வரதா வரம்தா... (28)
பிப்ரவரி 18,2020,15:35  IST

அத்திவரதன் கோயில் நோக்கி வேதாந்த தேசிகன் நடந்த போது, அவருக்கு மேலே கருடன் நிழல் விழுமாறு பறந்த காட்சி பலரை வியக்கச் செய்தது. அதே நேரம் அமணர்கள் சிலர் பொறாமையால் வேறு விதமாகவும் சிந்தித்தனர்.
''இந்த தேசிகன் ஒரு மாயாவி.... சித்து வேலையால் ஏமாற்றப் பார்க்கிறார். தான் ஒரு ஞானி என உலகம் நினைக்க வேண்டும் என்பதற்காகவே, கருட வசியத்தால் நிழல் தரும்படி பறக்கச் செய்கிறார்'' என பேசிக் கொண்டனர்.
வேறு சிலர் தங்களுக்குள், ''சுல்தானியர்களால் நாட்டுக்கே ஆபத்து நேர உள்ளது. இவர் தெய்வீகமானவர் என்றால் அவர்களை காஞ்சிபுரத்திற்குள் நுழைய விட்டிருக்க கூடாதல்லவா?''
''தேசிகர் தற்பெருமை பேசியதில்லையே...அப்படியிருக்க எதற்காக இப்படி ஒரு கேள்வி?''
''அதை விடுங்கள். கோயில் ஸ்தானீகர் ஒருவரின் கனவில் வரதன் தோன்றி குளத்தில் மூழ்கிப் போனானாமே... அதற்கு என்ன பொருள் என்று கேட்ட போது தியானத்தில் விடை தேடுகிறேன் என சொன்னாராமே! அதன் பிறகு என்ன விடை கூறினார். யாருக்காவது தெரியுமா?''
இப்படி தேசிகனைக் கண்டவர்களின் மனதில் பலப்பல எண்ணங்கள், கேள்விகள் எழுந்தன.
அத்தி வரதனால் புகழடைந்த காஞ்சியில் இன்று பலவிதமான ஆன்மிக மார்க்கங்கள்!
ஒருபுறம் காமாட்சி, மறுபுறம் ஏகம்பன், இன்னொரு புறத்தில் குமரக்கோட்டம்...இடையே அமணர்களின் பிரம்மக் கோட்டம். இப்போது பாலைவனப் பகுதி கடந்து உள்ளே புகுந்திருக்கும் புதிய மறை மார்க்கம்! இவற்றில் நற்கதி தரவல்லது எது என நாத்திகம் பேசுவோரும் கேட்கத் தொடங்கி விட்டனர். நகரம் என்றால் நாலுமிருக்கும் என்பதற்கு உதாரணமாகி விட்டது காஞ்சி!
இத்தனைக்கும் நடுவில் தான் தேசிகர் கோயிலுக்குள் நுழைந்தார். வெளியில் நல்ல வெயில்! வெற்று காலுடன் படிகளில் ஏறி சன்னதி நோக்கிச் செல்வதற்குள் பொத்துப் போகும் அளவிற்கு வெயில் தாக்கியது.
தேசிகனைக் கண்ட பலரும் அவரைச் சூழ்ந்தனர். வரதன் குளத்தில் இறங்குவது போல கனவு கண்ட ஸ்தானீகரும் அங்கிருந்தார்.
வேதாந்த தேசிகனோ, ''ஏன் உச்சிக்காலத்து பூஜை மணி ஒலிக்கவில்லை'' எனக் கேள்வி எழுப்பினார்.
''காரணமாகத் தான் சுவாமி! இது வரை எந்த அந்நியனும் கோயிலுக்குள் வரவில்லை. கோபுரத்திற்கு வெளியே நின்று பார்த்தபடி போய் விட்டனர். மணிச்சப்தத்தை கவனித்தால் அவர்கள் உள்ளே வரத் தோன்றலாம், எதற்கு வம்பு என்றே கிண்டாமணி இல்லாமல் சன்னதியில் கைப்பிடி மணி ஒலித்து பூஜைகள் நடந்தன'' என்றார்.
''தவறு.. இதைச் சொல்வதில் இருந்தே உமக்குள் பயம் இருப்பது தெளிவாகிறது. எச்சரிக்கை என்னும் பெயரில் நம் வழிமுறைகளை மாற்றத் தேவையில்லை. ஒன்றை மனதில் வையுங்கள்! என்றும் எங்கும் அவன் தான் நம்மைக் காத்து வருகிறான். நாம் அல்ல! அவனருள் இல்லாவிட்டால் நம்மால் நம்மைக் கூட காக்க இயலாது!
உரத்த குரலில் தெரிவித்தார் தேசிகன்.
''மன்னிக்க வேண்டும். காதில் விழுந்த செய்திகள் தாங்கள் கூறுவதற்கு எதிராகவே உள்ளன. விஜயநகரம் அல்லாத பாகங்களைக் கைப்பற்றிய அந்நியர்கள் தங்களின் வழிமுறைகளைப் பின்பற்றச் செய்து வருகிறார்கள் என்பதே உண்மை. விஜய நகரத்தையும் அவர்கள் வீழ்த்தப் போகிறார்களாம். சுல்தானியர்களின் நோக்கம் ஏக பாரதம்! நாட்டின் பல பாகங்கள் அவர்களின் வசமாகி விட்டன. உண்மையைப் பளிச்சென சொல்ல வேண்டும் என்றால் காசி விஸ்வநாதர் கோயில் நம் கையை விட்டு போனதாக தகவல்!''
''இதை எல்லாம் யாமும் அறிவோம். நாடு பிடிப்பது என்பதும், தன் கொடியை அங்கங்கே பறக்க விடுவதும் சக்கரவர்த்திகளின் விருப்பம். சேர, சோழ, பாண்டியர்கள் எல்லாம் கூட இமயம் வரை படையெடுத்து சென்று வடநாட்டை கைப்பற்றிய போது கொடியைத் தான் அங்கு பறக்க விட்டனர். குறிப்பாக சேரன் செங்குட்டுவன் வடநாட்டு மன்னர்களான கனக, விஜயர் தலையில் இமயத்தில் எடுத்த கற்களைச் சுமக்கச் செய்து, அவற்றைக் கங்கையில் நீராட்டி, பின் தலைநகரான கருவூருக்கு சுமந்து சென்று கண்ணகிக்கு சிலையெடுத்த வரலாறு நாம் அறிந்தது தானே?''
''இருந்தாலும் இதெல்லாம் நம் நாட்டுக்குள் தானே நிகழ்ந்தது. கண்டம் விட்டுக் கண்டம் சென்றா நம்மவர்கள் நாடு பிடித்தனர்?''
''வாய்ப்பு இருந்தால் அப்படியும் நடந்திருக்கும். சகரன் என்பவன் பாலைவனத்தை எல்லாம் கடந்து சென்றிருக்கிறான். எனவே, ஆட்சி மாற்றத்தை நடக்கக் கூடாத செயலாக கருதுவதை விடுங்கள். நாம் எப்படி இருத்தல் வேண்டும் என்பதே நமக்கு முக்கியம்''
''தங்கள் பேச்சு கேட்க நன்றாக உள்ளது. ஆனால்...?''
''என்னை நீங்கள் குரு ஸ்தானத்தில் வைத்திருப்பது உண்மையானால் என் பேச்சைக் கேட்டு நடப்பதே சரியாகும். அப்படி நடப்பதாக இருந்தால் தான் பேசுவேன். இல்லாவிட்டால் பேச நான் தயாரில்லை''
வேதாந்த தேசிகரின் பேச்சு அனைவரையும் மவுனத்தில் ஆழ்த்தியது.
''எங்கே நம் கலாசாரம் அழியுமோ என்ற எண்ணமே பயத்திற்கு காரணம்'' என்றார் வைணவர் ஒருவர்.
''அழியாது. எவராலும் அழிக்கவும் முடியாது. பிரம்மன் இதன் ஆதிமூலம்? சூரியன் பின்வழி மூலம்! அவனுக்குப்பின் வைவஸ்த மனுவில் தொடங்கி இட்சவாகு என்பவனால் விண்ணில் இருந்து மண்ணுக்கு கொண்டு வரப்பட்ட நெறி நம் நெறி! பின் அவன் அவதாரமான ராமாவதாரத்தின் போதே விபீஷணர் மூலம் தென்பகுதிக்கும் வந்தது. அதுவே ஸ்ரீரங்கம் என்றானது. இந்த அத்திகிரியும் பிரம்மனால் வந்தது தானே? இது நம் நெறியின் இதயபாகம் போன்றது''
இதைக் கேட்ட ஒருவர், ''சுவாமி! தங்களின் விளக்கம் புத்துணர்ச்சி அளிக்கிறது. அதே நேரம் ஸ்தானீகர் கண்ட கனவிற்காக தியானத்தில் ஆழ்வதாகச் சொன்னீரே! அது என்னாயிற்று? எம்பெருமான் உம் போன்ற ஆச்சார்ய புருஷர்களின் வடிவில் தான் எம்மோடு பேசி வருகிறான். அவன் ஏதும் கூறினானா? அறிய ஆவலாக உள்ளோம்'' என்றார்.
'' ஸ்ரீரங்கம் செல்லக் கட்டளையிட்டிருக்கிறான். அவன் திருவுள்ளம் பற்றி நானும் பயணிக்க உள்ளேன்''
''அப்படியானால் ஸ்தானீகர் கண்ட கனவின் பொருள்...?''
''காலத்தால் அது தெரிய வரும். ஒன்று மட்டும் உறுதி! இக்குளம் இன்று நாமறிந்த ஒன்றாக உள்ளது. நடக்க வேண்டியவைகள் நடந்தால் உலகம் அறிந்த ஒன்றாக மாறும். இது சத்தியமான உண்மை.''
என்றபடியே வேதாந்த தேசிகர் குளக்கரைக்கு சென்றார். சூரியக்கதிர் பட்டதால் குளத்தில் வெள்ளிக் குழம்பு போல நீர்த்திவலைகள். சுற்றியிருந்த அத்தி மரங்களின் ஊடே வளைய வரும் தென்றல் தேசிகனின் மேனியைத் தழுவி அந்த மரங்களைக் காணச் செய்தது.
குளத்தை உற்று நோக்கியவர் மெல்ல நடந்தார். ஒரு அத்தி மரத்தின் நிழலில் புகுந்து அண்ணாந்து மரக்கிளையைப் பார்த்தார். தேசிகனே கிளைகளைப் பார்த்தார். சீடர்களோ அவரைப் பார்த்தபடி நின்றனர்.
''சுவாமி! இன்று தாங்கள் மவுனமாகச் செய்யும் செயல்கள் வியப்பைத் தருகிறது. காரணத்தை அறியலாமா?'' எனக் கேட்டார் வைணவப் பெரியவர் ஒருவர்.
''இந்த அத்திகிரியானின் மூலம் இந்த மரங்களும் கூட.. உண்மையில் ஹஸ்தம் என்ற யானை தான் இதன் மூலம்! இந்த அத்தி மரங்கள் நானும் இந்த மூலங்களில் ஒன்று எனச் சொல்வது போல் தோன்றுகிறது!''
'' தாங்கள் தமிழ், சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர். நம்மாழ்வாரின் திருவாய்மொழியை தினமும் ஒரு வைணவன் வாய்மொழியாக ஒரு பாடலையாவது பாட வேண்டும் என உபதேசித்தவர். தாங்கள் 'ஹஸ்தி, அத்தி' என சமஸ்கிருதமும், தமிழுமாக உங்களின் ஞானத்துடன் கூடி, இவை எல்லாமும் நினைவுக்கு வருகிறது'' என்றார் அந்தப் பெரியவர்.
வேதாந்த தேசிகன் அவரை அருகில் அழைத்தார். அவரது தலையின் மீது தன் கையை வைத்தவர் கண்கள் பனிக்க கண்டார்.
''சுவாமி! தங்களின் நெகிழ்வுக்கு காரணம் அறியலாமா?'' எனக் கேட்டார்.
''ஹஸ்தி, அத்தி' என்னும் சொற்களை சொன்ன மாத்திரத்தில் என்னை நம்மாழ்வார் வரை நினைக்கச் செய்து விட்டீர்கள். கூடுதலாக அவரைத் தொட்டு நான் கூறிய கருத்துகளை எல்லாமும் நினைவூட்டி மகிழ்ச்சியில் ஆழ்த்தினீர்கள். ராமானுஜர், நாதமுனிகள், திருக்குருகைப் பிரான் பிள்ளான், மதுரகவியாழ்வார் அப்புள்ளார் என சகலரையும் நினைக்கச் செய்து விட்டீர்கள். வாழ்க நீர் பல்லாண்டு'' என்றார்.
தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X