வரதா வரம்தா... (27)
பிப்ரவரி 07,2020,08:48  IST

வேதாந்த தேசிகன் ஸ்ரீரங்கம் வரப் போவதை அறிந்து, காவிரி ஆற்றங்கரையில் இருந்து வீட்டை நோக்கி நடந்த லோகாச்சார்யாரிடம் மனதில் நம்பிக்கை பிறந்தது.
வழியில் ஆள் நடமாட்டமே இல்லை. படித்துறையில் துணி வெளுக்கும் சப்தம் கேட்கும்.
ஆனால் அதற்கான சுவடே இல்லை.
சோர்வுடன் தொடர்ந்து நடந்தவர் முன் ஆடுகள் செருமியபடி சென்றன. ஸ்ரீரங்கத்தில் பசுக்கள், காளைகள் செல்வது சகஜம். ஆனால் மாமிசத் தேவைக்கான.ஆடுகளின் தேவை இல்லாத ஊர் அது.
சுல்தானிய வீரர்களின் உணவுத் தேவைக்கே அவ்வளவு ஆடுகளும் சென்ற வண்ணமிருந்தன.
லோகாச்சார்யாருக்கு கண்ணீர் சுரந்தது.
வீட்டு வாசலில் பக்தர்கள் பலர் காத்திருந்தனர். அவர்களின் முகத்தில் இருள் அப்பிக் கிடந்தது.
வீட்டிற்குள் ஒரு ஓரமாக இருந்தார் லோகாச்சார்யாரின் தந்தை வடக்கு திருவீதிப்பிள்ளை. அருகில் தாய் அம்மி இருந்தார். அவர்களுக்கு உணவிட்டபடி இருந்த மணவாளப் பெருமாள் என்னும் லோகாச்சார்யாரின் தம்பி ஏறிட்டுப் பார்த்தார்.
''தம்பி...''
''அண்ணா...''
''பெற்றோருடன் ஸ்ரீரங்கத்தை விட்டுப் புறப்படு. மணமேல்குடியில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் செல். இவர்கள் இங்கிருப்பது எனக்கு சரியாகப் படவில்லை'' என்றார்.
''ஏன் இந்த முடிவு! வாழ்வும், முடிவும் ஸ்ரீரங்கத்தில் என்பது தானே நம் விருப்பம்''
''ஆனால் அதற்குரியதாக காலம் இல்லையே... என்ன செய்ய?''
'' நம்பிக்கைக்குரிய நீங்களே மனம் தளர்ந்தால் எப்படி அண்ணா?''
''தவிர்க்க முடியவில்லை தம்பி... நாம் சோதனைக்கு ஆளாகியுள்ளோம்''
''சோதனையைச் சாதனையாக மாற்றுவோம்''
'' முயற்சிக்காமல் இல்லை''
''அண்ணா...''
''தயவு செய்து சொன்னதைக் கேள். பெற்றோர் சிரமப்படக் கூடாது. அவர்கள் அரங்கன் திருவடிகளை அடையும் வரை விழிப்புடன் இருக்க வேண்டும்''
''சரி அண்ணா...'' என்ற மணவாளப்பெருமாள் பெற்றோருடன் ஸ்ரீரங்கத்தை விட்டு புறப்பட தயாரானார்.
தனக்காக காத்திருக்கும் பக்தர்களை காண வந்தார் லோகாச்சார்யார். கலக்கமுடன் நின்ற அவர்களில் மணப்பாக்கத்து நம்பியும் ஒருவர்.
'' பிறந்து வளர்ந்த இந்த ஊரை விட்டு போக நேருமோ என அச்சமாக உள்ளது'' என்றார் அவர்களில் ஒருவர்.
''பயப்படாதீர்கள்! அரங்கன் அருளால் எதுவும் நேராது''
''அப்படியானால் தங்களின் பெற்றோரை அனுப்பக் காரணம்?''
''அவர்கள் முதுமை அடைந்து விட்டனர். எதிர்பாராமல் ஏதாவது நடந்தால் அதிர்ச்சியிலேயே உயிர் பிரிய நேரிடும். அவர்கள் நடப்பை அறியாமல் இருப்பதே நல்லது எனக் கருதுகிறேன்''
''அப்படியானால்... எதிர்பாராதது ஏதும் நடக்கப்போகிறதோ?''
''அப்படி நடப்பது தானே வாழ்க்கை''
''விதிவசம் நடப்பதற்கும், இப்படி மனித சதியால் நடப்பதற்கும் வேற்றுமை உள்ளதே?''
'' எப்படி கேட்டாலும் சரி. பதில் இதுதான். அரங்கன் அருள் நமக்கு துணை நிற்கும்''
லோகாச்சார்யார் உறுதிபடச் சொன்ன அந்த நொடி, குதிரை மீது வந்த சோழவீரன் ஒருவன், ''ஆச்சார்யரே! நீங்களும் இப்படி பேசுவதனாலேயே ஆபத்து உருவாகி விட்டதை அறிவீர்களா?'' எனக் கேட்டான்.
''என்னப்பா அது?'' எனத் திருப்பிக் கேட்டார்.
''அந்நியர்கள் முதலில் அழிக்க எண்ணியிருப்பது நம் மன்னரின் குடும்பங்களையோ, அரண்மனைகளையோ அல்ல''
எல்லோரும் அவனையே பார்த்தனர். மேலும் தொடர்ந்தான்.
''அவர்களின் குறி கோயில்கள் மீது தான் எனத் தகவல் வந்துள்ளது. நம்முடைய பலமே பக்தி தான். அதை உடைப்பதே அவர்களின் நோக்கம். எனவே கோயில்களைத் தகர்ப்பது, அங்கு நகைகளை கொள்ளையடிப்பது தான் அவர்களின் திட்டம்'' அதைக் கேட்ட லோகாச்சார்யார், ''நானும் இதை அறிவேன். இது தான் எதிரிகளின் போக்கு. யாருக்கு எது பலமோ அதை குலைக்க முயல்வர். பக்தி, கலாசாரம் தானே நம் பலம்?''
''இதை எப்படி எதிர்கொள்வது?''
''பக்தி, நம்பிக்கையோடும் தான்''
''சொல்வது சுலபம். அதை பின்பற்றுவது கடினம் அல்லவா?''
''கஷ்டப்பட்டால் தானே சுகப்பட முடியும்''
''சரி. தங்களின் திட்டம்...''
''இப்போது கூற முடியாது. காஞ்சிபுரத்தில் இருந்து வேதாந்த தேசிகன், ஸ்ரீரங்கம் வருவதாக செய்தி வந்துள்ளது. அவரது வருகை நமக்கு பலம்தான்! அவர் இங்கு வரட்டும்''
''அவரும் நம்மைப் போல ஒருவர் தானே! அவரால் என்ன முடியும்?''
'' அப்படி கருதாதீர்! அவர் எம்பெருமானின் பூஜை மணியின் அம்சமாக அவதரித்தவர். யந்திர, மந்திர, தந்திரங்களில் வல்லவர்''
''அப்படி என்றால்?''
''அவ்வளவும் அருள் சார்ந்தவை. இதற்கு மேல் இப்போது விவாதம் வேண்டாம். பொறுமையாக இருப்போம். எல்லாம் நலமாக அமையும்'' என அந்த வீரனுக்கு விளக்கம் தந்த லோகாச்சார்யார், வீட்டிற்குள் வந்தார். அங்கிருந்த மரப்பெட்டி ஒன்றை திறந்தார். மணப்பாக்கத்து நம்பியும் காத்திருந்தார்.
உள்ளே கட்டுக் கட்டாக சுவடிகள்!
அவற்றில், 'ரஹஸ்ய த்ரயம்' 'தத்வ த்ரயம்' என்னும் சமஸ்கிருத ஏடுகள், நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடல்கள் என கட்டாக இருந்திட அதை எடுத்து கண்களில் ஒற்றினார். அதை உற்றுப் பார்த்த நிலையில் மீண்டும் பெட்டிக்குள் வைத்து பூட்டினார்.
அதை எடுத்து எம்பெருமானின் கொலு ரூபம் அருகில் வைத்தார். பள்ளி கொண்ட அரங்கநாத ரூபத்தை அப்படியே துாக்கி பெட்டி மீது வைத்தவராக, ''இந்த பொக்கிஷங்களுக்கு காவல் நீயே!'' என மனதிற்குள் பிரார்த்தித்தார்.
திரும்பிப் பார்த்த போது வெயில் உச்சிக் காலத்தை நினைவூட்டியது. உச்சிக்கால பூஜைக்கான மணிச்சப்தம் காதில் விழுமே! ஆனால் விழவில்லையே!. சுல்தானியர்கள் அதற்கும் தடை விதித்து விட்டார்களா?'' என்ற சந்தேகமுடன் கோயிலுக்கு புறப்பட்டார். மணிப்பாக்கத்து நம்பியும் கூட வந்தார்.
ஸ்ரீரங்கம் போலவே காஞ்சிபுரம் அத்திவரதன் கோயிலிலும் உச்சிக்கால பூஜைக்கான மணி ஒலிக்கவில்லை. லோகாச்சார்யார் போல தேசிகனும் கோயிலை நோக்கி நடந்தார். வழி எங்கும் பல மாறுதல்கள். சமணத்துறவிகள் பலர் மவுனமாக ஊரை விட்டே சென்று கொண்டிருந்தனர். குதிரை பூட்டிய தேர்கள் குறுக்கும், நெடுக்குமாக சென்றன. தேசிகன் மனதிற்குள் கருட மந்திரத்தை உச்சரித்தபடி நடக்க, அவர் தலையின் மீது ஒரு கருடன் நிழல் விழும்படி பறந்தது. இதைக் கண்ட சிலர் ஆச்சரியப்பட்டனர்.

தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X