.
“டாக்டர் அந்த அம்மா ஏன் அழுகுது?
நாதன் நடந்த விபரத்தைச் சொன்னார்.
“கையக் கொடுங்க டாக்டர். போன வாரம் தான் எங்கம்மாவுக்கு புது பிரிட்ஜ் வாங்கினேன். ஆனா அத வேண்டாம்னு சொல்லிட்டாங்க. எங்க வீட்டுல இப்போ ரெண்டு பிரிட்ஜ் இருக்கு. அதுல ஒண்ண அந்தப் பொம்பளைக்குக் கொடுத்துடலாமே!”
“பணம்''
“அதெல்லாம் வேண்டாம் டாக்டர். எனக்கும் ஒரு நல்ல காரியம் செய்ய வாய்ப்புக் கொடுங்களேன்.'
நாதனுக்குப் பேச்சு வரவில்லை. அந்தப் பெண்ணைப் பார்த்துக் கைகூப்பினார். அவள் சட்டென எழுந்து வெளியே போனாள்.
ஐந்து நிமிடம் கழித்து இன்னொரு பெண்ணுடன் திரும்பினாள்.
“டாக்டர்... இவங்க என்னோட அண்ணி அந்தப் பெண்ணோட நிலைமையச் சொன்னேன். உங்களப் பார்க்கணும்னு சொன்னாங்க.”
“இந்தாங்க டாக்டர் இதுல பத்தாயிரம் ரூபாய் இருக்கு. இப்போதைக்கு சிகிச்சைக்கு வச்சிக்கங்க. சிகிச்சைக்கான மொத்தச் செலவையும் நானே ஏத்துக்கறேன்.”
நாதனுக்குப் பேச்சு வரவில்லை.
வெளியே காத்திருந்த பெண்ணை உள்ளே அழைத்து அவளுக்கு உதவ முன் வந்த உத்தமிகளை அறிமுகப்படுத்தியதோடு, சர்க்கரை நோய் வந்த அந்தச் சிறுமிக்குத் தன் அறக்கட்டளையின் மூலம் சிகிச்சைக்கான ஏற்பாடு செய்து முடித்து, காத்திருந்த நோயாளிகளை ஓரளவு பார்த்து முடித்த போது மதியம் ஒரு மணியானது.
களைத்துப் போய் மேஜையில் தலை வைத்துப் படுத்தார் நாதன். அவரது தொலைபேசி ஒலித்தது.
“நான் தாங்க பேசறேன். குழந்தைக்கு ஒண்ணும் இல்லையாம். இப்போ தான் ஸ்கேன் ரிப்போர்ட் வந்துச்சி. வெறும் ஒத்தை தலைவலிதான்னு டாக்டர் சொல்லிட்டார்.”
அதற்கு மேல் நாதனால் தாங்கமுடியவில்லை. உடைந்து போய் அழுதார். படத்தில் இருந்த பச்சைப்புடவைக்காரி சிரித்தாள்.
“பார்த்தாயா? என் மகள் உயிரைக் காப்பாற்று என என்னிடம் கேட்கக் கூச்சப்பட்டவர், ஒரு நோயாளிக்கு உதவ வேண்டும் என உரிமையுடன் கேட்டார். கண் கலங்கினார். அடுத்தவருக்காக கண்ணீர் சிந்துபவர்கள் என்ன கேட்டாலும் தருவேன். அவர்கள் கேட்காததையும் தருவேன். தாயாக அவர்களைப் பார்த்துக் கொள்வேன். இது சத்தியம்.”
என் அழுகை அடங்கப் பல நிமிடம் ஆயிற்று, கண்களைத் துடைத்தபடி கேட்டேன்:
“நண்பனிடம் என்ன சொல்வது...”
''அடுத்தவர் நலனில் அக்கறை காட்டச் சொல். உரிய காலத்தில் இதை விடப் பெரிய பதவி உயர்வு தானாக வரும்.”
மீனாட்சி கோயில் அருகே வண்டி நின்றது. அன்னை மறைந்தாள். அவள் திருப்பாதங்கள் இருந்த இடத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றியபடி கிளம்பினேன்.
இன்னும் வருவாள்
தொடர்புக்கு: varalotti@gmail.com

வரலொட்டி ரெங்கசாமி

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X