புதிய பார்வையில் ராமாயணம்! (17)
நவம்பர் 27,2019,12:00  IST

சந்தேகம் எனும் ஆட்கொல்லி

தங்களைச் சந்தித்த அனுமனை ஆழ்ந்து கவனிக்கவோ, ஆராய்ச்சி செய்யவோ தேவை இல்லாமல் போனது ராமனுக்கு. வானர இனம் என்றாலும் மிகுந்த மரியாதை, கண்ணியத்துடன் அணுகிய அவன், ராமனின் மதிப்பில்
உயர்ந்தான். இந்நிலையில் தங்கள் இனத் தலைவனான சுக்ரீவனை, அவனது அண்ணன் வாலியிடம் இருந்து காப்பாற்றி நாட்டை மீட்க உதவ வேண்டும் என அனுமன் கேட்ட போது, ராமன் சம்மதிப்பான் என்றே கருதினான் அனுமன். தன்னைப்போல மனைவியை வாலியிடம் பறி கொடுத்து நிற்கிறான் சுக்ரீவன் என்ற வருத்தமும் ராமனுக்கு ஏற்பட்டது.
ஆனால் லட்சுமணனுக்கு சுக்ரீவனைப் பிடிக்கவில்லை. 'அண்ணனிடமிருந்து நாட்டை மீட்டுத் தரச் சொல்பவன் எப்படி பாசமான தம்பியாக இருக்க முடியும்?' என யோசித்தான். ராமனின் இரக்க குணத்தைப் பலர் சாதகமாக்கிக் கொள்வதை அவன் நிறைய பார்த்திருக்கிறான் என்றாலும், இப்படி ஒரு தம்பிக்காக அவனது அண்ணன் வாலியைக் கொல்வது எப்படி நியாயமாகும் என எண்ணினான்.
லட்சுமணனை தனியாக அழைத்த ராமன், ''லட்சுமணா! தம்பி என்றாலே பரதன் மாதிரி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாய். அந்தக் கருத்தில் மனித சமுதாயத்தில் யாரையாவது சொன்னால் உன்னை ஆதரிப்பேன். ஆனால், இவர்கள் வானர இனம். அவர்களின் வாழ்க்கையை மனிதர்களோடு ஒப்பிடுவது சரியல்ல. அது மட்டுமல்ல, சுக்ரீவனைப் பொறுத்தவரை அவன் வாலிக்குத் துரோகம் செய்யவில்லை. ஒரு சமயம் வாலிக்கு மாயாவி ஒருவனுடன் போர் வந்தது. இருவருமே சம வலிமை கொண்டவர்கள் என்பதால் யார் வெற்றியாளர் என்ற முடிவு ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் அந்த மாயாவி நீண்ட குகை ஒன்றில் நுழையவே, வாலி அவனைத் துரத்தியபடி சென்றான். இருவரும் உள்ளே போய் பல நாளாகி விட்டது. வாலி எப்படியும் வெற்றியுடன் திரும்புவான் என சுக்ரீவனும் காத்திருந்தான். ஆனால் வாலி வரவில்லை. முதல் முறையாக வாலியின் வீரத்தின் மீது சந்தேகம் எழுந்தது. மாயாவி வாலியை கொன்று விட்டு வெளியே வந்தால், வானர இனத்தையே அவன் அழிப்பானே என்ற பயம் எழுந்தது. இதனால் சுக்ரீவனைச் சார்ந்தவர்கள், மாயாவி வெளியே வருவதைத் தடுக்க குகை வாசலை பாறையால் மூடலாம் என யோசனை தெரிவித்தனர். இந்நிலையில், அவர்களின் முடிவுக்கு தலையசைப்பதைத் தவிர சுக்ரீவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால் எதிர்பாராதது நடந்தது. மிகுந்த போராட்டத்திற்குப் பின் மாயாவியைக் கொன்ற வாலி, வெளியே வர முயன்ற போது, வாசலில் பிரமாண்டமான பாறை இருப்பதைக் கண்டான். தம்பி சுக்ரீவன் மீது சந்தேகம் வந்தது. 'நான் எப்போது தொலைவேன், கிஷ்கிந்தையை ஆளலாம்' என சுக்ரீவனே வாசலை அடைத்திருக்கிறான் என்ற முடிவுக்கு வந்தான். கோபம் தான் விபரீதமான சந்தேகங்களை உருவாக்கி விடும் அல்லவா! பாறையை உடைத்து வெளியேறிய அவன், சுக்ரீவனை எதிரியாகக் கருதி தாக்க முற்பட்டான். இந்நிலையில் ஒரு முனிவரின் சாபம் காரணமாக வாலி நெருங்க முடியாத ருஷ்யமுக மலைப் பகுதியில் ஒளிந்து கொண்டான் சுக்ரீவன்.
''வாலியை வதம் செய்யவும், அதற்கு நன்றிக்கடனாக சீதையைத் தேட வானரப் படையைக் கொடுத்து உதவுவதாகவும் அனுமன் தெரிவிக்கிறான். அனுமனின் பேச்சு, பணிவு, முகத்தோற்றம் எல்லாம் என்னைக் கவர்ந்து விட்டன. நமக்கு நல்வழி காட்டுவான் என்றே தோன்றுகிறது. வா... நாம் சுக்ரீவனைச் சந்திக்கச் செல்லலாம்''
ராமனின் விளக்கத்திற்கு பின் லட்சுமணன் பின்தொடர்ந்தான்.
அவர்களிடம், 'வாலியைக் கொல்வது எளிதல்ல' என எச்சரித்தான் சுக்ரீவன். தனக்கு எதிராகப் போரிடுபவரின் பலத்தில் பாதி, வாலிக்குப் போய் விடும் என வரம் பெற்றவன் வாலி. ஆகவே அவனை மறைந்து நின்று கொல்வது தான் ஒரே வழி. இந்த உத்தியைச் சொன்ன சுக்ரீவன், தான் வலுவில் போய் வாலியுடன் சண்டையிடுவதாகவும், அப்போது மறைந்து நின்று அம்பு எய்து வதம் செய்யலாம் என யோசனை கூறினான்.
ராமனின் வீரத்தை வில்லின் மூலம் அறிய எண்ணினான் சுக்ரீவன். ராமனும் ஏழு மரா மரங்களை ஒரே பாணத்தால் துளைத்து தன் வீரத்தை நிரூபித்தான்.
திட்டமிட்டபடி அண்ணனின் இருப்பிடம் சென்று வம்புக்கு இழுத்தான் சுக்ரீவன். தன் முன்னர் நிற்கப் பயப்படும் தம்பி, போரிட அழைக்கிறானே என சந்தேகப்பட்டான் வாலி. பின்புலத்தில் யாரோ இருக்க வேண்டும் என ஊகித்தான்.
ஆனாலும் உடல் உறுதியை நம்பியிருந்த அவன், சுக்ரீவனை துவம்சம் செய்ய ஆரம்பித்தான். சண்டை ஆரம்பிக்கும் போதே ராமனின் பாணம் வாலியைத் தாக்கும் என எதிர்பார்த்தான் சுக்ரீவன். ஆனால் தொலைவில் ஒரு மரத்தின் பின்புறம் லட்சுமணனுடன் நின்றிருந்த ராமன் வில்லில் நாணேற்றிய போது, ''அண்ணா! தங்களின் வீரத்தை சோதிக்க சுக்ரீவனுக்கு தான் என்ன ஆணவம் இருக்க வேண்டும்? உங்களை சோதித்தது தவறு என அவன் மன்னிப்பு கேட்கட்டும். அதன் பின் செயல்படுங்கள்'' என்றான்.
ஆனால் தம்பியைப் புறக்கணித்து வில்லை உயர்த்தினான் ராமன்.
இதற்குள் சுக்ரீவன், ராமன் அருகில் ஓடி வந்தான். '' ராமா...! வாலியை வதைத்து என்னை வாழ வைப்பதாக ஒப்பந்தம் செய்ததை மறந்தாயா?'' எனக் கேட்டான்.
''மன்னித்துக் கொள் சுக்ரீவா. என்னால் வாலியை அடையாளம் காண முடியவில்லை. அதனால் நீ பூமாலை அணிந்தபடி போரிட்டால் நான் எளிதாக வாலியை கொன்று விடுவேன்'' என்றான்.
அப்பாவியான சுக்ரீவனும் பூக்களைப் பறித்து மாலையாக்கி கழுத்தில் அணிந்தபடி வாலி முன் சென்றான்.
சுக்ரீவனைக் கண்டதும் கோபமுடன் பாய்ந்தான் வாலி. அந்த சமயம் ராமபாணம் வாலி மீது பாய்ந்தது. ஒரு நொடியில் நிலை குலைந்தான். மார்பைத் துளைத்த அம்பில் 'ராம' என பொறித்திருப்பது கண்டு திடுக்கிட்டான். நிமிர்ந்த போது ராம, லட்சுமணன் அவனை நோக்கி வருவதைக் கண்டான். ராமனைப் பற்றி அறிந்திருந்த அவன், போர் விதிக்கு முரணான செயலைச் செய்தவன் போற்றுதலுக்குரிய ராமனா என கலக்கம் அடைந்தான்.
பிறகு கண்களை மூடி சிந்தித்த போது, தனக்கு ஏற்பட்ட முடிவு சரியானதே எனத் தெளிந்தான். தம்பியின் மனைவியான உருமையை அபகரித்தது பெரும் பாவம் என உணர்ந்தான்.
''ராமா...நீயும், சுக்ரீவனும் செய்துள்ள ஒப்பந்தம் நன்மையைத் தரட்டும். ஒன்றை மட்டும் நினைவில் கொள். மனைவியைப் பிரிந்து பல காலமாக என் தம்பி வாடியிருக்கிறான். இப்போது அவளை அடைந்த மகிழ்ச்சியில் உனக்கு அளித்த வாக்கை மறக்கக் கூடும். ஆனால் அவன் அப்பாவி. பிறர் சொல் கேட்டு நடக்கும் சொல் புத்திக்காரன். அவன் மீது கோபம் கொள்ளாதே; அவனைக் கொன்று விடாதே. பொறுப்பை உணர்த்து. இனி அவன் வாழ்க்கை உன் கையில்…'' என உயிர் விட்டான்.
இதைக் கேட்டதும் மூவர் கண்ணிலும் கண்ணீர் ஆறாகப் பெருகியது.
தொடரும்
அலைபேசி: 72999 68695

பிரபு சங்கர்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X