கண் மருத்துவர் மீது கரிசனம்
பிப்ரவரி 18,2020,15:12  IST

1974ல் நடந்த சம்பவம்.
35 வயது கொண்ட வெளிநாட்டில் படித்த கண் மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் காஞ்சி மகாசுவாமியின் பக்தர்.
மகாசுவாமிகளுக்குக் கண்புரை (வெள்ளெழுத்து) அறுவை சிகிச்சை செய்ய சுவாமிகளின் அன்பர்கள் இவரைத் தான் அணுகினர். சுவாமிகளின் பக்தர் என்பதால் அக்கறையுடன் அறுவை சிகிச்சை செய்வார் என எண்ணினர். மருத்துவரும் தமக்குக் கிடைத்த பாக்கியமாக இதனை கருதினார்.
சிகிச்சை முடிந்ததும், சில நாட்கள் தலைக்குக் குளிக்காமல் இருக்கவும், சிகிச்சைக்குப் பின் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்தும் சுவாமிகளுக்கு எடுத்துக் கூறினார். புன்னகைத்தபடி மருத்துவர் சொன்னதை கேட்டார் சுவாமிகள்.
ஒரு சில நாட்கள் கழிந்ததும், அன்றைய நாளிதழைப் புரட்டிய மருத்துவர்
திகைப்படைந்தார். காரணம் அன்று கிரகணம். கிரகணம் விட்டதும் தலைக்குக் குளிக்க வேண்டுமே! மகாசுவாமிகள் ஆசாரசீலர் ஆயிற்றே? தலைக்குக் குளிக்கக் கூடாது என வற்புறுத்தி சொன்னாலும் அவர் சொன்னதை அனுசரிப்பாரா? ஒருவேளை குளித்து பார்வை சரியாகவில்லை என்றால் சங்கடமாயிற்றே?
பதட்டம் அடைந்த அந்த மருத்துவர் காஞ்சிபுரம் விரைந்தார். சுவாமிகளை சந்திக்க அனுமதி கேட்டார். பரபரப்புடன் நின்ற மருத்துவரைப் பார்த்த சுவாமிகள், ''என்ன கிரகண புண்ணிய காலம் முடிந்ததும் தலைக்குக் குளித்திருப்பேனோ என பயத்தில் ஓடி வந்தாயா? அப்படி செய்வேனா? ஒருவேளை குளித்து கண்கோளாறு சரியாகவில்லை என்றால் உன் தொழில் அல்லவா பாதிக்கப்படும்? நீ வளர்ந்து வரும் மருத்துவர் ஆயிற்றே? உன் மீது எனக்கு அக்கறை இல்லாவிட்டால் எப்படி? மந்திர ஸ்நானம் என்னும் முறை சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆபத்து காலத்தில் அதைப் பண்ணலாம் என்ற விதி இருக்கிறது. நாமந்திர ஸ்நானம் தான் செய்தேன். கவலைப்படாதே! நிம்மதியாக உன் வேலையைப் பார்!'' என்றார்.
மருத்துவரின் விழிகளில் கண்ணீர் வழிந்தது. தொழிலில் தான் நற்பெயர் எடுக்க சுவாமிகள் காட்டிய அக்கறை கண்டு மனம் நெகிழ்ந்தார். சுவாமிகளின் ஆசி பொய்க்கவில்லை. தொழிலில் பெரும் வளர்ச்சி பெற்றார். காஞ்சி மகாசுவாமிக்கே சிகிச்சை செய்தவர் என்ற புகழ் பரவியது.
பிற்காலத்தில் சுவாமிகளின் ஆசியுடன் சென்னையில் மருத்துவமனை தொடங்கினார். பிறகு நாட்டின் பல இடங்களில் கிளைகள் தோன்றின. அந்த மருத்துவமனை தான் மகாசுவாமிகளின் குருவான ஆதிசங்கரரின் பெயர் கொண்ட 'சங்கர நேத்ராலயா'. அந்த மருத்துவர் பத்மவிபூஷண் விருது பெற்ற டாக்டர் பத்ரிநாத்.

திருப்பூர் கிருஷ்ணன்

உடல்நலம் பெற... காஞ்சிப்பெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
பொருள்: பரம்பொருளே! எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! மகத்துவம் கொண்டவரே! நீயே நோய்களைப் போக்கி எனக்கு நலம் தர வேண்டும்.

உபதேசங்கள்
* நாடு செழிக்க பசுவை நேசியுங்கள்.
* தாய் மதம், தாய் மொழி, தாய் நாட்டை நேசியுங்கள்.
* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.
* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
* காலையில் எழுந்ததும், மற்றவர்களுக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.
* சாப்பிடும் முன் பறவை, விலங்குகளுக்கு உணவிடுங்கள்.
* தினமும் திருநீறு, குங்குமம் இடுங்கள்.
* உறங்கும் முன், அன்றைய நாளில் செய்த நன்மை, தீமைகளை அலசி ஆராயுங்கள்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X