கொடுத்ததற்கு நன்றி சொல்லுங்க!
டிசம்பர் 13,2019,09:44  IST

அந்த கணவர், மனைவிக்கு காஞ்சி மகாசுவாமிகள் சொல்வது அத்தனையும் வேதவாக்கு. அவர் சொன்னால் தெய்வம் சொல்வது மாதிரி என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
சுவாமிகளை தரிசிக்க வரும் சமயத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி அவர்கள் பிரார்த்தனை பண்ணுவது வழக்கம். ஒருமுறை கண் கலங்கியபடி, 'சுவாமி! எங்களுக்கு கல்யாணமாகி நீண்டகாலம் ஆகிடுச்சு; இதுவரை குழந்தைப் பேறு இல்லையே? ஏன்?' எனக் கேட்டனர்.
கனிவுடன் பார்த்த சுவாமிகள், ''ஒருவரின் பாவ, புண்ணியங்கள் தான் விதியை நிர்ணயிக் கிறது. போன பிறவியில் செய்த செயல்களின் பலனை இப்பிறவியில் நாம் அனுபவிக்கிறோம். இப்போதாவது பாவம் செய்யாமல் புண்ணியச் செயல்களில் ஈடுபட வேண்டும். இப்போது என்ன கிடைத்திருக்கிறதோ அது நம் கர்மவினைகளின் பலன் என ஏற்கும் பக்குவம் வேண்டும்.
போன பிறவியில் பகவான் உங்களுக்கு குழந்தையைக் கொடுத்திருப்பான். ஆனால் அதை பீடை, சனியன்னு வாய் ஓயாம திட்டியிருந்தால் இப்பிறவியில் குழந்தை பாக்கியம் கிடைக்குமா?
இப்போது குழந்தை பாக்கியம் வேணும்னு நீங்கள் பிரார்த்தனை பண்ணலாம். ஆனால் கிடைக்கலேன்னு வருத்தப்படக் கூடாது. பகவான் சித்தத்தை விமர்சிக்கும் அதிகாரம் யாருக்குமில்லை? அது துலாக்கோல்! அதாவது தராசு. நியாயத்தைத் தான் வழங்கும்.
பகவான் நமக்கு உடல்நலம், பொருளாதார வசதி, வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால் கடவுள் தராததுக்காக ஏங்கற நாம், அவர் கொடுத்ததை நினைச்சு சந்தோஷப்பட மாட்டேங்கறோமே?
பேசும் போது கூட ஜாக்கிரதையா இருக்கணும். யார் மீது பழி, அவதுாறு சொல்லக் கூடாது. உருவத்தை காட்டி கிண்டல் செய்யக் கூடாது. அப்படி பேசுவதைக் கேட்டாலும் ஒருவருக்கு பாவம் சேரும்.
நமக்குக் கிடைத்த பெற்றோர், சகோதர சகோதரிகள், வாழ்க்கைத் துணை எல்லாம் முற்பிறவியில் நாம் ஆசைப்பட்டதால் கிடைத்தது தான். அன்பான சொந்த பந்தம் கிடைத்தும் மதிக்காமல் கரித்துக் கொட்டினால், மறு பிறப்பில் யாரும் இல்லாமல் அனாதையாக நிற்க நேரிடும்.
ஒரே பிறவியிலேயே எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடாது. சிலருக்குச் சில கிடைக்கலாம்; கிடைக்காமலும் போகலாம். கிடைக்காததை எண்ணிக் கவலைப்படுவதில் அர்த்தமில்லை. நமக்கு எது கிடைக்க வேண்டும் என முன்வினை நிர்ணயிக்கிறதோ அது மட்டுமே கிடைக்கும். அதன் மூலம் சந்தோஷமாக வாழத் தெரிய வேண்டும். தொடர்ந்து பிரார்த்தனை பண்ணுங்கோ. பகவான் எது தந்தாலும் சந்தோஷமாக ஏத்துக்குங்கோ!' என்று குங்குமப் பிரசாதம் கொடுத்தார். அவர்களும் மனநிம்மதியுடன் அங்கிருந்து கிளம்பினர்.
தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.com

திருப்பூர் கிருஷ்ணன்

உபதேசங்கள்
* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.
* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
* நாடு நலம் பெற பசுக்களைக் காப்போம்.
* தாய் மதம், தாய் மொழி, தாய் நாட்டை நேசியுங்கள்.

உடல்நலம் பெற...
இந்த ஸ்லோகத்தை தினமும் படித்தால் உடல் நலத்துடன் வாழலாம் என காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.
அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்தமயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருத்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X