கலைத்துறையினர் கவனத்திற்கு...
பிப்ரவரி 20,2020,12:17  IST

ஒருமுறை நாடகம், சினிமாத்துறை சார்ந்த பிரமுகர்கள் பலர் காஞ்சி மகாசுவாமிகளை தரிசிக்க வந்தனர். அப்போது நாடகம், சினிமா குறித்து பேச்சு எழுந்த போது, ''இப்போது நான் சொல்வது என் கருத்துக்கள் அல்ல. நாடக சாஸ்திரங்களில் கூறியுள்ளவைதான். இவற்றை முடிந்த வரை பின்பற்றினால் சமுதாயத்திற்கு நன்மை கிடைக்கும்.
''தற்போது சினிமாவில், நாடகங்களில் புராணக் கதைகளை எடுத்துச் சொல்கிறீர்கள். அதை பார்ப்பவர்களுக்கு புராண ஞானம் வரலாம் என்பதையும் ஏற்கிறேன். ஆனாலும் இந்த ஞானம் சரியானதாக இருக்குமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு.
புராணப் படங்களைப் பார்த்தாலும் அவற்றிலுள்ள நல்லதை விட, கெட்டதே மக்களை சென்றடைகிறது. ஏனெனில் புராணக் கதையை சினிமாவாக ஆக்கும் போது எந்த அளவுக்கு ஜனரஞ்சகமாகப் பண்ணலாம் என்று தானே யோசிக்கிறீர்கள். படம் நீண்ட நாள் ஓடி அதிகம் வசூலாக வேண்டும் இல்லையா? இதனால் புராணத்தின் மூலக்கதை சிதையும் அபாயத்தோடு, இன்னொரு கெடுதலும் நேர்கிறது.
உயர்ந்த, உத்தமமான புராணக் கதாபாத்திரங்களின் குணங்களை ரசிகர்கள் உள்வாங்காமல், குறிப்பிட்ட வேஷத்தில் நடக்கும் நடிகர்களின் குணங்களையே கிரகிக்கத் தொடங்குகிறார்கள்.
புராணத்தில் இடம் பெறும் உத்தம புருஷர்களின் மீது மதிப்பு கொண்ட பெரியவர்களின் சொற்பொழிவை கேட்டால் தான் புராணத்தில் உள்ள தர்மங்கள், நல்ல கருத்துக்களை கிரகிக்க முடியும்.
தாம் சொல்லும் நல்ல விஷயங்களைத் தானே பின்பற்றாத சொற்பொழிவாளர்கள் செய்யும் உபன்யாசமும் பலனளிக்காது.
சாஸ்திரங்களின் வழிகாட்டுதலை பின்பற்றினால் கலைத்துறையினரும் நல்லதைச் செய்ய முடியும். நிஜ வாழ்வில் கணவன், மனைவியாக இருப்பவர்கள், தான் கதாநாயகர், நாயகியாக நடிக்கலாம் என்கிறது! சிருங்காரக் காட்சிகளில் கடுமையான கட்டுப்பாடு வேண்டும் என்றும் சொல்கிறது.
கலைத்துறையினர் இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்'' என்றார் மகா சுவாமிகள்.

உடல்நலம் பெற...
காஞ்சிப்பெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
பொருள்: பரம்பொருளே! எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! மகத்துவம் கொண்டவரே! நீயே நோய்களைப் போக்கி எனக்கு நலம் தர வேண்டும்.

உபதேசங்கள்
* நாடு செழிக்க பசுவை நேசியுங்கள்.
* தாய் மதம், தாய் மொழி, தாய் நாட்டை நேசியுங்கள்.
* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.
* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
* காலையில் எழுந்ததும், மற்றவர்களுக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.
* சாப்பிடும் முன் பறவை, விலங்குகளுக்கு உணவிடுங்கள்.
* தினமும் திருநீறு, குங்குமம் இடுங்கள்.
* உறங்கும் முன், அன்றைய நாளில் செய்த நன்மை, தீமைகளை அலசி ஆராயுங்கள்.

திருப்பூர் கிருஷ்ணன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X