திருமகளால் நேர்ந்த திருப்பம்
நவம்பர் 14,2019,10:21  IST

லட்சுமியும், அவளது அக்கா ஜேஷ்டா தேவியும் (மூதேவி) பூலோகத்தில் உலா வந்தனர். அப்போது வேலைக்காரன் ஒருவனை அவனது எஜமானன், '' மூதேவி! அசமந்தம் மாதிரி என்னடா பண்ணிட்டிருக்கே!'' எனத் திட்டினார். இதைக் கேட்ட ஜேஷ்டா வருத்தமுடன், '' பார்த்தாயா லட்சுமி! திட்டுபவன் கூட என் பெயரைத் தான் சொல்கிறான். இந்த வேலைக்காரனை இப்போதே பணக்காரனாக ஆக்குகிறேன் பார்'' என ஆவேசப்பட்டாள். அவன் செல்லும் வழியில் பொற்காசு மூடை ஒன்றைக் கிடக்கச் செய்தாள். அவனும் எடுத்து செல்ல அவனது மனைவி சந்தோஷத்தில் குதித்தாள். அண்டை வீட்டுப் பெண்ணிடம் உழக்கு வாங்கி காசை அளக்க ஆரம்பித்தாள்.
உழக்கு கொடுத்தவளோ சதிகாரி. எதற்கு உழக்கு என அறிய அதனடியில் புளியை ஒட்டிக் கொடுத்தாள். அவளது எண்ணம் போலவே, உழக்கை கொடுக்கும் போது, புளியில் ஒரு பொற்காசு ஒட்டியிருந்தது. பேராசை கொண்ட அவள் இரவோடு இரவாக பொற்காசுகளை திருடினாள். பணத்தை இழந்ததால் மீண்டும் வேலைக்குச் சென்றான். அவனுக்கு ஒரு வைர மோதிரம் கிடைக்கச் செய்தாள் ஜேஷ்டா. அதை அணிந்த அவன் குளத்தில் குளிக்கச் சென்ற இடத்தில் கையை உதறவே தண்ணீருக்குள் மோதிரம் விழுந்தது. எவ்வளவு தேடியும் பயனில்லை.
சளைக்காத ஜேஷ்டா, முத்து மாலை ஒன்றை கிடைக்கச் செய்தாள். மோதிரம் போல இதுவும் போய் விடுமோ என்ற பயத்தில் குளக்கரையில் கழற்றி வைத்து விட்டு குளித்தான். ஆனால் அவன் திரும்பி வந்த போது மாலையைக் காணவில்லை. தன் கெட்ட நேரத்தை எண்ணி அவன் வருந்தினான். ஜேஷ்டாவும் தங்கை மகாலட்சுமியிடம் நடந்ததை விவரித்தாள்.
இரக்கப்பட்ட லட்சுமி வேலைக்காரனைக் காக்க முடிவெடுத்தாள். மறுநாள் காலையில் அவன், குளத்தில் மீன்கள் பிடித்து மனைவியிடம் சமைக்கச் சொல்லிக் கொடுத்தான். விறகு இல்லாததால் பனை ஓலைகளை வெட்டி வரச் சொன்னாள் மனைவி. மரமேறிய போது அதில் பறவையின் கூட்டில் முத்து மாலை தொங்குவதைக் கண்டான். குறிப்பிட்ட பறவையே மாலையை எடுத்ததை புரிந்து கொண்டான். இதற்கிடையில் அவனது மனைவி வீட்டில் மீனை அறுத்த போது வயிற்றில் மோதிரம் இருக்கக் கண்டாள்.
வேலைக்காரனும், அவனது மனைவியும் ஒரே சமயத்தில் 'பாத்துட்டேன்; பாத்துட்டேன்' என ஒருவருக்கொருவர் தாங்கள் பார்த்ததை தெரிவித்த போது பொற்காசுகளை திருடிய அண்டை வீட்டுப் பெண்ணின் காதில் விழுந்தது.
'பொற்காசுகளை திருடிய விஷயம் தெரிந்து விட்டது போல..' என அவள் எண்ணிக் கொண்டாள். பஞ்சாயத்தாரிடம் சென்றால் அவமானம் நேருமே என பயந்தாள். அன்றிரவே பொற்காசுகளை வேலைக்காரன் வீட்டு வாசலின் முன் வைத்து விட்டுச் சென்றாள். திருமகள் அருள் இருந்தால், வாழ்வில் ஏற்படும் திருப்பத்தை சொல்ல முடியாது.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X