மீண்டும் பச்சைப்புடவைக்காரி (11)
டிசம்பர் 13,2019,09:47  IST

எழுத்தாளரும் பேனாவும்

அவர் புற்று நோய்க்குச் சிகிச்சை செய்யும் மருத்துவர். என் நீண்டகால வாடிக்கையாளர். வருமான வரி சம்பந்தமாக சந்தேகம் கேட்க அன்று மாலை என் அலுவலகத்திற்கு வந்தார்.
பத்தே நிமிடத்தில் அவர் கேட்டதற்கு விளக்கம் அளித்தேன் என்றாலும் அவரது முகத்தில் ஏதோ வருத்தம் தென்பட்டது.
“வேற ஏதாவது சொல்லணுமா... டாக்டர்?”
“ஆமா...ஆடிட்டர் சார். வருமானவரி சம்பந்தமா இல்ல. ஒரு நோயாளியோட பிடிவாதம் பத்திப் பேசணும்.”
“அதற்கு நான் என்ன செய்யப் போறேன்?”
“உங்களால முடியாது தான். ஆனாலும் யார்கிட்டயாவது சொல்லலேன்னா என் தலை வெடிச்சிரும் போலிருக்கு.”
“சொல்லுங்க.”
“அவருக்கு வயசு 65. பள்ளிக்கூட வாத்தியார். ரிட்டயர் ஆயிட்டாரு. கெட்ட பழக்கம் ஏதுமில்லை. கேன்சர் வந்துருச்சு. சரியான நேரத்துல கண்டுபிடிச்சிட்டோம்.”
“அப்புறம் என்ன? சிகிச்சை செய்ய வேண்டியது தானே?”
“அதுலதான் சார் சிக்கல். சிகிச்சையே வேண்டாம்ன்னு அடம் பிடிக்கறாரு. நானும் அவர்கிட்ட தினமும் பேசிக்கிட்டே இருக்கேன். மனுஷன் அசைய மாட்டேங்கறாரு.”
“விட்டு விட வேண்டியது தானே?”
“அப்படி விடறதுக்கு இது.. உங்க தொழில் மாதிரி இல்ல சார். 'ஒழுங்கா வரியக் கட்டிரு. இல்லாட்டி சங்குதான்னு' நீங்க சொல்லலாம். என்னால முடியல, சார். தேவையில்லாத பிடிவாதத்தால ஒரு நல்ல மனிதர் சாகப் போறாரேன்னு நினைக்கும்போது மனசு துடிக்குது சார். நீங்க பணமே தர வேண்டாம். மொத்த செலவையும் நானே ஏத்துக்கறேன்னு கூடச் சொல்லிட்டேன் சார்.”
“அதுக்கு மேல என்ன தான் செய்ய முடியும் டாக்டர்?”
“அதுதான் எனக்கும் தெரியல. இன்னும் பத்து நாள்ல சிகிச்சை ஆரம்பிக்கலேன்னா உயிருக்கே ஆபத்து. என்ன செய்யறதுன்னே தெரியல சார். உங்ககிட்ட சொல்லிட்டேன். மனசுல பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு. நான் வரேன் ஆடிட்டர் சார்.”
அவரது பாரம் என் மனதில் ஏறிக் கொண்டது. எனக்கு இருக்கும் ஒரே போக்கிடம் பச்சைப்புடவைக்காரிதான். அவளிடம் சொல்லியழுதேன்.
செய்ய வேண்டிய வேலையை பாதியில் விட்டு விட்டு அலுவலகத்தைப் பூட்டி விட்டு கிளம்பினேன். மாடிப்படியை ஒரு பெண்மணி பெருக்கிக் கொண்டிருந்தாள்.
“கொஞ்சம் இருங்க. நான் போய்க்கறேன்.”
“ஏன் நான் கூட்டும் போது போனா துாசி ஒட்டுமோ?”
என்ன தெனாவெட்டு?
“யாரும்மா நீ? புதுசா இருக்க? இதுவரைக்கும் உன்னைப் பார்த்ததில்லையே!”
“நானா புதுசு? இருக்கறதுலேயே பழசு நான் தான் சாமி! இந்த உலகம் தோன்றும் முன்பே இருப்பவள் நான். உலகையும் உன்னையும் தோற்றுவித்தவள் நான்.,”
“தாயே!” என்று விழுந்து வணங்கினேன்.
“அந்த மருத்துவரும் சரி, நீயும் சரி யாரோ ஒருவருக்காகக் கவலைப்படுகிறீர்கள். அவருக்காக இல்லாவிட்டாலும் உங்கள் இருவருக்காகவாவது அந்த மனிதரின் பிடிவாதத்தைப் போக்குகிறேன். இந்த முறை உன் மூலமாகவே அதைச் செய்கிறேன்.''
ஐந்து நாளும் ஐந்து நிமிடமாக ஓடியது. அன்று வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள். அந்தப் புற்று நோய் மருத்துவரின் கணக்கைப் பார்த்தேன். சில படிவங்களில் அவரது கையெழுத்து விடுபட்டிருந்தது. மணியைப் பார்த்தேன். பகல் 12:00 மணி. மருத்துவமனையில் அவர் பரபரப்பாக இருக்கும் நேரம்.
அலைபேசியில் அழைத்தேன்.
“சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் நான் இருக்கற இடத்த விட்டு அசைய முடியாது. அதுக்கு அப்பறம்?''
“டாக்டர் நான் அங்கே வரலாமா?”
“வரலாம். ஆனா நீங்க இவ்வளவு துாரம்.. வரணுமேன்னு…''
“பரவாயில்ல சார்...வரேன்”
அந்தப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையில் அவரை பார்த்துப் பேசவே நீண்ட நேரமாகி விட்டது. அவரைப் பார்க்க ஒரு பெரிய கூட்டமே காத்திருந்தது. அதில் சிலர் வலி தாளாமல் முக்கவும், முனங்கவும் செய்தனர்.
ஐந்து நிமிட காத்திருப்புக்குப் பின் என்னை உள்ளே அனுப்பினர். கையெழுத்து வாங்கும் வேலை உடனே முடிந்து விட்டது.
அப்போதுதான் மருத்துவரின் முகத்தைக் கவனித்தேன். நிம்மதி குடியிருந்தது.
“இன்னொரு அஞ்சு நிமிஷம் எடுத்துக்கலாமா..சார்?”
“தாராளமா!”
“சிகிச்சை வேண்டாம் என அடம் பிடிச்சாரே ஒரு பேஷண்ட்? ரிட்டயர்ட் ஸ்கூல் வாத்தியார்? எப்படி இருக்காரு?”
“கையக் கொடுங்க , ஆடிட்டர் சார். உங்களால பிரச்னை தீர்ந்திருடுச்சு.”
என்னாலா? அந்த நபரை கருப்பா, சிகப்பான்னு கூடத் தெரியாதே!
“மூணு நாளைக்கு முன்னால ஒரு அக்கவுண்டண்ட் உங்ககிட்டப் பச்சைப்புடவைக்காரி புத்தகம் வேணும்னு கேட்டாரா?”
நினைவில் இருக்கிறது. 'என்னிடம் கொஞ்சம் பிரதிகள் தான் இருக்கின்றன. இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள், வாங்கித் தருகிறேன்' என முதலில் சொன்னேன்.
“இது எனக்கு இல்ல. எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கறவருக்கு. அவருக்கு உடம்பு சரியில்ல. பாவம் ரொம்பவே ஆடிப் போயிருக்காரு. அதனால தான்..''
என் கையில் இருந்த ஒரே பிரதியை உடனே அந்தக் கணக்குப் பிள்ளையிடம் கொடுத்தேன்.
“கோச்சிக்காம இதுல கையெழுத்தும் போட்டுக் கொடுத்திட்டீங்கன்னா''
“இத யாருக்கோ கொடுக்கப் போறதாச் சொன்னீங்களே! அவங்க பெயரைச் சொல்லுங்க! அதை குறிப்பிட்டு கையெழுத்துப் போடுறேன்.”
அந்த கணக்குப் பிள்ளைக்கு வாயெல்லாம் பல்.
“புத்தகத்துக்கு எவ்வளவு கொடுக்கணும் சார்?”
“ஒண்ணும் வேண்டாம். என் அன்பளிப்பா அவருக்குக் கொடுங்க. பச்சைப்புடவைக்காரி கைவிடமாட்டான்னு அவர்கிட்ட சொல்லுங்க.”
“அந்தப் புத்தகம் நான் சொன்ன நோயாளிக்குத் தான். அவர் கைக்கு வந்தவுடனேயே படிக்க ஆரம்பிச்சிட்டாரு. ரெண்டு நாள்ல முழுசா படிச்சி முடிச்சிட்டாரு. அன்னிக்கு என்னைப் பாக்க வந்தாரு.
“டாக்டர் என்ன வேணும்னாலும் செஞ்சிக்கங்க. கீமோ தெரப்பி, ரேடியேஷன்னு எதை வேணும்னாலும் செய்யுங்க. நான் பொழைச்சா பச்சைப்புடவைக்காரி கால்ல விழுந்து கெடப்பேன். செத்தாலும் அவ காலடியிலேயே சேர்வேன். எந்த நிலையிலயும் அவள விட்டு விலகியிருக்க முடியாதுன்னும் போது எதுக்கு சார் பயப்படணும்?”
டாக்டர் அசந்து விட்டார். நோயாளி தொடர்ந்தார்.
“போன மாசம்தான் எனக்கு பென்ஷன் அரியர்ஸ் வந்தது. லட்ச ரூபாய். அத அப்படியே உங்ககிட்டக் கொடுத்துடறேன். என் டிரீட்மெண்ட்டுக்கான பணத்தை எடுத்துக்கிட்டு மீதியை ஏழை நோயாளிகளுக்காக செலவழிங்க. நான் கொடுத்தேன்னு யாருக்கும் தெரியக்கூடாது.''
இதைச் சொல்லும் போதே மருத்துவரின் கண்கள் குளமாயின. என் கண்களும் தான்.
“நான் இருபது மணி நேரம் அவர்கிட்டப் பேசியிருப்பேன். அதுல ஏற்படாத மனமாற்றத்த உங்க எழுத்தால வந்திருக்குன்னு தெரியும் போது...”
“எழுத்து அவளுது டாக்டர். நான் அவ கையிலுள்ள பேனா. இந்த தரம் அவ தன்னோட எழுத்து மூலமா ஒருத்தரோட உயிரக் காப்பாத்த முடிவு பண்ணிட்டா. இந்தப் பேனா செஞ்ச புண்ணியம் அந்த எழுத்த அவ சொல்லச் சொல்ல எழுதிச்சி., மாலையும் மரியாதையும் அந்த மரகதவல்லிக்குத் தான்.''
இன்னும் வருவாள்
தொடர்புக்கு: varalotti@gmail.com

வரலொட்டி ரெங்கசாமி

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X