மீண்டும் பச்சைப்புடவைக்காரி (20)
பிப்ரவரி 18,2020,15:21  IST

விரைவு வழி

அந்த அற்புத நிகழ்ச்சியை ஒரு கார்ப்பரேட் மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்தது. மாற்றுத் திறனாளி குழந்தைக்கான பிரம்மாண்டத்
திருவிழா. சிறப்புப் பள்ளிகளில் பயிலும் ௪௫௦ குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயம், கூடைப்பந்து, குண்டு எறிதல், படம் வரைதல் என ஒவ்வொரு நிகழ்ச்சியும் நெகிழ்ச்சியாக இருந்தது.
அந்த நிகழ்ச்சியில் என்னை மிகவும் பாதித்தது ஒரு பதினாறு வயது பெண். பார்க்க அழகாக இருந்தாள். ஆனால் போதிய மன வளர்ச்சியில்லை. அவளின் தாயும் கூட வந்திருந்தாள். இப்படிப்பட்ட குழந்தையைப் பெற்றவளுக்கு வாழ்வே கசந்திருக்கும். எதிலும் பிடிப்பில்லாமல் இருப்பர். ஆனால் அந்தத் தாய் விதிவிலக்காக இருந்தாள். தன் மகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட போது அவளை மட்டும் உற்சாகப்படுத்தாமல் போட்டியில் பங்கேற்ற அனைவரையும் உற்சாகப்படுத்தினாள். அவளது மகளே முதலில் வந்த போதிலும் மற்ற குழந்தைகளையும் அணைத்து ஆறுதல் சொன்னாள்.
அந்தத் தாயைப் பற்றி விசாரித்தேன். அவளுக்கு ஒரே பெண். பிறக்கும் போதே ' குழந்தைக்கு மன வளர்ச்சியிருக்காது' என மருத்துவர்கள் கூறி விட்டனர். அதை கேள்விப்பட்ட அவளது கணவன் ஓடிவிட்டான். பாவம் பெற்றவள் தான் குழந்தையை வளர்க்க படாத பாடுபட்டிருக்கிறாள். பெண் குழந்தை அதுவும் இளம் வயது என்பதால் கூடுதல் பாதுகாப்பு அவசியம். நிதி நிலையைச் சமாளிக்க வேலைக்குப் போக வேண்டும். வீட்டுக்கு வந்ததும் வேலை சரியாக இருக்கும்.
அந்தத் தாயிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
“கணவர் பிரிந்து விட்டார்; குழந்தைக்குப் பிரச்னை; நிதிப் பிரச்னை; வாழ்க்கையே பிரச்னை. இதை எல்லாம் உங்களுக்குக் கொடுத்த பச்சைப்புடவைக்காரியின் மீது கோபம் இல்லையா?”
“சார் அந்தப் பொம்பளை - அதான் சார் மீனாட்சி - அவ என்ன செஞ்சாலும் அதுக்கு காரணம் இருக்கும் சார்.
“இல்ல பொண்ணு இப்படி இருக்கான்னு.. “
“என் பொண்ணு அவ கொடுத்த பிரசாதம். வீட்டுல செய்ற சாதம் சரியா வேகலைன்னு குறை சொல்லலாம். ஆனா அவ கோயில்ல தர்ற பிரசாதத்தைக் குறை சொல்லலாமா? சரியா கணக்கு வச்சிருப்பா சார் அவ. அது புரியாம குறை சொல்றது பாவம் சார்.”
வரவேண்டிய பதவி உயர்வு கொஞ்சம் தாமதமானாலே கடவுளைக் கன்னாபின்னாவென திட்டும் கூட்டத்தின் நடுவே இப்படி ஒரு பக்தியா?
“இன்னிக்குக் கோயிலுக்குப் போகலாம்னு இருந்தேம்மா. ஆனா இப்போ அது தேவையில்லன்னு தோணுது. அதான் உங்களப் பாத்துட்டேனே! பாருங்க நீங்களும் பச்சைப்புடவை தான் கட்டியிருக்கீங்க!”
கண்ணீர் மல்க புன்னகைத்தபடி அவள் புறப்பட்டாள்.
எனக்குத் தான் மனம் ஆறவில்லை. மன வளர்ச்சி குன்றிய அந்தப் பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே எனக்குத் தோன்றியது. சரி... தாய் இருக்கும் வரை பார்த்துக் கொள்வாள். அதன் பின்? இப்போதே இப்படி என்றால் இன்னும் வயதாகும் போது என்ன மாதிரி பிரச்னை வருமோ? பார்க்க அழகாக வேறு இருக்கிறாள். அதனால் ஆபத்து நேருமே!. பச்சைப்புடவைக்காரியின் மனதில் ஈரமில்லையா?
ஒரு வாரம் கழித்து சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றேன். அவரது மைத்துனர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவரது மகள் நாட்டியம் கற்க வேண்டுமாம். பிரபல நாட்டியப் பள்ளிக்குச் செல்ல திட்டமிட்டனர். என்னையும் அழைத்துச் சென்றனர். அங்கே ஒரு அறையில் காத்திருக்கச் சொன்னார்கள்.
சென்னையின் வடபகுதியில் இருந்தது அந்தப் பள்ளி. அதை நடத்துபவர் பிரபல நாட்டியக் கலைஞர். அவரது வீட்டிலேயே நாட்டிய பள்ளி இருந்தது. 3,000 சதுரடிக்கு கிரானைட்டால் ஆன மேடை. ஐம்பது பேர் அமர்ந்து
பார்க்கும் அளவிற்கு அரங்கம் அமர்க்களமாக இருந்தது.
பச்சைப்புடவைக்காரியுடன் கோபித்துக் கொண்டு ஒரு வாரமாகி விட்டது. கோயிலுக்குப் போகவில்லை. அபிராமி அந்தாதி சொல்லவில்லை. அவளது கொத்தடிமை என அடிக்கடி சொல்லும் நான் அவளது செய்கையில் தப்புக் கண்டுபிடிக்கலாமா? இந்த நினைப்பு வந்தவுடன் அழுகை வந்தது. யாருக்கும் தெரியாமல் கண்ணைத் துடைத்தேன்.
நடனக் கலைஞரின் உதவியாளர் நாங்கள் இருந்த அறைக்குள் நுழைந்தாள். நடுத்தர வயது. திருத்தமான முகம். ஒவ்வொரு அசைவிலும் நாட்டியம் மிளிர்ந்தது. என்னைக் கடக்கும் போது கையில் இருந்த புத்தகத்தைக் கீழே போட்டாள். அதை எடுக்கக் குனிந்தவள் எனக்கு மட்டும் கேட்குமாறு பேசினாள்.
“நடப்பதைக் கவனி. உன் கேள்விக்கு விடை கிடைக்கும்.”
உறவினரும், அவர் மைத்துனரும் அந்தப் பெண்ணிடம் தங்களின் நிலையைச் சொன்னார்கள்.
“என் பொண்ணு டான்ஸ் கத்துக்கணும்.''
“கிராமத்து நடனப் பயிற்சிக்கு எப்படியும் ஏழு ஆண்டாகும். எங்க பீஸ் மூணு லட்சம்”
“என் பொண்ணு டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசைப்படறா. அதனால ரெண்டு, மூணு வருஷத்துல மொத்தப் பயிற்சியையும் முடிச்சிரணும். அதுக்கு எவ்வளவு செலவாகும்?”
“ஏழு லட்சம். அது மட்டுமில்ல தினமும் நாலு மணி நேரம் பயிற்சி. சில நாள் ஆறு, ஏழு மணி நேரம் கூட ஆகலாம். வலி பின்னி எடுத்திரும். இதையெல்லாம் உங்க பொண்ணு தாங்கிக்க முடியும்னா பாஸ்ட் ட்ராக்ல சேத்திருங்க. ரெண்டு, ரெண்டரை வருஷத்துல அரங்கேற்றம் பண்ணிரலாம்.”
உதவியாளர் என்னைப் பார்த்து ஜாடை காட்டினாள்.
“மேடம் குடிக்க தண்ணி வேணும்.” எனக் கேட்டேன்.
“என் கூட வாங்க.”
பச்சைப்புடவைக்காரியை பின்தொடர்ந்தேன். அறையைவிட்டு வெளியில் வந்ததும் அவள் காலில் விழுந்தேன்.
“மனவளர்ச்சி குன்றிய அந்தப் பெண்ணைப் பெற்ற தாய் முற்பிறவியில் என்ன பாவம் செய்தாள்? யாருக்காவது நம்பிக்கை துரோகம் செய்தாளா? இல்லை மாபாதகம் ஏதும் செய்தாளா? என்ன பரிகாரம்.. ”
“அவள் என் அடியவள். என் மனதிற்கினியவள்.”
“உங்கள் அடியவருக்கே இப்படித் துன்பம் கொடுத்தால் மற்றவர்களை என்ன செய்வீர்கள்?”
“உன்னுடன் வந்தவர்கள் கேட்டது போல்தான் அவளும் கேட்டாள். 'தாயே எனக்கு பிறப்பு, இறப்பு என சுற்றும் இந்த சம்சார வாழ்வு அலுத்துவிட்டது. உங்களுடன் உடனே இரண்டறக் கலக்க வேண்டும் என என் ஆன்மா துடிக்கிறது.”
“அதற்கு இன்னும் பதினாறு பிறவிகள் எடுக்க வேண்டுமே!”
“விரைவு வழி ஏதுமில்லையா?”
“இருக்கிறது. ஒரே பிறவியில் உன் கர்மக்கணக்கில் மொத்தத் துன்பங்களையும் அனுபவித்தால் அந்தப் பிறவி முடிந்தவுடன் என்னை அடையலாம்.”
அவள் சம்மதித்தாள். உன்னுடன் வந்தவர்கள் ஏழாண்டு பயிற்சியை இரண்டரை ஆண்டில் முடிக்க விரும்பியது போல அவள் பதினாறு பிறவிகளில் அனுபவிக்க வேண்டியதை ஒரே பிறவியில் அனுபவிக்கிறாள்.
எனக்குப் பேச்சே வரவில்லை.
“என்ன துன்பம் நேர்ந்தாலும் அதைச் சிரித்தபடி ஏற்கும் வலிமையை அவள் கேட்காமலேயே கொடுத்திருக்கிறேன். இப்போது உனக்கு என்ன வரம் வேண்டும் எனச் சொல், தருகிறேன்.”
“நான் உங்கள் அடியவன் இல்லையே. எப்படி வரம் கேட்பது?”
“அடப்பாவி!”
“நான் உங்கள் பக்தன் இல்லை. உங்களுடன் சேர வேண்டும் என கேட்கவும் உரிமையில்லாத கொத்தடிமை தாயே! நான் இன்னும் ஆயிரம் பிறவிகள் எடுக்க வேண்டும். நீங்கள் விதித்தாலும் பல ஊழிக் காலங்கள் பாழும் நரகில் வாட வேண்டும் என ஆணையிட்டாலும் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு எதற்கு வரமும் வாழைக்காயும்? இனியாவது உங்கள் செயல்களில் தவறு கண்டுபிடித்து உங்கள் மீது கோபிக்கும் கீழான குணம் என்னை அணுகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது போதும்.”
அவள் மறைந்தாள்.
நான் மீண்டும் அறைக்குள் நுழைந்தேன். உதவியாளர் என்னைப் பார்த்து முறுவலித்தாள்.
“தண்ணீர் கிடைத்ததா? எனக் கேட்டார் உறவினர்.
“அமுதமே கிடைத்தது.” என்றேன். அவருக்கு ஏதும் புரியவில்லை.
இன்னும் வருவாள்
தொடர்புக்கு: varalotti@gmail.com

வரலொட்டி ரெங்கசாமி

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X